விஜய் கட்சிக்குத் தாவும் தம்பிகள்… ரஜினிகாந்த் – சீமான் சந்திப்பு பின்னணி…
நடிகர் ரஜினிகாந்த் – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இடையேயான சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், ரஜினியுடன் அரசியல் குறித்து பேசியதை சீமான் உறுதி செய்துள்ள நிலையில், சந்திப்பின் பின்னணி தகவல்கள் தெரியவந்துள்ளது.
அரசியலுக்கு நடிகர் ரஜினிகாந்த் வருவதை கடுமையாக எதிர்த்து வந்தவர் சீமான். அதே சமயம், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது அதனை வரவேற்ற சீமான், அவருடன் வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலின்போது கூட்டணி அமைக்கவும் திட்டமிட்டிருந்தார். ஆனால், இருவருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின்போது விஜய் அவ்வளவாக பிடிகொடுக்காமலேயே நழுவியதாக கூறப்பட்டது. இது குறித்து சீமான் அதிருப்தி அடைந்ததாக சொல்லப்பட்டது. சீமான் உடன் கூட்டணி அமைத்தால், கூட்டணிக்கு யார் தலைமை என்பதில் பிரச்னை ஏற்படும் என்று உணர்ந்தே விஜய், சீமான் உடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தினார். அப்போது ” திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள்” என்று விஜய் கூறியதை சீமான் கடுமையாக விமர்சித்தார். அதற்கு முன்பு விஜய்யை ஆதரித்து பேசி வந்த சீமான், அதன் பிறகு விமர்சனம் செய்தது சமூக வலைதளங்களில் விவாதமானது.
இதனைத் தொடர்ந்து விஜய் ரசிகர்களும் நாம் தமிழர் கட்சியினரும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து மாறி மாறி வார்த்தைகளால் தாக்கி கொண்டனர். இந்த நிலையில், சமீப நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சி தம்பிகள் அக்கட்சியிலிருந்து விலகி விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியில் இணைந்து வருகிறார்கள். நாம் தமிழர் கட்சியின் முக்கிய பலமே இளைஞர்களின் ஆதரவு தான். ஆனால், விஜய்யின் அரசியல் வருகையால் அவர்களது பார்வை அவரது கட்சி பக்கம் திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கட்சி நிர்வாகிகளை சீமான் மரியாதை இன்றி நடத்துவதாகவும், ” இது என் கட்சி… இஷ்டம் இருந்தா இரு… இல்லாட்டி போய்க்கோ…” என்ற ரீதியில் பேசுவதாகவும் கூறப்பட்டது. நாம் தமிழர் நிர்வாகிகளின் விலகலுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இப்படி கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து விலகிச் செல்வது சீமானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினியை சந்தித்தன் பின்னணி என்ன?
இந்த நிலையில் தான், நடிகர் ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ திரைப்படத்தில், போலி என்கவுன்டர் குறித்து பேசியிருந்ததை சீமான் பாராட்டினார். இதன் பின்னர் சீமானை செல்போனின் தொடர்பு கொண்ட ரஜினி, நன்றி தெரிவித்து நேரில் பேச விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனையொட்டியே, சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார் சீமான். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் களம் குறித்து இருவரும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நவம்பர் 2 ஆம் தேதியே ரஜினியை சந்திக்க சீமான் அனுமதி கேட்டிருந்ததாகவும், ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த சந்திப்பு தள்ளிப் போன நிலையில், தற்போது இந்த சந்திப்பு அரங்கேறி உள்ளது.
திரையுலகின் தற்போது யார் நம்பர் ஒன் என்பதை முன் வைத்தும், சூப்பர் ஸ்டார் பட்டத்தை வைத்தும் சமூக வலைதளங்களில் விஜய் – ரஜினி ரசிகர்களிடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இந்த மோதல்கள் அவ்வப்போது தொடரத்தான் செய்கின்றன. இந்த நிலையில், விஜய்க்கு எதிரான ரஜினி ரசிகர்களைத் தனது பக்கம் ஈர்க்கும் விதமாகவே சீமான் இந்த சந்திப்பை நடத்தி இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
‘அரசியல் குறித்து பேச்சு’
இந்த நிலையில் ரஜினியை சந்தித்தது ஏன் என்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ” நீண்ட நாட்களாக ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். நேற்று சந்திப்பு குறித்து முடிவு செய்யப்பட்டு இன்று சந்தித்தேன். அன்பு மற்றும் மரியாதை நிமித்தமாகவே ரஜினிகாந்தை சந்தித்தேன்.
தமிழக அரசியலில் நல்ல தலைமைக்கான வெற்றிடம் உள்ளது. ரஜினியுடன் நிறைய விஷயங்கள் பேசினேன். அதையெல்லாம் பகிர்ந்து கொள்ள முடியாது. சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறியது சரிதான். சிஸ்டம் ராங் என்று ரஜினி சொன்னார். அதைத்தான் நான் தவறாக உள்ளது என்று கூறுகிறேன். அரசியல் என்பது மிக கொடூரமான ஆட்டம் என்று ரஜினி காந்த் மற்றும் கமலிடம் ஏற்கனவே கூறியுள்ளேன்.
அரசியல் உங்களுக்கு சரியாக வராது. ஏச்சு பேச்சுக்களை தாங்க வேண்டும் என்று ரஜினிகாந்திடம் கூறியிருக்கிறேன். ரஜினியுடன் திரைத்துறை அரசியல் என பல விஷயங்களை பேசினேன். ரஜினியை சந்தித்தது அரசியலுக்காக தான். அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை. சங்கி என்றால் நண்பன் என அர்த்தம். திமுகவை எதிர்த்தாலே சங்கி என்பதா? அப்படியென்றால் சங்கி என்பதில் பெருமைதான்.
தற்போது உள்ள தலைவர்கள் உருவானவர்கள் அல்ல, உருவாக்கப்படுகிறார்கள். மக்களின் துயரம், பசி என அடித்தளத்தில் இருந்து தலைவர் ஒருவர் மேலே வர வேண்டும். உருவாக்கப்பட்ட தலைவர்களுக்கு அடித்தட்டு மக்களின் கவலை, பசி, கண்ணீர் எதுவும் தெரியாது. தற்போது திடீரென்று அரசியல் தலைவராக சிலர் உருவாக்கப்படுகிறார்கள். தற்போதைய அரசியல் களத்தில் காமராஜர், அண்ணா போன்ற தலைவர்கள் இல்லை” என்றார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக அரசியல் களம் தயாராகி வரும் நிலையில், சீமானின் இந்த சந்திப்பு அவரது எதிர்கால அரசியல் ‘மூவ்’ குறித்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.