உலக பணக்காரர்கள் பட்டியல் மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிக்காக நன்கொடை வழங்குபவர்களின் இந்திய நன்கொடையாளர் பட்டியலை ‘ஹூருண் இந்தியா’ அமைப்பு ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், 2023 – 24 ஆம் நிதியாண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த 203 தொழிலதிபர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் மொத்தம் 8,783 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இது, இரண்டு ஆண்டுக்கு முந்தைய நிலவரத்துடன் ஒப்பிடுகையில் 55 சதவீதம் அதிகமாகும். 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக 18 நபர்களும்; 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக 30 நபர்களும்; 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக 61 நபர்களும் நன்கொடை வழங்கியுள்ளனர்.
இதில், கல்வி சார்ந்த விஷயங்களுக்காக 3,680 கோடி ரூபாய் வழங்கியுள்ளனர். மொத்த நன்கொடையாளர்களில் 16 சதவீதம் பேர், மருந்து துறையைச் சேர்ந்தவர்கள்.
முதலிடத்தில் ஷிவ் நாடார்
பட்டியலில், இந்தியாவின் மிகப்பெரிய நன்கொடையாளராக எச்.சி.எல். நிறுவனத்தின் ஷிவ் நாடார் முதலிடத்தில் உள்ளார். 79 வயதாகும் இவர், ஆண்டுக்கு ரூ. 2,153 கோடி நன்கொடைகள் வழங்கி, தொடர்ந்து 3 ஆவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள் அடிப்படையில் கணக்கிடும்போது, அவர் தினமும் அவர் 5.90 கோடி ரூபாய் நன்கொடையாக கொடுத்துள்ளார். இதில், பெரும்பாலான தொகை கல்விக்காக வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் ரிலையன்ஸ்
ரிலையன்ஸ் அறக்கட்டளை, ரூ.407 கோடி நன்கொடையுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பஜாஜ் குழும அறக்கட்டளை 352 கோடி ரூபாய் நன்கொடையுடன் 3 ஆவது இடத்தில் உள்ளது.
அவரைத் தொடர்ந்து இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி மற்றும் ‘இண்டோ எம்ஐஎம் டெக்’ தலைவர் கிருஷ்ணா சிவுகுலா ஆகியோர் முறையே ரூ.307 கோடி மற்றும் ரூ.228 கோடி நன்கொடை அளித்துள்ளனர். இதில் கிருஷ்ணா சிவுகுலா, அதிக நன்கொடை வழங்கிய 10 நபர்களின் பட்டியலில் முதல் முறையாக இடம்பெற்று உள்ளார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான ரோஹிணி நிலகேனி, 154 கோடி ரூபாய் நன்கொடை அளித்ததன் வாயிலாக, அதிக நன்கொடை வழங்கிய இந்திய பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சிஎஸ்ஆர் நன்கொடையில் ரூ.900 கோடி பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தை தொடர்ந்து, நவீன் ஜிண்டால் தலைமையிலான ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் நிறுவனம் ரூ. 228 கோடி நன்கொடையுடன் சிஎஸ்ஆர் நன்கொடையில் 2 ஆம் இடத்தில் உள்ளது.