தென்மேற்கு பருவமழை: முதலமைச்சர் வலியுறுத்திய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

தமிழகத்தில் மே 21 முதல் மே 25 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இலேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று திங்கள்கிழமை 17 மாவட்டங்களிலும், நாளை 12 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் இன்று மிக கனமழையும், நாளை கோவையில் கனமழையும், நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறித்த ஆய்வுக் கூட்டம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கனமழை, வெள்ளம், நிலச்சரிவு, புயல் போன்ற பேரிடர்களை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
“பருவநிலை மாற்றத்தால் புயல், வெள்ளம், கனமழை போன்ற பேரிடர்கள் ஆண்டு முழுவதும் ஏற்படுகின்றன. மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசு மற்றும் அதிகாரிகளுக்கு உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை, நீலகிரியில் நிலச்சரிவு, கடலோர மாவட்டங்களில் புயல் ஆகியவற்றை எதிர்கொள்ள தயாராக வேண்டும்,” எனக் கேட்டுக் கொண்ட அவர், மேட்டூர் அணையில் 108.33 அடி உயரத்தில் 76.06 டிஎம்சி நீர் உள்ளதால், ஜூன் 12 முதல் குறுவை சாகுபடிக்கு நீர் திறக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
முதலமைச்சர் அறிவுறுத்திய முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
மாவட்ட அளவிலான தயார்நிலை:மாவட்ட ஆட்சியர்கள், 24 மணி நேரமும் இயங்கும் அவசரகால செயல்பாட்டு மையங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள், மீட்பு உபகரணங்கள், மற்றும் வாகனங்களின் தயார் நிலையை உறுதிப்படுத்த வேண்டும். பேரிடர் மீட்பு மையங்களில் மின்சாரம், உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் தயாராக இருக்க வேண்டும்.
பேரிடர் மேலாண்மை திட்டம்:பேரிடர் மேலாண்மைத் திட்டம், தகவல் தொடர்பு திட்டம், முதல் நிலை மீட்பாளர்களின் பட்டியல் மற்றும் தொலைபேசி எண்களை சரிபார்க்க வேண்டும்.
சமூக ஊடக கண்காணிப்பு:சமூக ஊடகங்கள் மற்றும் செய்திகளில் மக்கள் எழுப்பும் புகார்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கைகள் மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய ஃபாலோ-அப் செய்ய வேண்டும். மக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.
மின்சார தகவல் பகிர்வு:திடீர் மின்வெட்டு, அறிவிக்கப்பட்ட மின்வெட்டு, மற்றும் மின் பராமரிப்பு பணிகள் குறித்து நுகர்வோருக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்ப வேண்டும். மின்சாரம் மீண்டும் எப்போது வரும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
சாலை பாதுகாப்பு:சாலைப் பணிகளால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, ஆபத்தான பகுதிகளில் தடுப்பு சுவர்கள், வேலிகள், போதிய வெளிச்சம், மற்றும் ஒளிரும் டைவர்ஷன் பலகைகள் அமைக்க வேண்டும்.
உணவு தானிய பாதுகாப்பு:மழையால் நெல் மூட்டைகள் மற்றும் உணவு தானியங்கள் பாதிக்கப்படாமல், சேமிப்பு கிடங்குகளில் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
நீர்நிலை பராமரிப்பு:ஆகாயத் தாமரைகளை அகற்றுவதற்கும், கொசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது.
சென்னை மாநகராட்சி:மழைநீர் வடிகால், நீர்வழி கால்வாய்கள், மற்றும் குளங்கள் மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
வேளாண்மைக்கு, காவிரி கிளையாறுகள் மற்றும் வாய்க்கால்களை தூர்வாரி, கடைமடை வரை நீர் செல்வதை உறுதி செய்யவும், விதைகள், உரங்கள் உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார். “உயிரிழப்பு, பொருட்சேதம் இல்லாமல் பருவமழையை எதிர்கொள்ள, அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,” என வலியுறுத்திய முதலமைச்சர், அரசு ஊழியர்களை முழு முனைப்புடன் பணியாற்ற அழைப்பு விடுத்தார்.