மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு: ஒன்றிணைந்த தமிழக அரசியல் கட்சிகள்!

தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்டவற்றை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தினால்தான், தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தர முடியும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ள கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
“தேசியக்கல்வி கொள்கையின்படி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தங்களது தாய்மொழி மற்றும் ஆங்கிலம், அதனைத் தொடர்ந்து 3 ஆவது மொழியாக இந்தியையும் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால் தமிழ்நாடு மட்டும் இதனை ஏன் ஏற்க மறுக்கிறது? விதிகளின்படி 3 ஆவது மொழியை ஏற்க வேண்டும். ஏற்க முடியாது என்று சொல்வது தவறு. அதனை ஏற்கும் வரை விதிகளின்படி, தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க முடியாது’ என்று அவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அளித்த பேட்டியைத் தொடர்ந்து 1960 களில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களை நினைவு கூர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த பிரச்னையில் பாஜக-வைத் தவிர்த்து ஏறக்குறைய தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுமே ர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ள கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
“They have to come to the terms of the Indian Constitution” என்கிறார் ஒன்றியக் கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை ‘rule of law’ என்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா?
மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல! ” மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது” என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்! எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்.”

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
மும்மொழிக் கொள்கையை ஏற்று இந்தி மொழியைக் கற்பிக்காவிட்டால் கல்வித்துறைக்கான நிதியைத் தமிழ்நாட்டுக்குத் தரமாட்டோம் என்று மத்திய அரசின் கல்வி அமைச்சர் சொன்னது ஆணவத்தின் உச்சம். அவருக்குத் தமிழ்நாட்டின் வரலாறும் தெரியாது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளும் தெரியாது, அரசியல் சாசனம் உருவாகிய வரலாறும் தெரியாது என்பவற்றை அவருடயை ஆணவப் பேச்சு காட்டுகிறது
மாநில அரசின் மொழிக்கொள்கையை வகுப்பது மாநில மக்களின் உரிமை, மாநில் அரசின் உண்மை. இந்தி பேசும் மாநிலங்களில் ஒரு மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படுகிறது என்பது அவருக்குத் தெரியுமா? இந்தி பேசாத மாநிலங்களுக்கு ஜவஹர்லால் நேரு அவர்களும் இந்திரா காந்தி அவர்களும் தந்த உறுதிமொழிகளையாவது அவருக்குத் தெரியுமா? நாடாளுமன்றம் அனுமதித்த நிதியை இந்தி மொழியைக் கற்பிக்காத மாநிலத்திற்கு தரமாட்டோம் என்று கல்வி அமைச்சர் சொல்வது நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகும் என்று அவருக்குத் தெரியுமா? தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருந்து இந்த ஆணவப் பேச்சுக்கு முடிவு கட்ட வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் இருக்கும் ஆட்சியாளர்களை பார்க்காதீர்கள். மக்களைப் பாருங்கள். மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை கடைபிடித்தால்தான் நிதியை ஒதுக்குவோம் என்று சொல்வதும், மும்மொழி கொள்கையை ஏற்க நிர்பந்திப்பதும் சரியல்ல. தமிழ்நாட்டில் என்றுமே இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படும். அதில் எந்த மாற்றமும் கிடையாது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
தர்மேந்திர பிரதான் கூற்றுப்படி சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் 2024 – 25க்கு வழங்க வேண்டிய ரூ. 2,152 கோடியை ஒன்றிய கல்வித்துறை வழங்க மறுத்து வருகிறது. இதனால் தமிழகத்தில் அத்திட்டத்தினால் பயன்பெறுகிற 40 லட்சம் மாணவர்களும், 32 ஆயிரம் ஆசிரியர்களும் ஊதியம் பெற முடியாமல் இருக்கிற அவல நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களையும் சமமாக கருத வேண்டிய ஒன்றிய பாஜக அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துவது மிகப்பெரிய அநீதியாகும். இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாகும். இதை ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு முறியடிப்பார்கள்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழித் திட்டத்தை மத்திய அரசு திணிப்பதாலே தமிழக அரசு அதை கடுமையாக எதிர்க்கிறது. மாநில அரசுகளின் உரிமையை நசுக்க நினைப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது.
விசிக தலைவர் திருமாவளவன்
தேசியக் கல்விக் கொள்கையை காரணம் காட்டி தமிழகத்துக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துவது மிரட்டல் நடவடிக்கையாகும். இந்த போக்கை மத்திய அரசு கைவிடாவிட்டால் தமிழக மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்.
பாமக தலைவர் அன்புமணி
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் நிதி வழங்கப்படும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு மதிக்க வேண்டும்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா
தமிழகத்தில் மும்மொழி கல்வியை மத்திய அரசு கட்டாயப்படுத்துவது ஏற்புடையதல்ல. இவ்விவகாரத்தில் மாற்றான் போக்கு எண்ணத்தோடு மத்திய அரசு செயல்படுவது மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும்.

தவெக தலைவர் விஜய்
மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன. மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்துக்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பது ஜனநாயகத்துக்கு எதிரான பாசிச அணுகுமுறையாகும்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
இந்தி பேசுபவர்கள் தான் இந்திய குடிமக்கள் என்றால், அப்போ நாங்கள் எல்லாம் யார்? ஆளுகின்ற தலைமை இறைவன் போல் பொதுவாக இருக்க வேண்டும். காற்று, மழை, சூரிய ஒளி போல் இருக்க வேண்டும். மொழி, மதம், மாநிலம் பார்த்து தங்களை ஆட்சியில் அமர்த்திய கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு தேர்த்ல் வெற்றி கருதி ஒருதலை பட்சமாக செயல்பட கூடாது. இந்தி மொழியை ஒருகிணைத்த மொழியாய் ஆக்க வேண்டும். இந்தியாவில் அனைவரும் இந்தி கற்க வேண்டும் என அவசியமில்லை. ஆனால், அதை அவசியமாக்கி, திணிப்பதால் தேசப்பற்று வராது. ஆனால், மத்திய அரசு இந்தியை அனைத்து மாநிலத்திற்கும் திணித்து தேசப்பற்றை உருவாக்க நினைக்கின்றனர். இதே ஆட்சி தொடர்ந்தால், 100-வது சுதந்திர தினம் வரை இந்திய நாட்டை வைத்து இருப்பீர்களா? என தெரியவில்லை.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழகத்தை மிரட்டுகிறார்கள். தமிழகத்தை சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம். இதற்கு சுதந்திரத்துக்கு பிறகான தமிழகத்தின் வரலாற்றை படித்தாலே புரியும். தலைக்கனம் காட்ட வேண்டாம்.
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி
மத்திய அமைச்சர் பேசுவது வெளிப்படையான மிரட்டல். தமிழக மாணவர்களின் கல்வியோடு விளையாடுவது தான் பாஜகவின் அரசியலா, தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் செயல்களை பாஜக அரசு நிறுத்தாவிட்டால் தமிழ் மக்களின் போராட்டக் குணத்துக்கு பதில் சொல்ல நேரிடும்.
அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திமுக பதிலடி
இந்த நிலையில், திமுக-வின் குற்றச்சாட்டை மறுத்தும், மத்திய அரசின் நிலைப்பாட்டை நியாப்படுத்தியும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துகளும், அதற்கு திமுக தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள பதிடியும் வருமாறு:
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

முதல்வர் உட்பட தமிழக அமைச்சர்களின் மகன், மகள், பேரன் பேத்திகள் படிக்கும் தனியார் பள்ளிகளில் மும்மொழிகள் பயிற்றுவிக்கலாம். ஆனால் தமிழக அரசு பள்ளிகளில் மூன்றாவது ஒரு மொழியை கற்பிக்கக் கூடாதா, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை. உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இன்னும் 1960-ல் காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது நியாயமல்ல.
முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக் கல்வியை தான் ஊக்குவிக்கிறது. தமிழகத்தில் பல தனியார் பள்ளிகள் மும்மொழி கல்வியை பின்பற்றும் நிலையில், அரசு பள்ளி மாணவர்கள் ஏன் கூடுதலாக ஒரு மொழியை கற்றுக்கொள்ளக் கூடாதா. இதற்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும்.
திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா
“சிபிஎஸ்இ பள்ளிகள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பவை என்கிற குறைந்தபட்ச அறிவாவது இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் விரும்புபவர்கள் இந்தி கற்றுக்கொள்ள எந்தத் தடையும் இல்லை.
இந்தித் திணிப்பைத் தான் தமிழ்நாடு எதிர்க்கிறது. ஒவ்வொரு இந்தியருக்கும் மும்மொழி தேவை என்கிற எண்ணம் பாஜகவுக்கு இருந்தால், பாஜக ஆளும் வட இந்திய மாநிலங்களில் மக்கள் எந்த மூன்றாவது மொழியைப் படிக்கிறார்கள்? எத்தனை மாநிலங்களில் மூன்றாவது மொழியாக தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது? தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு நடத்தும் பள்ளிகளில் ஏன் தமிழ் ஆசிரியர்கள் இல்லை?
தமிழர்கள் இந்தி படிக்க வேண்டும் என்பதை நேரடியாக சொல்ல முடியாமல் மும்மொழிக் கொள்கை என்கிற பெயரில் பாஜக ஆடும் நாடகம் தமிழ்நாட்டில் உள்ள சாமானிய மக்களுக்குக் கூட நன்கு புரியும். மொழித்திணிப்புக்கு எதிராக நிற்பது காலாவதியான கொள்கை அல்ல. மாநில உரிமை காக்கும் மகத்தான கொள்கை. நாவடக்கத்தோடு பேசுங்கள்!”