Amazing Tamilnadu – Tamil News Updates

அமெரிக்க பயணத்தில் நெகிழ்ச்சியான அனுபவங்கள்… விவரிக்கும் மு.க. ஸ்டாலின்!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்கு 17 நாட்கள் மேற்கொண்ட பயணத்தின்போது உலகின் 18 முன்னணி நிறுவனங்களுக்கும் தமிழக அரசுக்கும் இடையே ரூபாய் 7,616 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு தனது அமெரிக்கப் பயண அனுபவங்களைக் கடிதத் தொகுப்புகளாக எழுதத் தொடங்கி உள்ளார். அதன் முதல் பகுதியை வெளியிட்டுள்ள அவர், தொழில் நிறுவனங்களுடனான சந்திப்பு குறித்து மட்டுமல்லாது, அமெரிக்க வாழ் தமிழர்களுடன் நடந்த சந்திப்பின் போது நடந்த நெகிழ்ச்சியான அனுபவங்களையும் விவரித்துள்ளார்.

” ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற பொருளாதார இலக்கினை நிர்ணயித்து, மூன்றாண்டுகளாக அயராது பாடுபட்டு வரும் திராவிட மாடல் அரசின் திறன்மிகு முயற்சிகளால் பன்னாட்டு முதலீட்டாளர்களின் முதல் முகவரியாகத் தமிழ்நாடு திகழ்கிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு ஆகஸ்ட் 27 அன்று இரவு பயணம் மேற்கொண்டேன். சான் பிரான்சிஸ்கோ நகரத்தை ஆகஸ்ட் 28 அன்று சென்றடைந்தேன்.

சான் பிரான்சிஸ்கோவில் இறங்கியபோது….

இந்தியத் தூதரக அதிகாரி ஸ்ரீகர் ரெட்டி அன்பான வரவேற்பை அளித்தார். சான் பிரான்சிஸ்கோவிலும் அண்டை மாநிலங்களிலும் உள்ள தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் தாய்மண்ணிலிருந்து முதலமைச்சர் வந்திருக்கிறார் என்ற உணர்வுடன் விமான நிலையத்திற்குக் குடும்பத்துடன் வருகை தந்து அன்பான வரவேற்பை அளித்தனர். ஆகஸ்ட் 29 அன்று முதலில் என்னை வந்து சந்தித்த நிறுவனம், ஃபார்ச்சூன் 500 எனப்படும் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான நோக்கியா நிறுவனமாகும்.

பகல் பொழுதில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த உயர் அலுவலர்களைச் சந்தித்துப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்ட நிலையில் அன்று மாலையில் முதலீட்டாளர்களுடனான மாநாடு நடைபெற்றது.

முதலீட்டாளர் மாநாடு முடிவடைந்தபிறகு, ஃபேர்மாண்ட் ஹோட்டலுக்குத் திரும்பியபோது, லாபியில் தமிழர்கள் காத்திருந்தனர். அவர்களின் எத்தனையோ உணர்ச்சிகரமான கடிதங்கள், கவிதைகள் என பயணம் முழுவதும் கைகளுக்கு கிடைத்தது.

சிலிக்கான் வேலியில் ஒலித்த தமிழ்ப் பாடல்

ஆகஸ்ட் 31-ஆம் நாள் சிலிகான் வேலியில் பயணித்தோம்.முதலில் சென்றது ஆப்பிள் நிறுவனம். ஆப்பிள் நிறுவன உயர் அலுவலர்களுடனான சந்திப்பு இனிமையாகத் தொடங்கியது.

தொடர்ந்து கூகுள் நிறுவனத்திற்குச் சென்றோம். அந்த நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளிலும் தமிழர்கள் பலர் நல்ல பொறுப்பில் இருப்பது தெரிந்தது. தமிழ்நாட்டில் 20 லட்சம் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவுத் துறையில் பயிற்சியளிக்கும் திட்டத்திற்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டனர். அடுத்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம். அந்த நிறுவனத்தில் முதன்மைப் பொறுப்புகளில் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நம்மை வரவேற்றதுடன், தமிழ்ப் பாடல் ஒன்றை ஒலிக்கவைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ருசியான கோவை கபே

கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்கள் கோவை கபே என்ற உணவகத்தை நடத்துகின்றனர். அங்கே நமது பாரம்பரியப்படி, வாழை இலையில், நம் ஊர் சாப்பாட்டைப் பரிமாறினார்கள். பசிக்கேற்ற ருசியுடன் உணவு சிறப்பாக இருந்தது. வாழ்த்தி வரவேற்ற நல் உள்ளங்கள்: அன்று மாலையில் சான் பிரான்சிஸ்கோவில் அமெரிக்கவாழ் தமிழர்கள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுடனான சந்திப்புக்கு இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.

சிறிய அரங்கம் – நிறைந்த கூட்டம் – பொங்கி வழிந்த பேரன்பு – வாழ்த்து முழக்கங்கள் என உள்ளம் ஒன்றிய நிகழ்வாக அது அமைந்தது. செப்டம்பர் 1 அன்று ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அன்று, கடலுக்கும் மலைக்கும் இடையிலான சாலையில் ஆள் இல்லாத காரில் பயணித்தது இனிமையான சாகசம் போல அமைந்தது. எழில்மிகு சான் பிரான்சிஸ்கோ கடற்கரையில் சைக்கிள் ஓட்டியது இனிய அனுபவமாக இருந்தது.

குறிப்பிடத்தக்க அந்த நாளில், தமிழ்நாட்டிற்கான முதலீடுகளுக்கு அகலமான வாசலைத் திறந்து வைத்த சான் பிரான்சிஸ்கோ பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த மகிழ்ச்சி. புகழ்பெற்ற ஃபேர்மாண்ட் ஹோட்டலில் தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான வரலாறும் பதிவாகியிருப்பதை நினைத்து, ஹோட்டல் வாசலில் உள்ள பாடகர் டோனி பென்னட் சிலை முன்பாகப் படம் எடுத்துக்கொண்டு, சிகாகோ நோக்கி விமானத்தில் பறந்தேன். ஐந்தரை மணி நேரப் பயணம்.

சிகாகோவில் நேரம் மாற்றம்

நமது இந்தியாவில் டெல்லியிலும் சென்னையிலும் கடிகாரத்தில் ஒரே நேரம்தான்.இந்தியாவைவிட பரப்பளவில் பெரிய நாடான அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தின் நேரமும் சிகாகோ மாநிலத்தின் நேரமும் மாறுபடும். விமான நிலையத்தில் சிகாகோவுக்கான இந்தியத் தூதரக அதிகாரி சோமநாத் கோஷ் வரவேற்றோர். சான் பிரான்சிஸ்கோ போலவே சிகாகோ விமானநிலையத்திலும் அமெரிக்கவாழ் தமிழர்கள் திரண்டிருந்தனர். தமிழர்களுக்கேயுரிய பாரம்பரிய உடையுடனும், தமிழர்களின் கலையான பறை இசை, பண்பாட்டு நடனம் என அவர்கள் அளித்த வரவேற்பு, அடுத்தடுத்த சந்திப்புகளுக்கும் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் பெரும் நம்பிக்கையை அளிப்பதாக இருந்தது.

தமிழ்நாட்டிற்கான முதலீடுகளுக்கு அகலமான வாசலைத் திறந்து வைத்த சான் பிரான்சிஸ்கோ பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த மகிழ்ச்சி” என மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version