“இந்திய குடியுரிமை: திபெத்தியர்களுக்கான வாய்ப்பு இலங்கை தமிழர்களுக்கு கிடையாதா?”

லங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவர், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர் எனக் கூறி இந்தியாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் 2018 ஆம் ஆண்டு அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட போது அவரது தண்டனை 7 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. மேலும், தண்டனைக் காலம் முடிந்ததும் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தால் உத்தரவிட்டப்பட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில், “அகதிகள் முகாமிலேயே 3 ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன். என்னுடைய மனைவியும், குழந்தைகளும் இங்கேயே தங்கி உள்ளனர். தாய் நாடான இலங்கையில் நிலைமை மோசமாக உள்ளது. அங்கு எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை. எனவே, எனது தண்டனையை ரத்து செய்வதோடு, இந்தியாவிலேயே தங்கியிருக்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் கிடையாது. அனைத்து வெளி நாட்டினரையும் இங்கு தங்க வைக்க முடியாது. இந்திய நாட்டில் குடியுரிமை கேட்க உங்களுக்கு இங்கே என்ன உரிமை இருக்கிறது? தண்டனைக் காலம் முடிந்ததும் இங்கு தங்கியிருக்க முடியாது. நீங்கள் வேறு நாட்டுக்குச் செல்லலாம்” என்று தெரிவித்து., மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தமிழக கட்சிகள் கண்டனம்

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்துக்கு தமிழகத்தின் பல்வேறு கட்சிகள் தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன.

“புலம் பெயர்வை தடுத்துவிட முடியாது” – திருமாவளவன்

நேற்று முதல் நபராக இது குறித்து கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “உச்ச நீதிமன்றத்தின் கருத்து மனிதாபிமானத்துக்கு எதிரானது. புலம் பெயர்வது அனைத்து நாடுகளிலும் நிகழக் கூடியது.புலம் பெயர்வை சட்டத்தின் மூலமோ, எல்லைகளின் மூலமோ தடுத்துவிட முடியாது. மனிதாபிமானத்தின் அடிப்படையில் தஞ்சம் புகும் மக்களுக்கு அடைக்கலம் கொடுப்பது அரசின் தலையாய கடமை” என்று கூறி இருந்தார்

“மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்ட கருத்து”- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” உச்ச நீதிமன்றத்தின் வார்த்தைகள் மனிதாபிமானமற்ற தன்மையுடன் சட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்டு இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவலையோடு பார்க்கிறது.

அகதியாக அங்கீகரிப்பதா, இல்லையா என்பது குறித்த பிரச்னையில் சட்டப்படியான நிலைபாட்டை எடுப்பதோ, கோரிக்கையை ஏற்றுக் கொள்வதோ, நிராகரிப்பதோ நீதிமன்றத்தின் உரிமை. ஆனால், அகதிகள் மற்றும் குடியுரிமை குறித்த பிரச்னைகள் அரசாங்கத்தின் கொள்கையோடு சம்பந்தப்பட்டதே தவிர, நீதிமன்றங்கள் அகதிகள் பிரச்னைகள் குறித்த கொள்கைகளை வரையறுக்க முடியாது.

மனித மாண்புகள் குறித்து சமூகம் மற்றும் சட்டத்தின் பார்வைகள் முன்னேற்றகரமான வடிவங்களை பெற்றிருக்கும் நிலையில் ‘இந்தியா என்ன தர்ம சத்திரமா, வேறொரு நாட்டுக்குப் போ’ என்று நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் வினோத் சந்திரன் அமர்வின் வார்த்தைப் பயன்பாடுகள் முற்றிலும் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவை. இன்னொரு நாட்டுக்கு போகச் சொல்வதற்கு நீதிமன்றத்திற்கு எந்த உரிமையும் கிடையாது.

இந்தியாவில் இருக்கலாமா, இல்லையா என்பது குறித்த பிரச்னையில் இந்தியாவில் தங்குவதற்கு இடமில்லை என்று சொல்லலாம். அதைத் தாண்டி ‘தர்ம சத்திரம், இன்னொரு நாட்டுக்கு போ’ என்பதெல்லாம் சட்டத்திற்கும், மனித மாண்புகளுக்கும் கொஞ்சமும் பொருந்தாத வார்த்தைகள். உச்ச நீதிமன்றத்தின் இந்த அமர்வின் இந்த வார்த்தை பயன்பாடுகள் எந்த ஆவணங்களிலும் இடம் பெறக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

மேலும் சமீப காலத்தில், தீர்ப்பின் பகுதியாக அல்லாமல் தங்கள் சொந்த கருத்துகளை நீதிபதிகள் தனிப்பட்ட அவதானிப்புகள் என்கிற முறையில் பிற்போக்குத்தனமான பொருத்தமற்ற கருத்துகளையும் வார்த்தைகளையும் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. எனவே, இந்திய தலைமை நீதிபதி இந்த பிரச்னையில் தலையிட்டு, இதுபோன்ற மொழிகள் உச்ச நீதிமன்ற வார்த்தைப் பயன்பாடுகளில் இல்லாமல் உறுதி செய்வதை உத்தரவாதப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

“திபெத்தியர்களுக்கு மட்டும் வாய்ப்பு ஏன்?” – சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், ” ஈழத்தமிழ் மக்களின் தொப்புள்கொடி உறவுகளான 10 கோடி தமிழர்கள் நாங்கள் வாழ்கின்ற நிலம் தான் தமிழ்நாடு. இது இந்திய ஒன்றியத்தில் இருக்கிறது. இதைவிட என்ன உரிமை அவர்களுக்கு வேண்டும்.

இந்தியாவில் அதிக அளவு வரி செலுத்தும் மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு ஆகும். அங்கு வாழும் நாங்கள் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டு தான் உள்ளோம். நாங்கள் செலுத்தும் வரிப்பணம் மூலம் என் மொழி புரியாத என் இனமல்லாத யார் யாரோ உரிமை பெற்று இந்த நாட்டில் வாழும்போது எங்கள் தொப்புள்கொடி ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு அந்த உரிமை இல்லையா?

மேலும், சீனாவின் ஒரு பகுதியில் இருந்து வந்த திபெத்தியர்களுக்கு இந்தியாவில் வாழ்வதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய நாடு, ஈழத்தமிழர்கள் குடியுரிமை கேட்கும்போது தடுப்பது ஏன்” என சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

73440, val thorens (1). Аренда парусной яхты в Фетхие. gocek yacht charter.