Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

தமிழ்நாடு 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி முழு விவரங்கள்..!

மிழ்நாட்டில் 10,11,12 ஆம் வகுப்பு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 3 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. தேர்வு தேதிகள் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் குறித்த முழு விவரங்கள் இங்கே…

12 ஆம் வகுப்பு

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவர்களுக்கான செய்முறை தேர்வு கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12 ஆம் வகுப்பு தேர்வினை 7518 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்களும், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகளும், 18,344 தனித்தேர்வர்களும், 145 சிறைவாசிகள் என 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் 3316 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர். இவர்களுக்கான தேர்வு பணிகளை கண்காணிக்க 4,470 பறக்கும் படைகளும் 43,446 தேர்வு கண்காணிப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

11 ஆம் வகுப்பு

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 5ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவர்களுக்கு செய்முறை தேர்வு மார்ச் 15ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வினை 7557 பள்ளிகளில் படித்த 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்களும், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 மாணவிகளும், 4755 தனித்தேர்வர்களும், 137 சிறைவாசிகள் என 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 பேர் 3316 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர். இவர்களுக்கான தேர்வினை கண்காணிக்கும் பணியில் 4,470 பறக்கும் படையினரும் 44,236 தேர்வு கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

10 ஆம் வகுப்பு

அதேபோல் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெறுகிறது. இவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வினை 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும், 25,888 தனித்தேர்வர்களும், 272 சிறைவாசிகள் என 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர். இவர்களுக்கு தேர்வு எழுத 4,113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இவர்களுக்கான தேர்வு பணியினை கண்காணிக்க 4858 பறக்கும் படைகளும் 48,426 தேர்வு கண்காணிப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு முடிவுகள் எப்போது?

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 9ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதியும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது எனத் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Exit mobile version