ராமதாஸ் கூட்டத்துக்கு ‘ஆப்சென்ட்’ … அன்புமணி பக்கம் சாய்ந்த பாமக மாவட்டச் செயலாளர்கள்?

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் உட்கட்சி மோதல்களை மேலும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.
92 மாவட்ட செயலாளர்களைக் கொண்ட பாமகவில், கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த சில முக்கிய தலைவர்கள் மட்டுமே இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். மற்ற மாவட்டச் செயலாளர்கள் பெரும்பாலும் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.
இதன் மூலம், டாக்டர் ராமதாஸுக்கும் செயல் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே நிலவும் மோதலில், தாங்கள் யார் பக்கம் என்பதை அக்கட்சியின் பெரும்பான்மையான மாவட்டச் செயலாளர்கள் வெளிப்படுத்தி உள்ளதாகவே கருதப்படுகிறது.
“சிங்கத்தின் கால்கள் பழுதடையவில்லை”
கூட்டத்திற்கு முன்பு, டாக்டர் ராமதாஸ் ஆவேசமாகப் பேசினார். “எல்லா தொகுதிகளிலும் படுத்துக்கொண்டே வெற்றிபெறும் வித்தையை நான் சொல்லித்தரப் போகிறேன். 50 தொகுதிகளில் இலகுவாக வெற்றி பெறுவது பற்றியும், 40 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை அடையவும் ஆலோசனை வழங்குவேன்” என்று அவர் கூறினார்.
மேலும், கட்சி நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்த அவர், “நேர்மையாகவும், உண்மையாகவும் உழைக்காவிட்டால், யாராக இருந்தாலும் பதவி பறிக்கப்படும். எம்.எல்.ஏ. ஆனாலும் சரி,” என்று கூறினார். மேலும், “நான் இருக்கும் வரை, நான் எடுக்கும் முடிவே இறுதியானது. சிங்கத்தின் கால்கள் பழுதடையவில்லை, சீற்றமும் குறையவில்லை,” என்றும் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தினார்.
அன்புமணியும் ‘ஆப்சென்ட்’
ஆனால், அவரது இந்த ஆவேசமான பேச்சு, கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைப்பதற்குப் பதிலாக, பிளவை மேலும் ஆழப்படுத்தி இருப்பதாகவே அக்கட்சியினர் கருதுகின்றனர். கூட்டத்தில் அன்புமணி கலந்துகொள்ளவில்லை. “செயல் தலைவர் அன்புமணிக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் வரலாம், வந்துக்கொண்டிருக்கலாம்,” என்று ராமதாஸ் கூறினாலும், அன்புமணியின் ஆதரவாளர்கள் இந்தக் கூட்டத்தை முற்றிலும் புறக்கணித்தனர். மேலும், பெரும்பாலான மாவட்ட செயலாளர்களும் கூட்டத்திற்கு வரவில்லை. இதன்மூலம், அன்புமணி பக்கம் பெரும்பான்மை நிர்வாகிகள் சாய்ந்திருப்பதாகவே தெரிகிறது.
குறையும் ராமதாஸின் செல்வாக்கு?

ஆயினும் ராமதாஸ் இந்தப் புறக்கணிப்பை நியாயப்படுத்த முயன்றார். “சிலர் சித்திரை முழு நிலவு மாநாட்டு பணிகளால் களைப்படைந்திருக்கலாம். அதனால் வராமல் இருக்கலாம். வராதவர்கள் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு பேசினர்,” என்று கூறினார். ஆனால், இந்த விளக்கம் கட்சி வட்டாரத்தில் ஏற்கப்படவில்லை. மாறாக, அன்புமணி ஆதரவு நிர்வாகிகளின் இந்தப் புறக்கணிப்பு, கட்சியில் ராமதாஸின் செல்வாக்கும் பிடியும் குறைந்து வருவதையே காட்டுவதாக பேசப்படுகிறது.
பாமகவில் உட்கட்சி மோதல்கள் புதியவை அல்ல. கடந்த 2024 டிசம்பரில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், ராமதாஸ் தனது பேரன் பரசுராமன் முகுந்தனை இளைஞரணி தலைவராக அறிவித்தபோது, அன்புமணி மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் பகிரங்க மோதல் வெடித்தது. பின்னர், ஏப்ரல் மாதத்தில், தைலாபுரத்தில் ராமதாஸ், தானே கட்சித் தலைவராக செயல்படுவதாகவும், அன்புமணி செயல் தலைவராக மட்டுமே இருப்பார் என்றும் அறிவித்தார். இது அன்புமணி ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாமல்லபுரத்தில் மே 11 ல் நடந்த சித்திரை முழு நிலவு மாநாட்டிலும், ராமதாஸ் கட்சி நிர்வாகிகளை கடுமையாக எச்சரித்து, “நான் தான் கட்சி, என் முடிவே இறுதியானது,” என்று கூறினார். இந்தப் பேச்சும் அன்புமணி ஆதரவாளர்களை மேலும் புண்படுத்தியது. இப்போது, தைலாபுரம் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்களின் புறக்கணிப்பு, அன்புமணியின் செல்வாக்கு அதிகரித்து வருவதையும், ராமதாஸின் தலைமைக்கு எதிர்ப்பு வலுப்பெறுவதையும் காட்டுகிறது.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, அடுத்ததாக பல்வேறு அணி நிர்வாகிகளின் கூட்டங்கள் நடைபெற உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டங்களில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான உத்திகள் மற்றும் கூட்டணி முடிவுகள் குறித்து விவாதிக்கப்படலாம். ஆனால், தற்போதைய உட்கட்சிப் பிளவு, பாமகவின் ஒற்றுமையையும், தேர்தல் வெற்றி வாய்ப்பையும் பாதிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
அன்புமணி ஆதரவாளர்களின் இந்தப் புறக்கணிப்பு, கட்சியில் அவரது செல்வாக்கை உறுதிப்படுத்தினாலும், ராமதாஸின் அனுபவமும், வன்னியர் சமூகத்தில் அவரது ஆதரவும் இன்னும் குறையவில்லை. இந்தத் தந்தை-மகன் மோதல், பாமகவை ஒரு சிக்கலான கட்டத்தை நோக்கி கொண்டு செல்கிறது. அடுத்து நடக்கவுள்ள கூட்டங்கள், கட்சியின் எதிர்காலப் பயணத்தைத் தீர்மானிக்கும் முக்கிய தருணங்களாக அமையலாம்.