Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

‘நான் உங்களுக்கு உதவலாமா?’ – ஆரம்ப சுகாதார நிலையங்களில் உதவி மையம்!

மிழகத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், சமுதாய சுகாதார நிலையங்கள் என, 13,527 சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் சேவை, கர்ப்பக் கால முன்கவனிப்பு, பிரசவம், தொற்று நோய்கள் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நோயாளிகளுக்கு உரிய முறையில் வழிகாட்ட, வரவேற்பு மையம் அமைத்து, ‘நான் உங்களுக்கு உதவலாமா’ என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் அரசு அறிவுறுத்தி உள்ளது.

‘நான் உங்களுக்கு உதவலாமா’ என்ற வரவேற்பு மையத்தில் நியமிக்கப்படுபவர், நோயாளிகளின் நிலையை அறிந்து, அவர்களுக்கு வழிகாட்டுனராக இருக்க வேண்டும். மேலும், நோயாளிகளுடன் அக்கறையுடனும், நட்புடனும் பழகக்கூடியவராகவும் இருக்க வேண்டும்.

காத்திருப்பு அறை, குடிநீர் வசதி, கழிப்பறை உள்ளிட்டவை இருப்பதுடன், நோயாளிகள் அமருவதற்கான வசதி, ‘வீல் சேர்’ ஆகியவற்றுடன், சாய்வுதள வசதியும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நோயாளிகளுக்கு குறை இருந்தால், அதை தெரிவிப்பதற்கான, புகார் பெட்டிகள் வைக்க வேண்டும். மேலும் வரும் நோயாளிகளுக்கு உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார்.

முன்னதாக, கடந்த 2014 ஆம் ஆண்டிலேயே சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு, அதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.‘நான் உங்களுக்கு உதவலாமா’மையத்தில் நியமிக்கப்படுபவர்களுக்கு நோயாளிகளிடம் கனிவாகப் பேசி வழிகாட்டுவது குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

Exit mobile version