Amazing Tamilnadu – Tamil News Updates

தமிழகத்தில் 1,000 இடங்களில் ‘முதல்வர் மருந்தகங்கள்’: மலிவு விலையில் கிடைக்கும்!

டந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டில் ஜெனரிக் மருந்துகள், பிற மருந்துகள் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும் வகையில் ‘முதல்வர் மருந்தகங்கள்’ தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ‘முதல்வர் மருந்தகம்’ அமைக்க பி.பார்ம் அல்லது டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் கூட்டுறவுத் துறை மூலம் www.mudhalvar marunthagam.tn.gov.in என்ற இணைய தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதுவரை முதல்வர் மருந்தகம் அமைக்க மொத்தமாக 840 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். ஒருவேளை சொந்த இடமாக இருந்தாலும், அதற்கான சான்றிதழ் மற்றும் சொத்து வரி ரசீது அல்லது மின் இணைப்பு ரசீது உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும். வாடகை இடமாக இருந்தால், உரிமையாளர்களிடம் வாடகை ஒப்பந்தப் பத்திரம் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. கடந்த சில வாரங்களாகவே முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு தரப்பில் செய்தி வெளியிடப்பட்டு வந்தது.

இந்நிலையில், வருகிற 24 ஆம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 33 இடங்களில் முதல்வர் மருந்தகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 2 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு மானியமாக ரூ.3 லட்சம் இரு தவணைகளாக ரொக்கமாகவும்,மருந்துகளாகவும் கொடுக்கப்படும்.

அவர்களுக்கு கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்து கொடுக்கப்படும். அதுமட்டுமின்றி, விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளித்த பின் மானியத் தொகை ரூ.1.50 லட்சம் விடு விக்கப்படும். இதன்பின் ரூ.1.50 லட்சத்தில் மருந்துகள் அளிக்கப்படும்.
அதேபோல் விற்பனைக்கு ஏற்றவாறு ஊக்கத்தொகை வழங்கவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

என்னென்ன மருந்துகள்?

முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான ஜெனரிக் மருந்துகள், தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் எனத் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ராசூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version