வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: தமிழக சட்டசபையில் நிறைவேறிய தனித் தீர்மானம்!

வக்பு சட்டம் என்பது இஸ்லாமிய சமூகத்தில் சொத்துக்களை பொது நலனுக்காக நிர்வகிக்கும் ஒரு முக்கியமான அமைப்பு. 1954-ல் அறிமுகமான இச்சட்டம், மதம் சார்ந்த சொத்துக்களை பராமரிக்கவும், சமூக நலனை உறுதி செய்யவும் உருவாக்கப்பட்டது.
இந்த நிலையில், வக்பு சட்டத்தில் திருத்தம் செய்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு சட்டத்திருத்த மசோதா, வக்பு வாரியங்களின் அதிகாரத்தை குறைத்து, அரசு கட்டுப்பாட்டை அதிகரிக்க முயல்வதாக இஸ்லாமிய அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி உள்ளன.
இந்த நிலையில், தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானம் கொண்டுவந்தார்.
“சிறுபான்மையின இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், 1995-ம் ஆண்டின் வக்பு சட்டத்தை திருத்துவதற்கு, கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்பு வாரிய சட்டத்திருத்த முன்வடிவினை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை இந்த பேரவை வலியுறுத்துகிறது” என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எதிர்ப்பு ஏன்..? விளக்கிய முதல்வர் ஸ்டாலின்
தீர்மானத்தைக் கொண்டுவந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசானது தனது செயல்பாடுகள் அனைத்தையும் ஒருவிதமான உள்நோக்கம் கொண்டதாக செய்து வருகிறது. எதை செய்தாலும், குறிப்பிட்டத் தரப்பை வஞ்சிக்கும் வகையில்தான் திட்டங்களைத் தீட்டுகிறார்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டமானது சிறுபான்மை இஸ்லாமிய மக்களையும் இலங்கைத் தமிழர்களையும் வஞ்சித்தது.
வக்பு சட்டத்தை திருத்துவதன் மூலம் மோசமான விளைவுகள் ஏற்படும். வக்பு சட்டத்தை மத்திய அரசு திருத்த நினைக்கிறது. இதன்மூலம் மத்திய வக்பு கவுன்சில் மற்றும் மாநில வக்பு வாரிய கட்டமைப்புகள் மாற்றப்பட்டு அரசின் கட்டுப்பாடு அதிகரிக்கிறது.
இது வக்பு நிறுவனங்களின் சுயாட்சியைப் பாதிக்கும். வக்பு நிலங்களை நில அளவை செய்யும் அதிகாரம், நில அளவையரிடம் இருந்து மாவட்ட ஆட்சியருக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக வக்பு நிலங்கள் குறித்து முடிவு செய்யும் அதிகாரம் வக்பு வாரியத்திடம் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அரசு சொத்து என்று அடையாளம் காணப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட வக்பு சொத்து இந்த சட்டம் தொடங்குவதற்கு முன் அல்லது பின் என்றாலும் வக்பு சொத்தாக கருதப்படாது என்று இந்த சட்டம் கூறுகிறது.

இது முஸ்லிம்களின் மத நிர்வாகத்தில் அரசு தலையிடுவதாகும். வக்பு சொத்துக்களை பதிவு செய்யும் முன்பு மாவட்ட ஆட்சியர் சரிபார்க்க வேண்டும் என்று இந்த சட்டம் கூறுகிறது. இது அரசு இந்த சொத்துக்களை கைப்பற்றுவதற்கான வாய்ப்பை உருவாக்குவதாக முஸ்லிம்கள் அச்சப்படுகிறார்கள். வக்பு சட்டத்தின் பிரிவு 40-ஐ நீக்குவது. வக்பு வாரிய சொத்து அடையாள அதிகாரத்தை அகற்றி, அதை அரசுக்கு மாற்றுகிறது. இது அரசியலமைப்பின் பிரிவு 26-ன் கீழ் மத சுதந்திரத்தை மீறுவதாகும். வக்பு பயனர் என்ற பிரிவை நீக்கத் திட்டமிட்டுள்ளார்கள். நீண்டகால பயன்பாட்டின் அடிப்படையில் வக்பு சொத்துக்களை அங்கீகரிக்கும் பாரம்பரியத்தை இது அகற்றுகிறது.
‘முஸ்லிம் சமூக உணர்வுகளைப் புண்படுத்துகிறது’
இது முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது. காலவரையறைச் சட்டம் வக்பு சொத்துக்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. அறநிலையங்கள் மற்றும் பொதுத் தொண்டு நிறுவனங்கள், இனி வக்பு என கருதப்படமாட்டாது. இத்தகைய பிரிவுகள் முஸ்லிம் சமூகங்களின் எதிர்ப்புக்கான முக்கிய காரணங்களாக உள்ளன. இதனை மத்திய அரசு கொஞ்சமும் சிந்தித்துப் பார்க்கவில்லை. இந்த அடிப்படையில் வக்பு நிர்வாகத்தில் அரசியல் தலையீட்டை அதிகரிப்பதாக, மத்திய அரசின் சட்டத்திருத்தம் அமைந்துள்ளது.
இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கும் இந்த சட்டத்துக்கு எதிராக நமது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டியது அவசிய அவசரமென்று நான் கருதுகிறேன். சிறுபான்மையின மக்களுக்கு எதிரான மதசுதந்திரத்தை நிராகரிக்கும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான, வக்பு நோக்கத்துக்கு எதிரான, நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணான, குழப்பமான, தேவையற்ற, பல்வேறு பிரிவுகள் வக்பு சட்டத்திருத்தத்தில் இருக்கின்றன.
இந்த திருத்த சட்டமானது வக்பு அமைப்பையே காலப்போக்கில் செயல்படவிடாமல் முடக்கிவிடும். எனவே, நாம் இதனை எதிர்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம். மதநல்லிணக்கம், அனைவருக்குமான அரசியல் என்ற இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு நாம் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
ஒருமனதாக நிறைவேற்றம்
அதனைத் தொடர்ந்து அரசின் தனித் தீரமானம் மீது அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள். அதன் பிறகு தீர்மானம் சட்டசபையில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பாஜக எம்.எல்.ஏ.க்கள் மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசை கண்டித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.