சாம்சங் தொழிலாளர்கள் கைது… பா.ரஞ்சித் ஆவேசம்!

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் உள்ள சாம்சங் இந்தியா நிறுவனத்தில் ஊதிய உயர்வு, 8 மணி நேரம் வேலை, தொழிற்சங்கம் அமைக்க அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் சுமார் ஒரு மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழக அரசு ஏற்பாட்டின் பேரில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும், சிஐடியூ தொழிற்சங்கம் அதனை ஏற்கவில்லை.
இந்த நிலையில், இந்நிலையில் நேற்று இரவு காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்களை கைது செய்தனர். போராட்ட பந்தலும் அகற்றப்பட்டது. காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருவருக்கும் தலா 15 நாள்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்து ஆதரவு கூறினர்.
இந்த நிலையில், சாம்சங் தொழிலாளர்கள் கைதுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “தொழிற்சங்கம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும். இப்படி தொழிற்சங்கம் வேண்டியும், சிறந்த பணிச்சூழலுக்காகவும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் தங்களது சட்டபூர்வ உரிமைகளுக்கு உட்பட்டு வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். தமிழக அரசு இதை மதிக்காமல், தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக நடந்து கொள்வது மிக மோசமான அணுகுமுறை.
தொழிலாளர்கள் அமைதியான முறையில் வேலைநிறுத்தம் செய்து வரும் போராட்டக்களத்தை அரசு அகற்றுவதில் எந்த நியாயமும் இல்லை. தொழிலாளர்களை இவ்வாறு கைது செய்வது அரசியலமைப்புக்கு முரணானது. மேலும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு காவல் துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கப்பட வேண்டியதாகும். தமிழக அரசே… தங்கள் உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு!” எனத் தெரிவித்துள்ளார்.