ஆளுநருக்கு எதிரான போராட்டம்: ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி ஆதரவு!

மத்திய அரசு, ஆளுநருக்கான அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தி, எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநில அரசுகளை பலவீனப்படுத்துவதாகக் கூறப்படும் விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு
தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்க மறுத்ததை அடுத்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாநில ஆளுநர்களால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு மூன்று மாதங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும், மசோதா மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கும் 3 மாத கெடு விதித்து உத்தரவிட்டிருந்தது.
குடியரசுத் தலைவரின் கேள்வி
இதனையடுத்து, மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர்கள் அல்லது குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பதற்கு காலக்கெடு விதிக்க முடியுமா என்று உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் தெளிவுபடுத்த கோரியிருந்தார்.
மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்
இந்த நிலையில், மத்திய அரசு தான் குடியரசுத் தலைவரின் மூலம் உச்சநீதிமன்றத்தில் இந்த கேள்வியை எழுப்ப வைத்ததாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை மாற்றுவதற்கான மறைமுக முயற்சி என்றும் குற்றம் சாட்டி இருந்தார்.
“ஆளுநரின் செயல்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும், பாஜக தலைமையிலான மத்திய அரசு தமிழ்நாடு மக்களின் ஆணையை சீர்குலைக்க முயல்வதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தின் 143-வது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றத்தில் தற்போது எழுப்பப்பட்டுள்ள கேள்வி, ஏற்கனவே தீர்க்கப்பட்ட சட்ட நிலைப்பாட்டை மாற்றி, ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலதாமதத்தை அனுமதிக்கும் முயற்சி” என்று அவர் கூறி இருந்தார்.
மேலும், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஆளுநர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு மத்திய அரசின் முகவர்களாக செயல்படும் ஆளுநர்களைப் பயன்படுத்தி, அவற்றை பலவீனப்படுத்துவதற்கான ஆபத்தான முயற்சி,” என்றும் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
ராகுல் காந்தி ஆதரவு
இந்த நிலையில், ஸ்டாலினின் இந்த கருத்தை ஆமோதித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார். “இந்தியாவின் வலிமை அதன் பன்முகத்தன்மையில் உள்ளது — மாநிலங்களின் ஒன்றியம், ஒவ்வொரு மாநிலமும் தனித்தன்மையான குரலைக் கொண்டவை. மோடி அரசு, ஆளுநர்களை தவறாகப் பயன்படுத்தி அந்த குரல்களை அடக்கி, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை தடுக்கிறது. இது கூட்டாட்சிக்கு எதிரான ஆபத்தான தாக்குதல், இதை எதிர்க்க வேண்டும்,” என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் விவகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே பாஜக ஆளாத மற்ற மாநில முதலமைச்சர்களிடமிருந்து ஆதரவு திரட்டி, மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியிடமிருந்தும் ஸ்டாலினுக்கு கிடைத்துள்ள இந்த ஆதரவு, அவருக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது எனத் திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.