இலங்கை தேர்தல்: தமிழர் பகுதிகளிலும் அனுர குமார வெற்றி பெற்றது எப்படி?
இலங்கையில், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணியைச் சேர்ந்த அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். ஆனால் நாடாளுமன்றத்தில் மூன்று உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்ததால் ஆட்சி அமைக்க பெரும்பான்மை தேவைப்பட்டது.
இதனால் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, மொத்தம் 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்திற்கு கடந்த 14 ஆம் தேதி தேர்தல் நடந்தது. இந்த நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி, 62 சதவீத வாக்குகளை பெற்று 141 இடங்களில் நேரடியாக வெற்றி பெற்றது. வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் கூடுதலாக 18 இடங்கள் கிடைத்து 159 இடங்களை மக்கள் சக்தி கூட்டணி கைப்பற்றியுள்ளது. இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை என்பிபி கூட்டணி பெற்றுள்ளது. இதனால், ஆளும் கூட்டணி எந்த ஒரு மசோதாவையும் நாடாளுமன்றத்தில் எளிதாக நிறைவேற்ற முடியும்.
எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) மக்கள் வாக்குகள் மூலம் 35 இடங்களைப் பெற்றது. வாக்கு சதவீதம் அடிப்படையில் 5 இடங்கள் கிடைக்கப்பெற்று ஒட்டுமொத்தமாக 40 இடங்களை கைப்பற்றியுள்ளது. முன்னாள் அதிபர் ரனில் விக்ரமசிங்கவின் புதிய ஜனநாயக முன்னணிக்கு 5 இடங்களும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 3 இடங்களும் கிடைத்துள்ளன. இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு 8 இடங்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்கள் கிடைத்தன. மற்ற கட்சிகள் 7 இடங்களைப் பெற்றுள்ளன.
தமிழர் பகுதிகளிலும் அதிக இடங்களில் வெற்றி
தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளைப் பொறுத்தவரை, மட்டக்களப்பு மாவட்டம் தவிர்த்து, மற்ற அனைத்து பகுதிகளிலும் என்பிபி கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மட்டக்களப்பில் மட்டும் இலங்கை தமிழ் அரசு கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. யாழ்ப்பாணத்தில் என்பிபி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அங்கு தமிழர் கட்சி அல்லாத தேசிய கட்சி அமோக வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல்முறை. மலையக தமிழர்கள் அதிகம் வாழும் நுவரெலியா மாவட்டத்திலும் என்பிபி கூட்டணி முதலிடம் பிடித்துள்ளது. கண்டி, மாத்தளை, ரத்தினபுரி, கேகாலை, பதுளை, களுத்துறை உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த கூட்டணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
காரணம் என்ன?
இந்த நிலையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் என்பிபி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பது தமிழ்க் கட்சிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில், தமிழ் அரசியல் கட்சிகள் மிகப்பெரிய அளவில் பின்னாடைவைச் சந்தித்ததும் இந்த தேர்தலில்தான். தமிழ்க் கட்சிகள் கடந்த தேர்தலில் ‘தமிழ் கூட்டமைப்பு’ என்ற பெயரில் கூட்டாக போட்டியிட்ட நிலையில், இந்த முறை தனித்தனியே போட்டியிட்டது தான் தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
மேலும், கடந்த செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலின்போது, அதிபரின் அதிகாரத்தை குறைப்பேன் என்று அனுர குமார திசாநாயக்க உறுதி அளித்து இருந்தார். நாடாளுமன்ற தேர்தலின்போதும் இதே வாக்குறுதியை முன்வைத்தார். அதே சமயம், “அதிபரின் அதிகாரத்தைக் குறைக்க, நாடாளுமன்றத்தில் இரண்டில் மூன்று பங்கு பெரும்பான்மை தேவை. இதை கருத்தில் கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருந்தார். இதன் காரணமாகவே, தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் அதிபரின் கட்சிக்கு அனைத்து தரப்பு மக்களும் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்க் கட்சிகள் அச்சம்
அதே சமயம் இந்த தேர்தல் முடிவால், இலங்கையில் வாழும் தமிழர்களின் உரிமைகளை மேலும் பறிக்கும் விதமாக கடுமையான சட்டத்திருத்தங்களைக் கொண்டுவர அதிபர் அனுர குமார திசாநாயக்க முயலலாம் என்ற அச்சம் தமிழ்க் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வரும் நாள்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட இருப்பதாகத் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அறிவித்திருக்கின்றது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் வி.எஸ். சிவகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்குள் இருக்கின்ற பகைமையை மறந்து குறைந்தபட்சம் ஒன்றாக இணைந்து மீண்டும் கூட்டமைப்பாக இயங்க வேண்டியது காலத்தின் கட்டாயமும் நிர்ப்பந்தமும் ஆகும். இவ்வாறான ஐக்கியமில்லாவிட்டால் அசுர பலத்தோடு வெற்றி பெற்றுள்ள அரசை எதிர்கொள்ளக்கூடிய வலிமை தமிழர் தரப்பிடம் இல்லாமல் போய்விடும்” எனக் கூறி உள்ளார்.