நிதி குறைப்பால் தள்ளாடும் தமிழக ரயில்வே திட்டங்கள்… பட்டியலிடும் முதலமைச்சர் ஸ்டாலின்… கண்டுகொள்வாரா ரயில்வே அமைச்சர்?

த்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டின் பிங்க் புத்தகத்தில் தெற்கு ரயில்வேயின் புதிய வழித் தடங்களுக்கு ரூ. 976 கோடி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், முழு பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ள பிங்க் புத்தகத்தில், அந்தத் தொகை ரூ.301 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இரட்டை ரயில் பாதை திட்டங்களுக்கு ரூ 2,214 கோடி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது ரூ. 1,928 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உட்பட தமிழக அரசியல் கட்சியினர் பலர் அண்மையில் குற்றம்சாட்டி இருந்தனர்.

விவகாரத்தை கையிலெடுத்த முதலமைச்சர்

இந்த நிலையில், இந்த விவகாரத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தற்போது கையிலெடுத்துள்ளார். இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில், 2024-2025 நிதியாண்டில் வழக்கமான ரயில்வே பட்ஜெட்டில், தெற்கு ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறிப்பிடத்தக்க அளவிற்குக் குறைந்திருப்பதால், அதன் விளைவாக தமிழ்நாட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இரட்டைப் பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்குப் போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில், 2024-2025 நிதியாண்டுக்கான இந்திய ரயில்வே-க்கான வழக்கமான பட்ஜெட்டில், சில கணக்குத் தலைப்புகளின்கீழ் தெற்கு ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாகவும், அதே ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைவு என்றும் குறிப்பிட்டுள்ளார். கணக்குத் தலைப்பு 11-புதிய பாதைகள் என்பதன்கீழ் இடைக்கால ஒதுக்கீடாக 976.1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கமான பட்ஜெட் ஒதுக்கீட்டில் வெறும் 301.3 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றும், கணக்குத் தலைப்பு 15-இரட்டைப் பாதையாக்கல் என்பதன் கீழ் இடைக்கால ஒதுக்கீடாக 2,214.4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கமான பட்ஜெட் ஒதுக்கீட்டில் 1,928.8 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.

தமிழக திட்டங்கள் பாதிக்கப்படும்

மேலும், புதிய வழித்தடத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டில் ரூ.674.8 கோடி அளவிற்கு அதிரடிக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பல முக்கியத் திட்டங்களின் முன்னேற்றம் கடுமையாக பாதிக்கப்படும் எனக் குறிப்பிட்டு, அந்த வகையில், திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை, திண்டிவனம்- நகரி, அத்திப்பட்டு-புத்தூர், ஈரோடு-பழனி, சென்னை-கடலூர்-மகாபலிபுரம், மதுரை- தூத்துக்குடி (வழி-அருப்புக்கோட்டை), ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி-இருங்காட்டுக் கோட்டை-ஆவடி-ஸ்ரீபெரும்புதூர் ஆகிய ஏழு முக்கிய திட்டங்கள் பாதிக்கப்படும் என முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், இரட்டைப் பாதைத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை 285.64 கோடி ரூபாய் அளவிற்குக் குறைத்திருப்பது. தமிழ்நாட்டில் மிகவும் அத்தியாவசியமாக உள்ள இரட்டைப் பாதை திட்டங்களைச் செயல்படுத்துவதை நிச்சயம் தாமதப்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அந்த வகையில், விழுப்புரம்- திண்டுக்கல், திருவள்ளூர்-அரக்கோணம் (4-வது லேன்), ஒமலூர்-மேட்டூர் அணை, திருவனந்தபுரம்-கன்னியாகுமரி, மதுரை-மணியாச்சி-தூத்துக்குடி, மணியாச்சி-நாகர்கோவில், சேலம்-மேக்னசைட் சந்திப்பு-ஓமலூர், காட்பாடி-விழுப்புரம், சேலம்-கரூர்-திண்டுக்கல், ஈரோடு-கரூர், சென்னை கடற்கரை-சென்னை எழும்பூர், அரக்கோணம் யார்டு சாலை 1 மற்றும் 2-க்கு, 3 வது மற்றும் 4 வது வழித்தடம் இணைப்பு போன்ற திட்டங்கள் பாதிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரயில்வே அமைச்சர் தலையிடுவாரா?

மேலும், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் தொடர்பாக தெற்கு ரயில்வேயில் நிலுவையில் உள்ள முக்கிய பிரச்னைகள் குறித்து எடுத்துரைக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், குறிப்பாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், மின்சாரப் பேருந்து சேவைகள், பெருந்திரள் துரித ரயில் போக்குவரத்துத் திட்டத்தை மாநில அரசிடம் ஒப்படைப்பது போன்ற பணிகள் எவ்வித தாமதமும் இன்றி விரைவுபடுத்தப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, அப்பணிகளின் விவரங்களை தனது கடிதத்தில் விவரித்துள்ளார்.

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இருவழிப்பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டுமென ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை கேட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்த முக்கியத் திட்டங்களை மேலும் தாமதப்படுத்தக் கூடாது என்றும், இது தொடர்பாக ரயில்வே துறை அமைச்சர் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்றும் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

முதலமைச்சரின் இந்த கடிதத்துக்கு ரயில்வே அமைச்சரோ அல்லது அமைச்சக அதிகாரிகளோ எத்தகைய விளக்கம் அல்லது பதிலை அளிக்கப்போகிறார்கள் என்பதை தமிழக மக்கள் எதிர் நோக்கி உள்ளனர். சாதகமான பதில் வருமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Integrative counselling with john graham. Petersburg, russia) – a stunning collection of over 3 million items, including works by rembrandt, da vinci, and michelangelo.