தமிழகத்தில் சாலை விபத்து உயிரிழப்புகளைத் தடுக்க காவல்துறை மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் பலனாக, சாலை விபத்து உயிரிழப்பு 15 சதவீதம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
“தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் (கரோனா காலங்களைத் தவிர்த்து) சாலை விபத்து மரணங்கள் குறைவாக பதிவாகியுள்ளன. பலதரப்பட்ட முயற்சிகளால், 2017-ம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் சாலை விபத்துகள் மற்றும் மரணங்கள் மிகக் குறைவாகவே உள்ளன.
இந்த (2025) ஆண்டின் முதல் காலாண்டில் சாலை விபத்து மரணங்கள் 15 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 4,864 மரணங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், 2025 இல் 4,136 மரணங்களே ஏற்பட்டுள்ளன. 2025-ம் ஆண்டின் முதல் காலாண்டில், போக்குவரத்தையும், சாலை பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்காக, தடுப்பு நடவடிக்கைகள், அவசர சேவைகள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு ஆகிய மாற்றத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இம்முயற்சிகள் உயிரிழப்புகளையும், மரண விபத்துகளையும் 15 சதவீதமாக குறைத்துள்ளன. இது புதிய சாதனையாகும்.
போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 38.4 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 62,523 அதிக வேகம், 83,783 சிவப்பு விளக்கு தாண்டுதல், 1.13 லட்சம் வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துதல், 59,084 குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், 16.56 லட்சம் தலைகவசம் அணியாதது, 1.48 லட்சம் சீட் பெல்ட் அணியாதது, 1.10 லட்சம் உரிமம் இடைநீக்க பரிந்துரைகள் ஆகியவை அடங்கும்.

2,551 விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தக்க நேரத்தில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 9,156 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு இதன் மூலம் 5.71 லட்சம் பொதுமக்களிடம் சென்று அடைந்துள்ளது. போக்குவரத்துச் சட்டங்களை கடுமையாக அமல்படுத்தியதன் விளைவாக 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது, சாலைகளில் சட்டப்பூர்வமான முக்கியத்துவத்தை வலுப்படுத்துகிறது மற்றும் தொடர் விதி மீறலில் ஈடுபடுபவர்களை தடுக்கும் ஒரு வழியாக செயல்படுகிறது.
பாதுகாப்பான சாலை பயணத்தைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் பிற பொது இடங்களில் நடத்தப்பட்டன. இதில் அதிக ஆபத்து உள்ள பகுதிகளில் நேரடி துண்டுப்பிரசுரம் வழங்குதல், வணிக வாகன ஓட்டுநர்களுக்கான குறியிடப்பட்ட பிரச்சாரங்கள் போன்றவை இடம் பெற்றன.
சிறப்பாக பணியாற்றும் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள், 2,551 தீவிரமாக காயமடைந்தவர்களை மீட்டு, அவர்களை உயிர்காக்கும் நேரத்திற்குள் மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லும் பணியில் முக்கிய பங்கு வகித்தன. மொத்தமாக 6,296 பேருக்கு காவல் ரோந்து வாகனங்கள் மூலம் உதவி வழங்கப்பட்டது” என்று தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.