லண்டனில் அண்ணாமலை… ஹெச். ராஜா கட்டுப்பாட்டில் வந்த தமிழக பாஜக… அதிமுக மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் விமர்சனங்களே அதிமுக உடனான கூட்டணி முறிவுக்கும், எடப்பாடி பழனிசாமி உடனான சமீபத்திய மோதலுக்கும் முக்கிய காரணமாக அமைந்ததாக பாஜக-வினர் கூறி வருகின்றனர்.
இதனால், அவரை தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனக் கோரி, கட்சியில் உள்ள அவருக்கு எதிரான மூத்த நிர்வாகிகள் குழு டெல்லி சென்று கட்சி மேலிடத்திடம் வலியுறுத்தியதாக கூறப்பட்டது. மேலும், வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடனாக கூட்டணி அவசியம் என்றும், அது அண்ணாமலை மாநில தலைவராக இருக்கும் வரை நடக்காது என்றும், எனவே அவரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர்கள் போர்க்கொடி உயர்த்தி வந்தனர்.
இந்த நிலையில் தான், அண்ணாமலை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், சர்வதேச அரசியல் படிப்பை கற்பதற்காக சென்றுள்ளார்.
இந்தப் படிப்புக்கான கால அவகாசம் மூன்று மாதங்கள் என்பதால், அவர் தமிழகத்தில் இல்லாத இந்த சூழ்நிலையைச் சாதகமாக்கிக்கொண்டு, தமிழக பாஜக கூட்டணியில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை இவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் தான், தமிழக பாஜக-வில் கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்க மூத்த தலைவர் ஹெச். ராஜா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் அரண் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை, இங்கிலாந்தில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய 3 மாதங்களுக்கு கல்வி பயிற்சித் திட்டத்தில் கலந்து கொள்கிறார். மாநிலத் தலைவர் இல்லாத நிலையில், கட்சியின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க கட்சியின் தேசியத் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டாவின் வழிகாட்டுதலின்படி குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழுவின் ஒருங்கிணைப்பாளராக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா நியமிக்கப்படுகிறார். குழுவின் உறுப்பினர்களாக மாநில துணைத் தலைவர் எம். சக்கரவர்த்தி, மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளர் எம். முருகானந்தம், மாநில பொதுச் செயலாளர் ராம. சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
இந்த குழு, மாநில உயர்நிலைக் குழுவோடு கலந்தாலோசித்து கட்சி சார்ந்த முடிவுகளை எடுக்கும். குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களும் மாநில தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு மண்டலங்களை கவனித்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக-வில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழு, அதிமுக உடனான மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளுமா என்பது வரும் நாட்களில் தெரிய வரும்!