தமிழ் பாடத்தில் பீகார் மாணவியின் சாதனை… “தமிழ்நாடு – எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை!”

சென்னையை அடுத்த கவுல் பஜாரில் உள்ள தமிழக அரசுப் பள்ளியில் பயின்ற பீகாரைச் சேர்ந்த மாணவி ஜியா குமாரி, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 மதிப்பெண்களில் 467 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். குறிப்பாக, தமிழ் பாடத்தில் 100க்கு 93 மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டின் கல்வி முறையும், அரசின் திட்டங்களும் தனது வெற்றிக்கு முக்கிய காரணம் என ஜியா பெருமையுடன் கூறி உள்ளார்.
17 ஆண்டுகளுக்கு முன், கல்வி வாய்ப்புக்காக பீகாரிலிருந்து தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்த ஜியாவின் குடும்பம், சென்னையில் வாழ்க்கையைத் தொடங்கியது. ஜியாவின் தந்தை வெல்டிங் வேலை செய்கிறார்; தாயார் மருத்துவ நிறுவனத்தில் பணிபுரிகிறார். வீட்டில் இந்தியே பேசப்பட்டாலும், ஜியா தமிழ் மொழியை கற்று அதில் தேர்ச்சி பெற்றார்.
ஆரம்பத்தில் தமிழ் கற்பது சவாலாக இருந்தாலும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலும், பள்ளியின் சிறப்பு வகுப்புகளும் அவருக்கு உதவின. “போகப்போக தமிழ் பழகிவிட்டது. ஆசிரியர்கள் அதிக மதிப்பெண் பெற உறுதுணையாக இருந்தனர்,” என ஜியா தெரிவித்துள்ளார்.

‘கைகொடுத்த நான் முதல்வன் திட்டம்’
” பள்ளியில் வழங்கப்பட்ட புத்தகங்கள், காலணிகள், சிஜி வகுப்புகள் மற்றும் தினசரி சிறப்பு கற்பித்தல் எனது கல்வி பயணத்தை மேம்படுத்தின. ‘நான் முதல்வன் திட்டம்’ என்னை மிகவும் கவர்ந்தது. இதன் மூலம் தான் இவ்வளவு மதிப்பெண்கள் பெற முடிந்தது” என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் கல்வி முறை மற்றும் அரசு திட்டங்களையும் அவர் பாராட்டி உள்ளார்.
ஜியாவின் கனவு மருத்துவராவது. 11ஆம் வகுப்பில் உயிரியல்-கணிதப் பிரிவைத் தேர்ந்தெடுத்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவர் ஆக வேண்டும் என அவர் உறுதி கொண்டுள்ளார். “தமிழ்நாட்டில் இருந்து ஏதாவது சாதிக்க வேண்டும். பட்டம் பெற்று அல்லது மருத்துவராகி மட்டுமே பீகாருக்கு திரும்ப வேண்டும் என அப்பா சொல்லியிருக்கிறார்,” என ஜியா உருக்கமாகக் கூறினார்.
பீகாரில் கல்வி வாய்ப்புகள் குறைவாக இருந்ததால், தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்த அவரது குடும்பம், இங்கு கிடைத்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி முன்னேற்றம் கண்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

ஜியாவின் இந்த சாதனை குறித்த செய்தியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, “தமிழ்நாடு – எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை!” என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில் ஜியாவின் வெற்றி, தமிழ்நாட்டின் கல்வி முறையின் சிறப்பையும், வெளிமாநில மாணவர்களுக்கு இங்கு கிடைக்கும் வாய்ப்புகளையும் உலகிற்கு எடுத்துரைப்பதாக உள்ளது என்கிறார்கள் கல்வியாளர்கள்!