‘ரெட்ரோ’: சூர்யாவுக்கு கம் பேக்… பட்டையைக் கிளப்பும் பாக்ஸ் ஆபீஸ் வசூல்!

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ‘ரெட்ரோ’ ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தன.
இந்த நிலையில், ‘ரெட்ரோ’ மே 1 அன்று திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வரும் இரண்டு நாட்களுக்கு தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல் ஆக நிரம்பியுள்ளது. ‘புக் மை ஷோ’ செயலியில் கடந்த 24 மணி நேரத்தில் 2.5 லட்சத்திற்கும் மேல் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்
‘ரெட்ரோ’ முதல் நாளில் இந்தியாவில் ரூ.19.25 கோடி வசூலித்துள்ளது. இதில் தமிழ் பதிப்பின் பங்களிப்பு மட்டும் ரூ.17.25 கோடி. தெலுங்கு பதிப்பு ரூ.1.95 கோடியும், இந்தி பதிப்பு ரூ.0.05 கோடியையும் வசூலித்துள்ளது. சென்னை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் தமிழ் பதிப்புக்கு 79.35% இருக்கைகள் நிரம்பியதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கதை என்ன?
1960 முதல் 1990 கள் வரையிலான காலகட்டத்தில் அமைந்த கதையில், பரிவேல் “பாரி” கண்ணன் (சூர்யா) என்ற அனாதையின் கதையைச் சொல்கிறது. கேங்ஸ்டர் குடும்பத்தால் வளர்க்கப்பட்ட பாரி, தனது வன்முறை வாழ்க்கையை விட்டு, காதலி ருக்மினி (பூஜா ஹெக்டே) உடன் புதிய வாழ்க்கையைத் தொடங்க முயல்கிறான். ஆனால், விதி அவனை மீண்டும் குற்ற உலகத்திற்கு இழுக்கிறது. ஒரு மர்மமான தீவு மற்றும் அதை ஆளும் சக்திவாய்ந்த குடும்பத்தின் ரகசியங்களைச் சுற்றி கதை நகர்கிறது.
ரசிகர்களின் வரவேற்பு
சமூக வலைதளங்களில் #Retro மற்றும் #Suriya ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகின. “சூர்யாவின் மாஸ் கம்பேக்! இடைவேளை காட்சிகள் தியேட்டரை தெறிக்க விட்டன!” என்று ஒரு ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர். ஆனால், “கதை இன்னும் வலுவாக இருந்திருக்கலாம்” என்று சிலர் விமர்சித்துள்ளனர்.
கார்த்திக் சுப்பராஜின் தனித்துவமான இயக்க பாணி, சந்தோஷ் நாராயணனின் இசை, மற்றும் சூர்யாவின் திரை மாந்திருக்கம் ஆகியவை படத்திற்கு பலம் சேர்த்துள்ளன. முதல் பாதி பரபரப்பாகவும், இடைவேளை காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதாகவும் இருப்பதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும், இரண்டாம் பாதியில் சில இடங்களில் திரைக்கதை சற்று தொய்வடைவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
‘கங்குவா’ உடன் ஒப்பீடு
‘கங்குவா’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.22 கோடியாக இருந்தது, ஆனால் ரெட்ரோ ரூ.19.25 கோடியுடன் சற்று பின்தங்கியது. கங்குவா பட்ஜெட் ரூ.350 கோடியாக இருந்ததால் அதிக எதிர்பார்ப்புகளை எதிர்கொண்டது. ஆனால் ரெட்ரோ குறைந்த பட்ஜெட்டில் உருவாகியதால், நேர்மறையான விமர்சனங்கள் வசூலை உயர்த்த உதவலாம்.
வார இறுதியில் ரசிகர்களின் ஆதரவு மற்றும் விமர்சனங்கள் படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும். சூர்யாவின் நடிப்பு மற்றும் கார்த்திக் சுப்பராஜின் தனித்துவமான பாணி இப்படத்தை தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்கதாக ஆக்கியுள்ளது.