தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: கூட்டு நடவடிக்கைக் குழுவின் தீர்மானங்கள் என்ன?

சென்னையில் இன்று நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பு எதிர்ப்பு கூட்டு நடவடிக்கைக் குழு (JAC) கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பல மாநில தலைவர்கள் ஒன்றிணைந்து முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினர்.
இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பையும், மக்கள்தொகை கட்டுப்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்கும் நோக்கில் இத்தீர்மானங்கள் அமைந்தன.
தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள் இங்கே…
” எதிர்வரும் தொகுதி மறுசீரமைப்பு வெளிப்படையாக இருக்க வேண்டும். அனைத்து மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் விவாதித்து, பங்களிக்கும் வகையில் இதை செயல்படுத்த வேண்டும்.
தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும். இதை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும்.
கடந்த 1971 ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையிலேயே மறுசீரமைப்பு நடக்க வேண்டும். 42, 84, 87 வது திருத்தங்களின் நோக்கம் இதுதான்; தேசிய மக்கள்தொகை சமநிலை இன்னும் எட்டப்படவில்லை.
மக்கள்தொகை கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற மாநிலங்களை தண்டிக்கக் கூடாது. இதற்காக ஒன்றிய அரசு அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டு வர வேண்டும்.”
பங்கேற்ற மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மையக் குழு அமைக்க வேண்டும். இது ஒன்றிய அரசின் தவறான மறுசீரமைப்பு முயற்சிகளை எதிர்கொள்ள வேண்டும். இந்த மையக் குழு, தற்போதைய நாடாளுமன்ற அமர்வில் பிரதமரிடம் கூட்டு மனுவை சமர்ப்பிக்க வேண்டும்.”

இங்கு பங்கேற்ற கட்சிகள், தங்கள் மாநில சட்டமன்றங்களில் தீர்மானங்களை நிறைவேற்றி, ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டும்.
முந்தைய மறுசீரமைப்பு வரலாறு, இப்போதைய திட்டத்தின் விளைவுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு ஒருங்கிணைந்த பொது மக்கள் கருத்து திரட்டல் உத்தியை பின்பற்ற வேண்டும்.
மாநிலங்களின் அரசியல், பொருளாதார எதிர்காலத்தை பாதுகாக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னெடுத்த இந்த முயற்சி பாராட்டுக்குரியது. அவருக்கு நன்றி” என்பது உட்பட பல்வேறு அம்சங்கள் தீர்மானத்தில் இடம்பெற்றிருந்தன.