பங்குச் சந்தையிலிருந்து இரண்டே மாதங்களில் வெளியேறிய ரூ.50 லட்சம் கோடி… காரணம் என்ன?

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமையன்று பங்குகளின் விலை கடுமையாக சரிந்தது. பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் சந்தை மூலதனம், நேற்றைய வர்த்தகத்தில் ரூ.385.94 லட்சம் கோடியாக குறைந்தது. இதன் காரணமாக, முதலீட்டாளர்களுக்கு ரூ.9 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. இது முதலீட்டாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து உள்நாட்டு பங்குச் சந்தை மிகப்பெரிய அளவில் பங்குகளை விற்று வருகிறது. இதன் விளைவாக இரண்டு மாதங்களுக்குள் ரூ.50 லட்சம் கோடிக்கு மேல் பங்குச் சந்தையில் மூலதன இழப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் (BSE) தரவுகளின்படி, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் ஜனவரி 1, 2025 அன்று சுமார் ரூ.445 லட்சம் கோடியாக இருந்தது. இருப்பினும், தொடர்ச்சியான விற்பனை அழுத்தம் பிப்ரவரி மாத இறுதியில் தோராயமாக ரூ.393 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள், அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் ஆகியவற்றால் உந்தப்பட்ட முதலீட்டாளர்களின் கவலைகள் அதிகரித்துள்ளன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து தொடர்ந்து நிதி வெளியேறுவது சந்தை மதிப்பில் கூர்மையான சரிவுக்கு பங்களித்துள்ளது.
“செப்டம்பர் மாதத்தின் அனைத்து நேர உச்சங்களுக்கும் பிறகு நிஃப்டி 50 16 சதவீதம் சரிந்து, மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் தலா 20 சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளதால், இந்திய சந்தைகளில் முதலீட்டாளர் செல்வம் கடந்த வாரம் செப்டம்பர் மாதத்திலிருந்து சுமார் 850 பில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைந்துள்ளது. ஜனவரி பிப்ரவரியில், சந்தை மூலதன வீழ்ச்சியின் அடிப்படையில் சுமார் 550 பில்லியன் அமெரிக்க டாலர் செல்வம் சரிந்துள்ளது” என்று வங்கி மற்றும் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவில் செய்யப்படும் இறக்குமதிக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்ற அச்சம் காரணமாக பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பெரும்பாலும் தங்களது பங்குகளை விற்பதிலேயே முனைப்பாக உள்ளன. இது, வரும் வாரத்தில் நடைமுறைக்கு வர உள்ளது. வருவாய் அறிக்கைகள் போன்ற காரணிகள், வரும் மாதங்களில் சந்தை போக்குகளை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

பிப்ரவரி மாதத்தின் கடைசியிலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FPIகள்) இந்திய பங்குச் சந்தையில் இருந்து நிதியை திரும்பப் பெற்று, ரூ.34,574 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றதாக தேசிய பத்திரங்கள் டெபாசிட்டரி லிமிடெட் (NSDL) தரவுகள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி 24 முதல் பிப்ரவரி 28 வரையிலான வாரம் முழுவதும் விற்பனைப் போக்கு வலுவாக காணப்பட்ட நிலையில், அப்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.10,905 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தனர்.
இருப்பினும், வெள்ளிக்கிழமையன்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வாங்குபவர்களாக மாறி, ரூ.1,119 கோடியை முதலீடு செய்தனர். ஆனபோதிலும், இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை கடும் சரிவைக் கண்டன. நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் இரண்டும் 1.8 சதவீதத்திற்கும் மேலாக சரிந்தன.