Amazing Tamilnadu – Tamil News Updates

டெங்கு, ப்ளூ காய்ச்சல் அதிகரிப்பு… கடைப்பிடிக்க வேண்டியவை என்ன?

ருவ மாற்றம் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு, ப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளே அதிகம் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் தெரியவந்துள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமி தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன், தினமும் அதிகமானோர் சிகிச்சைக்கு வருவதாக மாநில பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதில், டெங்கு மற்றும் ப்ளூ காய்ச்சல் அறிகுறிகளால் மட்டுமே 5,000 பேர் வரை தினமும் சிகிச்சை பெற்றுச் செல்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

கடைப்பிடிக்க வேண்டியவை என்ன?

மிதமான பாதிப்புகள் இருப்பவர்கள், ‘ஆன்ட்டி வைரல்’ மருந்துகளோ, மருத்துவ பரிசோதனைகளோ எடுக்க தேவையில்லை. அவர்கள் ஓய்வெடுப்பதுடன், ஆவி பிடிக்க வேண்டும். துளசி இலை, கற்பூரவல்லி இலை ஆகியவற்றை சாப்பிட்டாலே போதுமானது. அதே நேரம், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு உள்ளவர்கள், டாக்டர் பரிந்துரைப்படி, ‘ஓசல்டாமிவிர்’ என்ற ஆன்ட்டி வைரல் மருந்துகளை எடுத்துக்கொள்வது அவசியம்.

மூச்சு திணறல், ரத்த அழுத்தம் குறைதல், சீரற்ற இதய துடிப்பு, வலிப்பு, சிறுநீர் அளவு குறைதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள், மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. பொது இடங்களுக்கு செல்லும்போது, முகக்கவசம் அணிவது நல்லது எனச் சுகாதாரத் துறை அதிகாரிகள் மேலும் அறிவுறுத்தி உள்ளனர்.

சிக்குன்குனியா, டெங்கு ஆகியவற்றுக்கு நேரடியான ஆன்டிபயாடிக் மருந்துகள் இல்லை. எனவே துணை மருந்துகளே கொடுக்கப்படுகிறது. காய்ச்சல் குணமடைந்த பிறகும் பிறகும் உடல்வலியால் முடங்கி விடுகிறார்கள். மூச்சு திணறல், ரத்த அழுத்தம் குறைதல், சீரற்ற இதய துடிப்பு, வலிப்பு, சிறுநீர் அளவு குறைதல் ஆகிய பாதிப்புகள் இருந்தால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும். காய்ச்சல் இருப்பவர்களோடு நெருக்கத்தை தவிர்க்க வேண்டும்.

பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்றார்கள். சித்த மருத்துவத் துறையினர் கூறும்போது, மிதமான பாதிப்பு இருப்பவர்கள் மருந்துகள் எடுக்க தேவையில்லை. நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். ஆவி பிடிப்பது நல்லது. துளசி இலை, கற்பூரவல்லி இலைகளையும் சாப்பிடலாம் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே அமைச்சர் மா.சுப்பிரமணியன் இது குறித்து கூறுகையில், “இது சீசன் காய்ச்சல்தான் பதற்றப்பட தேவையில்லை. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான மருந்து மாத்திரைகள் உள்ளன. தொடர்ச்சியாக மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version