ரஜினி நடிக்கும் படங்களுக்கு கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதுவதற்கு கூடுதலாக மெனக்கிடுவார். பாடல் வரிகள் ரஜினியின் சினிமா கதாபாத்திரத்தை சிலாகிப்பதாக மட்டுமல்லாமல், அவரது நிஜ வாழ்க்கையின் சில பக்கங்களையும் போகிற போக்கில் தொட்டுச் செல்வதாக இருக்கும்.
அப்படி வெளியான பாடல்களில் இடம்பெற்ற பல வரிகள் ரஜினி ரசிகர்களால் வெகுவாக கொண்டாடப்பட்டன. அதிலும் ‘படையப்பா’ படத்தில் இடம்பெற்ற பாடலில் வரும் ” என் ஒரு துளி வேர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவா…” என்ற வரிகள் ரசிகர்களை மட்டும் கவரவில்லை; ரஜினியே இந்த வரிகளுக்காக வைரமுத்துவை வெகுவாக பாராட்டியதாக சொல்லப்பட்டது. அந்த வகையில் இருவருக்கும் இடையே வெகு நெருக்கமான நட்பு உண்டு. அவ்வப்போது இருவரும் தனியாக சந்தித்துப் பேசிக்கொள்வதும் உண்டு.
அப்படி தான் தற்போது ரஜினியும் வைரமுத்துவும் நேரில் சந்தித்து சுமார் 80 நிமிடங்கள் உரையாடி உள்ளனர். இந்த உரையாடலின் சுவாரஸ்யத்தை தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் கவிதை வடிவில் பதிவிட்டுள்ளார் வைரமுத்து.
அந்த கவிதை இங்கே…
கடிகாரம் பாராத
உரையாடல்
சிலபேரோடுதான் வாய்க்கும்
அவருள் ஒருவர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
80 நிமிடங்கள்
உரையாடியிருக்கிறோம்
ஒரே ஒரு
‘கிரீன் டீ’யைத் தவிர
எந்த இடைஞ்சலும் இல்லை;
இடைவெளியும் இல்லை
சினிமாவின் அரசியல்
அரசியலின் சினிமா
வாழ்வியல் – சமூகவியல்
கூட்டணிக் கணக்குகள்
தலைவர்கள்
தனிநபர்கள் என்று
எல்லாத் தலைப்புகளும்
எங்கள் உரையாடலில்
ஊடாடி ஓய்ந்தன
எதுகுறித்தும்
அவருக்கொரு தெளிவிருக்கிறது
தன்முடிவின் மீது
உரசிப் பார்த்து
உண்மை காணும்
குணம் இருக்கிறது
நான்
அவருக்குச் சொன்ன
பதில்களைவிட
அவர் கேட்ட கேள்விகள்
மதிப்புமிக்கவை
தவத்திற்கு ஒருவர்;
தர்க்கத்திற்கு இருவர்
நாங்கள்
தர்க்கத்தையே
தவமாக்கிக் கொண்டோம்
ஒரு காதலியைப்
பிரிவதுபோல்
விடைகொண்டு வந்தேன்
இரு தரப்புக்கும்
அறிவும் சுவையும் தருவதே
ஆரோக்கியமான சந்திப்பு
அது இது