‘மாநில உரிமை பிரிவினைவாதமா..?’ – நயினார் நாகேந்திரன் கருத்துக்கு திமுக பதிலடி!

மிழக சட்டப்பேரவையில் ஏப்ரல் 15 செவ்வாய்க்கிழமையன்று 110 விதியின் கீழ் மாநில சுயாட்சி தொடர்பாக முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மாநில உரிமைகளைப் பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என அவர் அறிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “மாநிலங்களை பிரிக்க வேண்டும் என, பிரிவினைவாதத்தை முதல்வர் தூண்டுகிறார். இந்திய நாடு வல்லரசாக வேண்டும், ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை. தனித் தமிழ்நாடு வேண்டும்; தனிக்கொடி வேண்டும் என, முதல்வர் நினைக்கிறார்” என்று கூறி இருந்தார்.

‘மாநில உரிமைகளை கோருவது பிரிவினைவாதமா?’

இந்த நிலையில், நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு திமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. “மாநில உரிமைகளை கோருவது பிரிவினைவாதமா?” எனக் கேள்வி எழுப்பி இது தொடர்பாக அறிக்கை விடுத்துள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “மாநில நலன் மற்றும் மாநில சுயாட்சி சார்ந்து திமுக போராடியபோதெல்லாம் அண்ணா காலத்தில் இருந்தே ‘பிரிவினைவாதம் பேசுகிறது திமுக’ என அவதூறு பரப்பினார்கள். இப்போது அதே அவதூறை மோடி அமித்ஷாவின் தமிழக புதிய ஏஜெண்ட் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். ‘மாநிலங்களை பிரிக்க வேண்டும் என பிரிவினைவாதத்தை முதல்வர் தூண்டுகிறார்’ என நயினார் நாகேந்திரன் பேசியதில் இருந்தே அதிமுகவில் இருந்த அவருக்கு அண்ணாவின் அடிப்படை சித்தாந்தம் கூட தெரியாத ரசிக மனநிலையில் இருந்திருப்பதை காட்டுகிறது” எனக் கூறி உள்ளார்.

” இந்தியா என்பது முழு உடல், அதன் உறுப்புகள் தான் மாநிலங்கள் என்பதையே அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்துகள் சொல்கின்றன. மாநிலங்களுக்கான பலம் என்பது இந்தியாவிற்கான பலம். அதாவது மாநிலங்கள் பலம் பெற்றால் தான் இந்தியா வலுப்பெறும். நமது உடலில் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கினால் தான், முழு உடலும் வலுப்பெறும் என்ற அடிப்படைக் கூட தெரியாதவராக நயினார் நாகேந்திரன் இருப்பதை பார்த்தாலே திராவிடக் கட்சியில் இருந்து அதற்கு நேரெதிர் கொள்கை கொண்ட ஆரிய கட்சிக்கு சென்றதற்கான காரணம் விளங்கும்.

உடலில் உள்ள உறுப்புகள் பலம் பெறுவது, முழு உடலை வலிமையற்றதாக்கி விடுமா? என்பது போல மாநில உரிமைகளை திமுக கோருவது இந்திய நாட்டை வலிமையற்றதாக மாற்றிவிடுமா? என்பதற்கு நயினார் நாகேந்திரன் பதில் சொல்ல வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலினின் உரையில் ‘ஒற்றுமையை பாதிக்காத வகையில் உரிமையை மீட்டு எடுப்போம்’ என்று குறிப்பிட்டதன் அர்த்தம் நயினார் நாகேந்திரனுக்கு தெரியுமா?

அண்ணா உருவாக்கிய மாநில சுயாட்சி என்கிற கருவிற்கு கருணாநிதி உருவம் கொடுத்தார்; அந்த உருவத்திற்கு தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்வடிவம் கொடுத்து வருகிறார். இந்த அரசியல் நயினார் நாகேந்திரனுக்கு புரியவில்லை என்றால் அதிமுக என்ற திராவிடக் கட்சியில் இருந்தார் என்பதற்கு வெட்கப்பட வேண்டுமா?

நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் கும்பலும் குஜராத்தை சேர்ந்த பாஜக தலைமையும் ஏவும் பணியை மாநிலங்களில் உள்ள பாஜக தலைமை சிரமேற்று செய்து முடிப்பது போல மாநிலங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரும் இருக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் நினைப்பது அவரின் அரசியல் புரிதல் குறைப்பாட்டை காட்டுகிறது.

‘திமுக பிரிவினைவாதம் பேசுகிறது’ என திராவிட எதிர்ப்பாளர்கள் பேசிய 50 ஆண்டுக் கால பழைய முனை மழுங்கிய வாதத்தை விட்டுவிட்டு, மத்திய அரசின் கட்டளைக்கு அடிபணியும் மாநிலம் தமிழ்நாடு இல்லை; மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்கின்ற பரந்துபட்ட கொள்கை முழக்கம் திமுகவுடையது மட்டுமல்ல தமிழக மக்களின் உணர்விலும் உயிரிலும் கலந்த முழக்கம்” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

“pidgin news” – wia dem go bury pope francis ? wetin we know so far as e funeral go break from tradition. Breaking : chris harrison out as bachelorette host…for now. england test cricket archives | swiftsportx.