வேளாண் பணி: மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு டிரோன் பயிற்சி!

பயிர் சாகுபடியில், ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் முறை தற்போது பரவலாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்படும் விவசாயத்தில் பெரும்பாலான பணிகளை பெண்களே செய்து வருகின்றனர்.
இதனை கருத்தில்கொண்டு தற்போது தமிழ்நாடு அரசானது, மத்திய அரசின் பங்களிப்புடன் ஆளில்லா பறக்கும் வாகனம் மூலம் பயிர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும் தொழில் நுட்பத்தினை சுய உதவிக்குழு மகளிரிடையே அறிமுகப்படுத்தியுள்ளது.இதற்கான பயிற்சி தமிழக அரசின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பயிற்சி பெற்ற மகளிரை, அந்தந்த மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் உழவர் செயலி மூலம் தொடர்பு கொண்டு சேவையை பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விவசாய பணிகளில் வழக்கமாக பயன்படுத்தும் மருந்து தெளிப்பான்களோடு ஒப்பிடும்போது ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பது மருந்தின் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்கிறது. தற்போது கிராமப்புறங்களில் வேலையாட்கள் கிடைப்பது குறைந்து வரும் நிலையில், ட்ரோன் மூலம் குறைந்த நேரத்தில் அதிகமான பரப்பளவில் மருந்து தெளிக்க முடிகிறது. மேலும் இம்முறையில் வழக்கமாக மருந்து தெளிப்பதற்கு பயன்படுத்தும் தண்ணீரின் அளவும் குறைவாகவே இருக்கும்.
இதனால் வேலைப்பணி குறைந்து சாகுபடி செலவும் கணிசமாக குறைவதால் விவசாயிகள் அதிக வருவாய் பெற முடிகிறது. அந்தவகையில் மத்திய அரசின் பங்களிப்புடன் ட்ரோன் மூலம் பயிர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும் தொழில்நுட்பத்தை சுய உதவிக் குழு மகளிரிடையே தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ட்ரோன் தொழில்நுட்பத்தை சுய உதவிக் குழு மகளிருக்கு கற்றுக்கொடுப்பதற்காக ட்ரோன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின்படி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் சுய உதவிக் குழுக்களில் இருந்து முதல்கட்டமாக 28 மாவட்டங்களைச் சேர்ந்த 44 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ட்ரோன் இயக்குவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பயிற்சி பெற்ற பெண்களுக்கு ட்ரோன் இயக்குவதற்கான உரிமத்துடன், ட்ரோன்களும் வழங்கப்பட்டுள்ளன. இவர்களது விவரங்கள் உழவர் கைபேசி செயலியில் உள்ள இயந்திர உரிமையாளர்கள் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதன்மூலம் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள், அந்தந்த மாவட்டங்களில் ட்ரோன் இயக்குவதற்காக பயிற்சி பெற்றுள்ள மகளிரை தொடர்பு கொண்டு, ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் சேவையை பெற்றுக்கொள்ளலாம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.