தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு… 75 சதவீதம் வரை மலிவு விலை!

கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டில் ஜெனரிக் மருந்துகள், பிற மருந்துகள் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும் வகையில் ‘முதல்வர் மருந்தகங்கள்’ தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ‘முதல்வர் மருந்தகம்’ அமைக்க பி.பார்ம் அல்லது டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் கூட்டுறவுத் துறை மூலம் www.mudhalvar marunthagam.tn.gov.in என்ற இணைய தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் மருந்தகங்கள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கூட்டுறவு சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும், தொழில் முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் என மொத்தம் 1000 மருந்தகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் இன்று நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு முழுவதும் மலிவு விலையில் மருந்து வழங்கும் 1,000 முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதாவது சென்னையில் 33 இடங்களிலும், மதுரையில் 52, கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40 என முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மருந்தகத்திற்கு தேவையான மருந்துகள் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இங்கு விற்கப்படும் மருந்துகள் சந்தை விலையிலிருந்து 75 சதவீதம் வரை குறைந்த விலையில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகுந்த பயனடைவர்.
தொழில் முனைவோருக்கு நிதி உதவி
முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு மானியமாக ரூ.3 லட்சம் இரு தவணைகளாக ரொக்கமாகவும்,மருந்துகளாகவும் கொடுக்கப்படும்.
அவர்களுக்கு கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்து கொடுக்கப்படும். அதுமட்டுமின்றி, விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளித்த பின் மானியத் தொகை ரூ.1.50 லட்சம் விடுவிக்கப்படும். இதன்பின் ரூ.1.50 லட்சத்தில் மருந்துகள் அளிக்கப்படும்.
அதேபோல் விற்பனைக்கு ஏற்றவாறு ஊக்கத்தொகை வழங்கவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
என்னென்ன மருந்துகள்?

முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான ஜெனரிக் மருந்துகள், தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் எனத் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ராசூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.