பிற மாநிலங்களுக்குப் போகும் தமிழக கல்வி நிதி… முதல்வர் குற்றச்சாட்டின் பின்னணி என்ன?

மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டில் அறிவித்த புதிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கடந்த 2021 ஆம் ஆண்டின் தாக்கல் முதல் பட்ஜெட் தாக்கல் செய்தபோதே அறிவித்துவிட்டார். இதனால், புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்க மறுத்து வருகிறது.
2024-25 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீட்டின்படி, ‘சமக்ரா சிக்ஷயா அபியான்’ திட்டத்திற்கு ரூபாய் 3,586 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் 60 சதவிகித தொகையான ரூபாய் 2,152 கோடி மத்திய அரசின் பங்காகவும், 40 சதவிகித தொகையான ரூபாய் 1,434 கோடி மாநில அரசின் பங்காகவும் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இதை நான்கு தவணைகளில் மத்திய அரசு விடுவிக்க வேண்டும்.
ஆனால், தொடர்ந்து விடுவிக்காமல் இருந்து வந்தது. உடனடியாக நிதியை விடுவிக்குமாறு பலமுறை கடிதங்கள் மாநில அரசால் எழுதப்பட்டது. இதனால் 8 லட்சம் மாணவர்கள் படிக்கிற மாநில கல்வித்துறை கடும் பொருளாதார மற்றும் நிர்வாக நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. ஏறத்தாழ 15,000 ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் சிக்கலை சந்திக்க வேண்டி இருப்பதாக தமிழக அரசு கூறிவந்தது.
அதேபோல, கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவிகித ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேருகிற ஏழை,எளிய மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத நிலையும் ஏற்பட்டிருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருவதாக திமுக உட்பட பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டி இருந்தன.
பிற மாநிலங்களுக்குப் போகும் தமிழக கல்வி நிதி
இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணையவில்லை என்பதால், தமிழ்நாட்டிற்கான 2,152 கோடி ரூபாயை குஜராத், உத்தரப்பிரதேசம் போன்ற பிற மாநிலங்களுக்கு அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டின் மீதான வெறுப்பு
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையை நிராகரித்த காரணத்தால், தமிழக மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடி நிதியை மத்திய அரசு பிற மாநிலங்களுக்கு எடுத்துக் கொடுத்துள்ளது.

இது அப்பட்டமான மிரட்டல். இந்திய வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும், ஒரு மாநிலத்திற்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கையாக, கல்வியை அணுகுவதற்கான வாய்ப்புகளை நெரிக்கும் செயலைச் செய்ததில்லை. பாஜக அரசு, தங்கள் உரிமைகளுக்காக எதிர்த்து நின்றமைக்காக தமிழக மாணவர்களை மத்திய அரசு தண்டித்துள்ளது.
அரசியல் பழிவாங்கும் நோக்கில் கல்வியில் இரக்கமற்ற முறையில் செயல்படும் ஒன்றிய பாஜக அரசு போன்ற மற்றொரு அரசை இதுவரை இந்திய வரலாறு கண்டதில்லை. தமிழ்நாட்டின் மீதும் தமிழ் மக்களின் மீதும் பாஜக கொண்டிருக்கிற வெறுப்பை இது வெளிக்காட்டியுள்ளது” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
‘மாணவர்கள் மன்னிக்க மாட்டார்கள்’
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை நாம் மறுத்து வருவதால் நமக்கு தரவேண்டிய நிதியை தாங்கள் ஆளும் மாநிலங்களுக்கு ஒதுக்கி உள்ளது பாசிச பாஜக அரசு.
வஞ்சக மனப்பான்மையோடு செயல்படும் ஒன்றிய பாசிச அரசை மாணவர்களும், ஆசிரியர்களும் மன்னிக்க மாட்டார்கள். மாநில உரிமையைப் பெறும் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவோம். கல்வி விடுதலை ஒன்றே நமது மாநிலத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு தீர்வு தரும்” எனத் தெரிவித்துள்ளார்.