வரலாற்றில் முதன்முறை… குடியரசுத் தலைவருக்கும் ‘கெடு’ விதித்த உச்ச நீதிமன்றம்!

தமிழ்நாடு சட்டமன்றம் 2020 முதல் 2023 வரை நிறைவேற்றிய 10 மசோதாக்கள், ஆளுநர் ரவியால் தாமதிக்கப்பட்டன. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களை மாநில அரசு கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட மசோதா இதில் முக்கியமாக இடம்பெற்றிருந்தது.
2023 நவம்பரில் இந்த மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டபோது, ஆளுநர் அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். இது அரசியலமைப்பு பிரிவு 200-ஐ மீறுவதாக அமைந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோரடங்கிய அமர்வு, கடந்த 8 ஆம் தேதி அன்று ஆளுநரின் செயல் சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்தனர்.
3 மாத காலக்கெடு
மேலும், குடியரசுத் தலைவருக்கும் இந்த மசோதாக்களை மூன்று மாதங்களுக்குள் பரிசீலிக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்து உத்தரவிட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இல்லையெனில் மாநில அரசுக்கு நியாயமான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிவு 201-இல் முன்பு காலக்கெடு இல்லாததால், குடியரசுத் தலைவரால் மசோதாக்கள் காலவரையின்றி தாமதிக்கப்பட்டன. இந்தத் தீர்ப்பு, இத்தகைய தாமதங்களை சட்டவிரோதமாக்கி, குடியரசுத் தலைவரின் முடிவுகளை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது.

சட்ட நிபுணர்கள் சொல்வது என்ன?
“அரசியலமைப்பு அதிகாரி நியாயமான காலத்தில் செயல்படாவிட்டால், நீதிமன்றங்கள் தலையிட முடியும்” என்பதை நீதிமன்றம் தற்போது தெளிவுபடுத்தி உள்ளதாக இத்தீர்ப்பை ஆதரிக்கும் சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், “இது, மாநில அரசுகளுக்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதலை மறுத்தால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் உரிமையை வழங்குகிறது.
தமிழ்நாடு அரசின் வழக்கால் கிடைத்துள்ள தீர்ப்பின் மூலம், ஆளுநர்கள் மத்திய அரசின் கருவிகளாக செயல்படுவதைத் தடுப்பதோடு, மாநில சட்டமன்றங்களின் சுயாட்சியையும் வலுப்படுத்துகிறது” என்கிறார்கள்.
இந்தத் தீர்ப்பு, ஒத்துழைப்பு கூட்டாட்சிக்கு வலு சேர்க்கிறது. ஆனால் சவால்களும் உள்ளன. குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர்கள் இந்த உத்தரவை மீறினால், அமலாக்கத்திற்கு தெளிவான வழிமுறைகள் இல்லை. மேலும், நீதிமன்றம் பிரிவு 142-ஐப் பயன்படுத்தி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது, நீதித்துறையின் அதிகார வரம்பு குறித்த விவாதத்தை எழுப்பியுள்ளது. இது சட்டமன்ற அதிகாரத்தில் தலையீடாகக் கருதப்படலாம். இருப்பினும், கேரளா, பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு இந்தத் தீர்ப்பு முன்மாதிரியாக அமையும்.

அங்கு ஆளுநர்களின் தாமதங்கள் ஆட்சியை பாதிக்கின்றன. தமிழ்நாடு வழக்கு, நிர்வாக அதிகாரங்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களுக்கு அடிபணிய வைக்க வேண்டும் என்ற நீதித்துறையின் உறுதியை வெளிப்படுத்துகிறது. இந்த மூன்று மாத காலக்கெடு, இந்திய ஜனநாயகத்தில் மாநில உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஒரு தைரியமான முன் நடவடிக்கையாக அமைந்து, அரசியலமைப்பின் விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கு நீதித்துறையின் பங்கை உறுதிப்படுத்துகிறது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.