தமிழகத்தில் வறண்ட வானிலை நீடித்து வரும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 100 டிகிரியைத் தாண்டியும் வெயில் கொளுத்துவதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை ஜனவரி மாதம் முடிவுக்கு வந்த பிறகு, வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது. இருப்பினும் வடமாநிலங்களில் இருந்து வீசிய குளிர் அலை காரணமாக தமிழகத்தில் இரவு நேரங்களில் குளிரும், அதிகாலையில் பனியும் நிலவியது. ஆனால் பிப்வரி மாதம் தொடக்கத்தில் இருந்தே வெயில் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. பசிபிக் கடல் மட்டத்தில் நிலவும் எல்-நினோ தாக்கம் காரணமாக பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் இருந்தே தமிழகத்தில் வெயில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
பசிபிக் கடல் மட்டத்தின் வெப்பம் காரணமாக இந்த ஆண்டில் கோடையில் கடும் வெயில் வாட்டி வதைக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி ஈரோடு, நீலகிரி, சென்னை, தர்மபுரி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவள்ளூர், கோவை மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெயில் அதிகரித்து காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அதிகபட்சமாக திருப்பத்தூரில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. சேலம், ஈரோடு, கரூர், வேலூர் மாவட்டங்களில் 100 டிகிரி, திருச்சி, கோவை, தர்மபுரி, மதுரை, மாவட்டங்களில் 98.6 டிகிரி, நிலவியது. பிற மாவட்டங்களில் சராசரியாக 96 டிகிரி வெயில் நிலவியது.
இந்நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் புதுச்சேரியில் பொதுவாக வறண்ட வானிலை நிலவும் என்றும், இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பம் அதிகரித்து காணப்படும். சென்னையில் பொதுவாக வறண்ட வானிலை காணப்படும். 96 டிகிரி வரையில் வெயில் நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கான முன்னெச்சரிக்கை

கடுமையான வெயில் காரணமாக, பொதுமக்கள் நிறைய தண்ணீர் குடிக்கவும். எலுமிச்சை ஜூஸ், மோர் அல்லது லஸ்ஸி போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்களையும், ஒரு சிட்டிகை உப்புடன் பழச்சாறுகளையும் உட்கொள்ள வேண்டும். நேரடி சூரிய ஒளியில் இருந்து விலகி இருப்பதைத் தவிர, நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும் எனத் தமிழக பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் பொதுமக்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது
நன்கு காற்றோட்டமான மற்றும் குளிர்ந்த பகுதிகளில் வீட்டிற்குள் இருங்கள். பகலில் ஜன்னல்கள் மற்றும் திரைச்சீலைகளை மூடி வைக்கவும். இதய நோய்கள் உள்ளவர்கள், கைக்குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வெளிப்புறத் தொழிலாளர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள நோய்கள் உள்ளவர்கள் ஆகியோர் மீது கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும். தனியாக வசிக்கும் முதியவர்கள் அல்லது உடல்நிலை சரியில்லாதவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.