ரயில் டிக்கெட் முன்பதிவு: இதனால் தான் 60 நாட்களாக குறைக்கப்பட்டதா?
தொலைதூர ஊர்களுக்குச் செல்லும் விரைவு, அதிவிரைவு ரயில் உள்பட பல்வேறு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் காலம் 60 நாட்களாக இருந்த நிலையில், கடந்த 2015 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு காலம் 120 நாட்களாக உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவதற்கான காலவரம்பு 120 நாளில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்படுவதாக இந்திய ரயில்வே துறை நேற்று அறிவித்தது. இது நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. ஆனால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 365 நாட்கள் என்ற வரம்பில் எந்த மாற்றமும் இருக்காது. குறிப்பிட்ட பகல் நேர விரைவு ரயில்களான லைம் தாஜ் விரைவு ரயில், கோம்தி முன்பதிவு செய்வதற்கான வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
அதே நேரத்தில் பொதுமக்கள் வருகிற தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகள் குறித்து பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம் எனவும் முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் அனைத்தும் செல்லும் என்றும் இந்திய ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 நாட்களாக குறைக்கப்பட்டது ஏன்?
இந்த நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால வரம்பை 120 நாளில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்படுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்திய ரயில்வே அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.
என்றாலும், 120 நாட்கள் என்பது திட்டமிடுவதற்கு மிக நீண்ட காலமாக இருப்பதாகவும், இதனால் பயணிகள் பலர் திட்டமிட்டபடி தங்களது பயணத்தை மேற்கொள்வதில்லை என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக டிக்கெட் ரத்து அதிக எண்ணிக்கையில் இருப்பதால், இருக்கைகள்/பெர்த்கள் வீணடிக்கப்படுகின்றன. தற்போது, முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகளில் சுமார் 21% ரத்து செய்யப்படுகின்றன. 4 சதவீதம் முதல் 5 சதவீதம் பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்யாமல், பயணத்திற்கும் வராமல் இருப்பதும் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“இதனால், ஆள்மாறாட்டம், ரயில்வே அதிகாரிகள் சட்டவிரோதமாக பணம் எடுப்பது போன்ற மோசடிகளுக்கு வழிவகுக்கிறது. முன்பதிவு காலத்தைக் குறைப்பதன் மூலம், இதைத் தடுக்க முடியும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்பதிவு செய்ய நீண்ட கால அவகாசம் உள்ளதால், சிலர் டிக்கெட்டுகளை பிளாக் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. குறுகிய கால முன் பதிவு தான் உண்மையான பயணிகள் அதிக டிக்கெட்டுகளை எடுப்பதை ஊக்குவிக்கும். மேலும், டிக்கெட் ரத்து மற்றும் பயணிகள் வராமல் இருப்பது குறைந்தால், அதன் அடிப்படையில் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்குவது குறித்து முன்கூட்டியே திட்டமிடலாம்” என்றும் ரயில்வே உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.