தமிழக ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் எழுப்பிய 12 கேள்விகள்… முழு விவரம்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்குகள் மீது உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரம் மற்றும் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக இரண்டு வெவ்வேறு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான அனைத்து வழக்கையும் விசாரித்த உச்ச நீதிமன்றம் வாதங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 10 ஆம் தேதி ஒத்திவைத்திருந்தது. மேலும் வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக 12 கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ளது. அது குறித்த விவரம் உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த 12 கேள்விகள் விவரம் வருமாறு:
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி, பின்னர் மீண்டும் அந்த மசோதா திருத்தங்களுடனோ அல்லது திருத்தங்கள் இல்லாமலோ நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டால், அதனை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைக்க முடியுமா? அதற்கான அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதா?.
குடியரசுத் தலைவருக்கு மசோதாவை அனுப்பி வைக்க ஆளுநர் முடிவெடுத்தால் அது அனைத்து மசோதாக்களுக்கும் பொருந்தக் கூடியதா? அல்லது குறிப்பிட்ட மசோதாக்களுக்கு மட்டுமா?
அதேப்போன்று ஆளுநருக்கான தனிப்பட்ட அதிகாரத்தின் செயல் பாடுகள் என்றால் என்ன. அது முன்னதாக விவரிக்கப்பட்ட அரசியல் சாசன பிரிவுகள் 111, 200 மற்றும் 201ன் மூலம் உறுதி செய்யப்படுகிறதா?.
அரசியல் சாசன பிரிவு 200ன் கீழ் ஆளுநர் என்பவர் அமைச்சரவையின் ஆலோசனையைக் கேட்டு தான் நடக்க வேண்டுமா அல்லது அவர் தன்னிச்சையாக முடிவுகளை மேற்கொள்ள முடியுமா?.
சட்டப்பேரவை ஒரு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கிறது. ஆனால் ஆளுநர் அதை நிறுத்தி வைத்தால் அதே மசோதாவை மீண்டும் சட்டப்பேரவை நிறைவேற்றி ஆளுநரிடம் சமர்ப்பிக்கும் போது ஆளுநர் அந்த மசோதாவை என்ன செய்ய முடியும்.அரசியல் சாசனப் பிரிவு 200ன் அடிப்படையில் மசோதாக்களின் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு கால நிர்ணயம் ஏதேனும் குறிப்பிடப்பட்டுள்ளதா?

மறுமுறை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தால் மசோதாவுக்கான ஒப்புதலை கட்டாயம் வழங்க வேண்டுமா அல்லது அதற்கான அவசியம் கிடையாதா?
அரசியல் சாசன பிரிவு 200ன் கீழ் நான்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா?
குறிப்பிட்ட அந்த மசோதாக்களை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பதற்கு ஆளுநருக்கு என்று எத்தகைய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சட்டப்பேரவை மூலம் நிறைவேற்றப்பட்டு மசோதா ஆளுநரிடம் இருந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் போது, குடியரசுத் தலைவர் ஒன்றிய அரசின் கீழ் செயல்பட்டாலோ அல்லது அவர்களது பரிந்துரையின் அடிப்படையில் மசோதா நிராகரிக்கப்பட்டால், அரசியல் சாசனத்தின் எந்த விதிகளின் அடிப்படையில் விஷயத்தை கையாள முடியும்?
குடியரசுத் தலைவர் மசோதாவை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி சட்டப்பேரவையை முடிவெடுக்க அறிவுறுத்துமாறு ஆளுநரை கேட்டுக்கொள்கிறார் என்றால், அதே மசோதாவை ஆளுநர் மீண்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க முடியுமா?

அரசியல் சாசன பிரிவு 200ன் கீழ் ஆளுநர் தனது விருப்பத்தின் படி முடிவெடுத்து செயல்பட முடியுமா அல்லது முடியாதா?
இந்த 12 கேள்விகளுக்கும் வழக்கில் தொடர்புடைய அனைவரும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.