கட்டுமான நிறுவனங்கள் திவாலானால் மக்களைப் பாதுகாக்க புதிய சட்டத் திருத்தம் அமல்!

நிதி நிர்வாக முறைகேடு காரணமாக, கட்டுமான நிறுவனங்கள் திவாலாகும் போது, அதன் குடியிருப்பு திட்டங்களில், வீடு வாங்க பணம் செலுத்தியவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
உதாரணமாக, ஒரு இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களை கட்டுவதாக கூறி விளம்பரப்படுத்தும் கட்டுமான நிறுவனங்கள், தங்களிடம் வீடு முன்பதிவு செய்ய வரும் மக்களிடம், குறிப்பிட்ட மாதங்களுக்குள் வீட்டை ஒப்படைப்பதாக வாக்குறுதி அளித்து, அதற்கான பணத்தை மொத்தமாகவோ அல்லது வங்கிக் கடன் மூலமாகவோ பெற்றுக்கொள்கிறது.
ஆனால், அந்த நிறுவனம் திவாலானால், அதன் நிதி நிலைமை சீரமைக்கப்பட்டு, மீண்டும் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே, பணம் செலுத்தியவர்களுக்கு வீடு கிடைக்கும். சில இடங்களில் கட்டுமான பணிகள் பாதியில் முடங்கினால், முதலீட்டு தொகையில் ஒரு பகுதி மட்டும் கிடைக்கும் சூழல் ஏற்படுகிறது. இதனால், வங்கிக்கடன் வாங்கி வீட்டுக்காக முதலீடு செய்தவர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது.
இதை தீர்க்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திவால் மற்றும் திவால் நிலை சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இத்திருத்தங்கள், கடந்த 4 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக, திவால் மற்றும் திவால் நிலை வாரியம் ( Insolvency and Bankruptcy Board of India -IBBI )தெரிவித்துள்ளது.
செய்யப்பட்டுள்ள திருத்தம் என்ன?
திவால் நிலை அறிவிக்கப்பட்டதில் இருந்து, குறுகிய காலத்தில் இதற்கான கூட்டத்தை நடத்தலாம். இந்த கூட்டத்தில், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய பிரதிநிதிகளும் பங்கேற்பர். முதலீட்டாளர்கள் குழு கூட்டத்தில், 66 சதவீத ஓட்டுகள் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் அடிப்படையில், கட்டுமான திட்டங்களில் எஞ்சிய பணிகளை முடித்து, வீட்டை ஒப்படைக்கலாம். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிதி ஆதாரங்களை, இதற்கு பயன்படுத்த சட்ட ரீதியாக அனுமதிக்கலாம்.

மக்களுக்கு என்ன பயன்?
” இந்த சட்டத்திருத்தத்தினால், கட்டுமான நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் வந்துள்ளன. வீடு வாங்க முன்வரும் மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்தும் போது, ஒவ்வொரு திட்டத்துக்கும் தனி வங்கிக்கடன் துவக்கி, அதில் தான் வரவு – செலவு கணக்கை பார்க்க வேண்டும். இதனால், ஒரு குறிப்பிட்ட திட்டத்துக்கான வங்கிக் கணக்கில் இருந்து, கட்டுமான நிறுவனம் அதிக தொகையை எடுத்து, தவறாக செலவு செய்வது தடுக்கப்படும். இந்த பின்னணியில், திவால் நிறுவனங்களுக்கான சட்டத்திருத்தம் மக்களுக்கு உரிய காலத்தில் வீடு கிடைப்பதை உறுதி செய்யும்” என்கிறார்கள் இத்துறை நிபுணர்கள்.