தமிழ் மொழியின், தமிழ் இனத்தின் சிறப்பை உலகிற்கு எடுத்துரைத்த பாவேந்தர் பாரதிதாசனை சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 22.4.2025 அன்று சட்டமன்ற பேரவையில், விதி எண்.110-ன் கீழ், ‘பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி ஏப்ரல் 29 முதல் மே 5 வரை ‘தமிழ் வார விழா’ கொண்டாடப்படும்’ எனவும், இவ்விழாவில் கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள், பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது, தமிழ் இலக்கியம் போற்றுவோம், பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள், தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் கொண்டாடப்படும் என்று அறிவித்து இருந்தார்.
‘தமிழ் வார விழா’
அதன்படி, இவ்விழாவினை 29.4.2025 முதல் 5.5.2025 வரை தமிழ்நாடு முழுவதும் நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கவியரங்கங்கள், இலக்கிய கருத்தரங்குகள், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, கலைப்போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டன.

5 தமிழறிஞர்கள் நூல்கள் நாட்டுடைமை
அந்த வகையில் தமிழ் வார விழாவின் நிறைவு நாளையொட்டி, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற நிறைவு விழாவில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கவிக்கோ அப்துல் ரகுமான், எழுத்தாளர் மெர்வின், ஆ. பழநி ஆகியோர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு, அவர்களின் மரபுரிமையினருக்கும், கொ.மா. கோதண்டம் மற்றும் புலவர் இலமா தமிழ்நாவன் ஆகியோர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு, அவர்களுக்கும் நூலுரிமைத் தொகையாக தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
32 அறிஞர்கள்… 1,442 நூல்கள்
முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசால் 4 ஆண்டுகளில், தமிழறிஞர்களின் படைப்புகள் உலக மக்கள் அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தமிழறிஞர்கள் நன்னன், சிலம்பொலி செல்லப்பன், விடுதலை ராஜேந்திரன், பேராசிரியர் இரா. குமரவேலன், மம்மது உள்ளிட்ட 32 அறிஞர்களின் 1,442 நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன. அதற்கான நூலுரிமைத் தொகையாக 3 கோடியே 79 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளும் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டுடைமையால் பயன் என்ன?
நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படுவது, தமிழ் இலக்கியம் மற்றும் அறிவுசார் படைப்புகளை பொதுமக்களுக்கு எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கச் செய்யும் முக்கிய முயற்சியாகும். இதனால், இந்த நூல்களை யார் வேண்டுமானாலும் மறு அச்சிடலாம், மொழிபெயர்க்கலாம் அல்லது பரப்பலாம்.
இதற்கு பதிப்புரிமை அனுமதி தேவையில்லை. மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள், செலவு குறைவாகவோ அல்லது இலவசமாகவோ இந்த அறிவுப் பொக்கிஷங்களை அணுக முடியும். இது, தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை பரவலாக்குவதற்கு உதவுகிறது. மேலும், இந்த நூல்கள் டிஜிட்டல் வடிவில் கிடைப்பதால், உலகளவில் தமிழ் வாசகர்களுக்கு அவை எளிதில் அடையக்கூடியதாக இருக்கும்.
மேலும், நாட்டுடைமை ஆக்கப்படும் நூல்களின் ஆசிரியர்களின் மரபுரிமையினருக்கு அரசு நிதியுதவி வழங்குவது மற்றொரு பயனாகும். உதாரணமாக, மேற்குறிப்பிட்ட ஐந்து தமிழறிஞர்களின் நூல்களுக்கு, தலா 10 லட்சம் ரூபாய் நூலுரிமைத் தொகையாக வழங்கப்பட்டது. இது, ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு நிதி ஆதரவை வழங்குவதோடு, அவர்களின் இலக்கிய பங்களிப்பை அரசு அங்கீகரிக்கும் விதமாகவும் அமைகிறது. இதனால், தமிழறிஞர்களின் படைப்புகள் அழியாமல் பாதுகாக்கப்பட்டு, அடுத்த தலைமுறைக்கு அவை சென்றடைகின்றன.