சீமான் கைதாகிறாரா..? வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிப்பு… போலீஸாருடன் மோதலால் பரபரப்பு!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பான வழக்கில், நீதிமன்றம் காட்டியுள்ள கெடுபிடியைத் தொடர்ந்து இந்த வழக்கு வேகமெடுத்துள்ளது.
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில், கடந்த 2011 ஆம் ஆண்டு புகார் அளி்த்திருந்தார். இதில், போலீஸார் சீமானுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் போலீஸார் 12 வாரத்துக்குள் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என என்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டதோடு, இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, சீமான் மீதான வழக்கை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விஜயலட்சுமி வழக்கில் இதுவரை 15 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பெங்களூரில் உள்ள விஜயலட்சுமியிடம் 3 மணிநேரத்துக்கும் மேலாக போலீசார் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக சீமானுக்கு சம்மன் வழங்கப்பட்டது. ஏற்கனவே திட்டமிடப்பட்ட சுற்றுப்பயணம் காரணமாக சீமான் ஆஜராகவில்லை என இன்று சீமானின் வழக்கறிஞர்கள் அவரது சார்பாக நேரில் ஆஜராகினர். சீமான் தற்போது கிருஷ்ணகிரியில் கட்சி ரீதியான பணியில் ஈடுபட்டிருப்பதால் அவர் ஆஜராகாவில்லை என விளக்கமளித்தனர். அத்துடன் 4 வாரம் அவகாசம் வேண்டும் எனக் கடிதமும் அளித்தனர்.
சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிப்பு
இதனைத் தொடர்ந்து நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்கொடுமை புகார் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை காலை 11 மணி அளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் இன்று சம்மன் ஒட்டப்பட்டது.
விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது உள்ளிட்ட 10 நிபந்தனைகளை தெரிவித்து போலீஸார் ஒட்டிய சம்மனை சில நொடிகளில் அங்கிருந்த நாதக நிர்வாகி அந்த சம்மனை கிழித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சீமான் வீட்டுக்குள் செல்ல முயன்ற காவல்துறையினரை அங்கிருந்த காவலாளி அமல்ராஜ் என்பவர் தடுத்து நிறுத்தியதாகவும், இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, காவலர்களை அமல்ராஜ் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அப்போது, காவலாளியிடம் இருந்த கைத்துப்பாக்கியை தருமாறு போலீசார் கூறியும் காவலாளி அவர் கொடுக்காததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அந்த நபரை போலீஸார் கைது செய்தனர். அதேபோல், போலீஸார் ஒட்டிய சம்மனை கிழித்த நாதக-வைச் சேர்ந்த நிர்வாகி சுதாகர் என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். இதனிடையே, வீட்டின் காவலாளி ராணுவ வீரர் என்பதால், அவர் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், போலீஸார் ஒட்டிய சம்மனை கிழிக்கச் சொன்னது நான் தான், என்றும் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும், போலீஸார் மீண்டும் சம்மனை ஒட்டிக் கொள்ளலாம் என்றும் சீமான் மனைவி கயல்விழி கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

போலீசாரை காவலாளி தாக்கியதற்கு சீமானின் மனைவி கயல்விழி. சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரிடம் ” சாரி” (Sorry) என மன்னிப்பு கேட்டார். அதற்கு அந்த காவல் ஆய்வாளர், ” என்ன சாரி..?” எனப் பதிலுக்கு கோபமாக கேட்டுவிட்டு, காவலாளியை ஏற்றிய வாகனத்தை நோக்கிச் சென்றார்.
அடுத்தடுத்து நடைபெற்ற இந்த நிகழ்வுகளால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியதைத் தொடர்ந்து, சீமான் வீட்டருகே போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆஜராகாவிட்டால் கைது?
இந்த நிலையில், சம்மனில் தெரிவித்துள்ளபடி வெள்ளிக்கிழமை சீமான் போலீஸார் முன்பு நேரில் ஆஜராகாவிட்டால் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே கிருஷ்ணகிரியில் இன்று இது தொடர்பாக பேட்டியளித்த சீமான், “சென்னை வளசரவாக்கம் போலீசார் வழக்கு சம்மந்தமாக என்னை ஆஜராக கூறினார்கள். அதற்கான விளக்கத்தினை நான் ஏற்கனவே கொடுத்துவிட்டேன். மேலும் அவர்கள் இந்த விளையாட்டை நீடித்து கொண்டே இருக்கிறார்கள். எனவே எனக்கு நேரம் கிடைக்கும் போது விளக்கம் அளிக்கிறேன் என்று கூறிவிட்டேன்” என்றார்.

இருப்பினும் கைதாகும் நெருக்கடி அதிகரித்திருப்பதால், சீமான் நேரில் ஆஜராகவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.