Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

தமிழகத்தில் 10 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு… எந்தெந்த மாவட்டங்கள்?

மிழ்நாட்டில் கத்தரி வெயிலின் தாக்கம் மழையுடன் தொடங்கி, பின்னர் சுட்டெரிக்கும் வெப்பமாக மாறியது. கடந்த மே 16 முதல் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்து வெப்பத்தை தணித்தது. சில பகுதிகளில் அவ்வப்போது கனமழையும் பதிவாகியது.

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை…

இந்த நிலையில், மே 27-ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட தென்மேற்கு பருவமழை, முன்கூட்டியே மே 25-க்குள் கேரளாவில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இது தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் பரவலாக மழையை ஏற்படுத்தும். மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு ஆந்திரா, வட தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மத்திய கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இது மே 23 மாலைக்குள் வடக்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது.

கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

இந்த நிலையில், தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களான கோவை (வால்பாறை), நீலகிரி (கூடலூர்), தேனி, தென்காசி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரியில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சில இடங்களில் 20 செ.மீ வரை மழை பதிவாகலாம் எனவும் கணித்துள்ளார்.

இன்று (மே 22) மதியம் 1 மணி வரை தேனி, தென்காசி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் வாய்ப்பு: தற்போதைய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்தால், அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் மழையை மேலும் அதிகரிக்கலாம்.

Exit mobile version