மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தலில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தைத் திறந்து வைத்தார். பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்ததோடு, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், தனது ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்டார். “மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் ஒரு கோடியே 15 லட்சம் மகளிர் பயன்பெற்று வருகின்றனர்.
விடியல் பயணத்திட்டத்தில் 445 கோடி முறை பயணித்த பெண்கள், மாதந்தோறும் 888 ரூபாய் சேமிக்கின்றனர். காலை உணவுத் திட்டத்தில் 16 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகின்றனர். ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண்’ திட்டத்தில் 4 லட்சத்து 18 ஆயிரம் 75 மாணவிகள் பயன்பெறுகின்றனர். இரண்டே ஆண்டுகளில், ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 28 லட்சம் மாணவர்கள் திறன் பயிற்சி பெற்றுள்ளனர்.
இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் 24 லட்சத்து 86 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றிருக்கின்றனர். 2 லட்சம் உழவர்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நம்மைக் காக்கும் 48 திட்டத்தில், 2 லட்சம் பேர் பயன் பெற்றிருக்கின்றனர். முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ், 19 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறது.
மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 3 லட்சத்து 40 ஆயிரம் பேர் பயன்பெற்றிருக்கின்றனர். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடி பேர் பயன் பெற்றிருக்கின்றனர்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசு செயல்படுத்திய திட்டங்களில் பயன்பெற்றவர்களின் எண்ணிக்கையைப் பட்டியலிட்டார்.
‘நீங்கள் நலமா?’ – புதிய திட்டம்
இந்த நிலையில், இந்தத் திட்டங்களின் பயன் மக்களுக்குச் சென்று சேர்கிறதா என்பதைக் கண்காணிக்க, ‘நீங்கள் நலமா?’ என்ற புதிய திட்டத்தை நாளை மறுநாள் 6 ஆம் தேதியன்று சென்னையில் தொடங்கி வைக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.
” ‘நீங்கள் நலமா’ திட்டத்தின் கீழ், நான் உட்பட, அமைச்சர்கள், துறைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் பொதுமக்களைத் தொடர்பு கொண்டு கருத்துக்களைக் கேட்கப் போகிறோம். உங்கள் கருத்துக்களின் அடிப்படையில் அரசின் திட்டங்கள் மேலும் செம்மைப்படுத்தப்படும். முதல் கட்டமாக நலத்திட்டங்கள் பற்றியும் அடுத்த கட்டமாக அரசுத்துறையால் வழங்கப்படும் சேவைகள் பற்றியும் கருத்துக்கள் பெற்று, அதன்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று அவர் கூறினார்.