பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் … தீர்ப்பு முழு விவரம்!

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, மே 13 செவ்வாய்க்கிழமை அன்று தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில், குற்றவாளிகளான திருநாவுக்கரசு (வயது 25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34) மற்றும் அருண்குமார் ஆகியோருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தண்டனை விவரம்
திருநாவுக்கரசு மற்றும் மணிவண்ணனுக்கு தலா 5 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனை, திருநாவுக்கரசருக்கு 5 ஆயுள் தண்டனை, சதீஷூக்கு 3 ஆயுள் தண்டனை, வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனை, ஹெரன்பால் 3 ஆயுள் தண்டனை, அருளானந்தம், அருண்குமார், பாபுவுக்கு ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டப் பிரிவு வாரியாக தண்டனை விவரங்கள்
குற்றவாளிகள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் பிற சட்டப் பிரிவுகளின் கீழ் பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. முக்கிய தண்டனை விவரங்கள் பின்வருமாறு:
IPC பிரிவு 376(D) – கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 9 குற்றவாளிகளும் இந்தப் பிரிவின் கீழ் சாகும் வரை ஆயுள் தண்டனை பெற்றனர். இந்தப் பிரிவு, ஒரு பெண்ணை ஒரு குழுவாக இணைந்து பாலியல் வன்கொடுமை செய்வதை குற்றமாக்குகிறது.
IPC பிரிவு 376(2)(N) – தொடர்ச்சியான பாலியல் குற்றங்கள்: தொடர்ந்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக, இந்தப் பிரிவின் கீழ் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
IPC பிரிவு 354(A) – பாலியல் துன்புறுத்தல்: இந்தப் பிரிவின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இது பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு செயல்களை உள்ளடக்கியது.
IPC பிரிவு 120(B) – குற்றச் சதி: குற்றச்செயலுக்கு திட்டமிட்டதற்காக, இந்தப் பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.
IPC பிரிவு 201 – தடயங்கள் அழித்தல்: குற்றத்திற்கான ஆதாரங்களை அழித்ததற்காக, 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
போக்சோ சட்டம் (POCSO Act): சில பாதிக்கப்பட்டவர்கள் 18 வயதுக்கு கீழ் இருந்ததால், இந்த சட்டத்தின் கீழ் கூடுதல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, 7 முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ. 85 லட்சம் இழப்பீடு வழங்குமாறு கூறிய நீதிபதி, ஒவ்வொரு பெண்ணுக்கும் தலா ரூ.10 லட்சம் – 15 லட்சம் வரை இழப்பீட்டு வழங்க வேண்டும் என மாவட்ட சட்ட உதவி மையத்துக்கு உத்தரவிட்டார்.
மேல்முறையீடு சென்றாலும்…
வலுவான ஆதாரங்கள் இருப்பதால், மேல்முறையீடு சென்றாலும் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்படும் என சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திர மோகன் தெரிவித்தார்.
வழக்கின் பின்னணி
019 பிப்ரவரி 24-ம் தேதி, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் ஒரு கல்லூரி மாணவி தைரியமாக புகார் அளித்ததன் மூலம் இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. சமூக வலைதளங்கள் மூலம் பழகி, இளம்பெண்களை ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து பணம் பறித்ததாக அவர் புகாரளித்தார். இந்த புகாரை அடுத்து, திருநாவுக்கரசு , சபரிராஜன் , சதீஷ் , வசந்தகுமார் ஆகிய நால்வர் முதலில் கைது செய்யப்பட்டனர். பின்னர், மணிவண்ணன் என்ற மற்றொரு குற்றவாளி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
விசாரணையில் ஏற்பட்ட மாற்றங்கள்
ஆரம்பத்தில், இந்த வழக்கை பொள்ளாச்சி காவல்துறை விசாரித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் கோவை அதிமுக முக்கிய பிரமுகர் ஒருவர் என்பதால், புகார் கொடுக்க வந்தவர்கள் மிரப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், புகார் கொடுத்த பெண்ணை பற்றிய விவரத்தை வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி வெளியிட்டதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக நல அமைப்புகள் கொதித்தெழுந்தன. இதனையடுத்து வழக்கின் தீவிரத்தையும், பொதுமக்களின் கோபத்தையும் கருத்தில் கொண்டு, அது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. 2019 ஏப்ரல் மாதம், தமிழக அரசு, இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது. சிபிஐ அதிகாரிகள் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் முகாமிட்டு, பாதிக்கப்பட்ட பெண்கள், குற்றவாளிகளின் குடும்பத்தினர், மற்றும் அவர்களின் நண்பர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் கைதுகள்
2021 ஜனவரியில், சிபிஐ விசாரணையின் அடிப்படையில், ஹேரேன்பால் , பாபு என்ற ‘பைக்’ பாபு மற்றும் அருளானந்தம் ஆகிய மூவர் கூடுதலாக கைது செய்யப்பட்டனர். இவர்களில் அருளானந்தம் அதிமுக மாணவர் அணி செயலாளராக இருந்தவர். இதனால், வழக்கு அரசியல் தொடர்பு கொண்டதாகவும் பேசப்பட்டது. அதிமுக தலைமை, அருளானந்தத்தை கட்சியிலிருந்து நீக்கியது.
வழக்கின் முக்கிய திருப்பங்கள்
வழக்கு விசாரணையின்போது, குற்றவாளிகளின் செல்போன்களில் பல இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட காணொளிகள் கிடைத்தன. இந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியதால், பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளங்களை பாதுகாக்க பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு சிபிசிஐடி கடிதம் எழுதியது. மேலும், புகார் அளித்த பெண்ணின் சகோதரரை தாக்கியதாக ‘பார்’ நாகராஜ் உள்ளிட்ட மூவர் தனியாக கைது செய்யப்பட்டனர்.
குற்றவாளிகளில் திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் மீது 2019 மார்ச் மாதம் குண்டர் சட்டம் பாய்ந்தது. ஆனால், அவர்களின் பெற்றோர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை அடுத்து, இந்த குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.
போராட்டங்கள்
இந்த வழக்கு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழித்த இந்த சம்பவத்திற்கு எதிராக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தின. திமுக மகளிர் அணி, 2021 ஜனவரியில் பொள்ளாச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தி, முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியது.
வழக்கு கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. யாரும் பிறழ்சாட்சியாக மாறவில்லை. இதற்கு 2021 ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.