முதலில் ‘நீட்’ தேர்வு… இப்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பு… மருத்துவ படிப்புக்குத் தொடரும் சிக்கல்கள்!

மிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு 69 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இதில், முதுநிலை மருத்துவ படிப்பில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கும் தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கும் 50 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. மீதமுள்ள 50 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. அதாவது, இளநிலை மருத்துவப் படிப்புகளில் 15% இடங்களையும், மருத்துவ மேற்படிப்பில் 50% இடங்களையும் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநில அரசுகளும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்குகின்றன.

இந்த நிலையில் தான், மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் வசிப்பிட (Domicile) அடிப்படையிலான ஒதுக்கீடுகள் எதுவும் கூடாது என்றும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்தவர்களுக்கும் இடம் அளிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் நேற்று வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்திருக்கிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பின்னணி

சண்டிகர் நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 64 மருத்துவ மேற்படிப்பு இடங்களில், சண்டிகர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் அல்லது அந்த குறிப்பிட்ட கல்லூரியில் இளநிலை மருத்துவம் படித்த மாணவர்கள் மட்டுமே சேர முடியும் என்று அறிவிக்கப்பட்டது. இதை செல்லாது என்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தற்போது இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

மேற்கூறிய தீர்ப்பை வழங்கிய நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான 3 உறுப்பினர்கள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, ” நாம் அனைவரும் இந்தியாவில் தான் வசிக்கிறோம். நாம் அனைவரும் இந்தியாவின் வசிப்பாளர்கள் தான். இந்தியக் குடிமக்கள் அல்லது வசிப்பாளர்கள் என்ற பொதுப் பிணைப்பு இந்தியாவின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வாழ்வதற்கும், வணிகம் செய்வதற்கும் உரிமை அளிப்பதைப் போன்று இந்தியாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கை கோரும் உரிமையையும் வழங்குகிறது. அதனால், வசிப்பிட அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் ” என்று கருத்து தெரிவித்துள்ளது.

பறிபோகும் மாநிலங்களுக்கான ஒதுக்கீடு

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினால், தமிழ்நாடு உட்பட அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் கிடைத்து வந்த 50 சதவீத இடஒதுக்கீடு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, 50 சதவீத முதுநிலை மருத்துவ இட ஒதுக்கீடு மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 1,207 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். தற்போது இந்த 50 சதவீத இட ஒதுக்கீடு ரத்தானால், 1,207 இடங்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மாநில ஒதுக்கீட்டுக்கான 50% இடங்களில் சேர வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் எவரேனும் விண்ணப்பித்தால், அவர்களுக்கும் தகுதி அடிப்படையில் மாணவர் சேர்க்கை வழங்கப்பட வேண்டும். அதனால், தமிழ்நாட்டு மருத்துவர்களுக்கு இடம் கிடைக்கும் வாய்ப்புகள் குறையும்.

நீதிபதிகளின் கருத்துக்கு ராமதாஸ் எதிர்ப்பு

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “தமிழ்நாடு மிகவும் வலிமையான மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. அதற்குத் தேவையான மருத்துவர்களை உருவாக்கி வழங்கும் மையங்களாக மருத்துவக் கல்லூரிகள் திகழ்கின்றன. தமிழ்நாட்டுக்கு எந்த அளவுக்கு முதுநிலை மருத்துவர்கள் தேவையோ, அதற்கேற்ற வகையில் தான் மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அந்த இடங்களிலும் வெளி மாநிலத்தவருக்கு பங்கு அளிக்கப்பட்டால் தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளுக்கு போதிய மருத்துவர்கள் கிடைக்காத நிலை ஏற்படும். அதனால், தமிழக அரசு மருத்துவமனைகள் செயல்படாமல் முடங்கும் நிலை உருவாகும்” எனக் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், ” உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் வசிப்பிட அடிப்படையிலான இட ஒதுக்கீடு குறித்த கருத்து தத்துவார்ந்த வாதங்களுக்கு பொருந்துமே தவிர, மாநில மக்களின் நலன்களைக் காப்பதற்கும், நடைமுறைக்கும் பொருந்தாது”. என்றும் கூறியுள்ள ராமதாஸ், “ஒவ்வொரு மாநிலத்தின் தேவைகளும் அந்த மாநிலங்களில் வாழும் மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரிகளைக் கொண்டு நிறைவேற்றப்படுகின்றன. இத்ததைய சூழலில் மாநில ஒதுக்கீட்டு இடங்களின் மாணவர் சேர்க்கைக்கும் அகில இந்திய தத்துவத்தைத் திணிக்கக் கூடாது. அனைத்து மாநிலங்களின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய தீர்ப்புகளை வழங்குவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்துகளும் கேட்கப்பட வேண்டும்” என்று கூறி உள்ளதோடு, “உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 15ம் பிரிவில் உரிய திருத்தங்களை மேற்கொள்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தி உள்ளார்.

தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு

இதனிடையே, மருத்துவப் படிப்பிற்கான மாணவர் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். “உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, மாநில உரிமைகள் பாதிக்கப்படாமல், இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்புக்குத் தொடரும் சிக்கல்கள்

ஏற்கெனவே இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்காக கொண்டுவரப்பட்ட ‘நீட்’ தேர்வால் அப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பொருளாதார வசதி கொண்டவர்கள் மட்டுமே தனியாக கோச்சிங் சென்டரில் சேர்ந்து ‘நீட்’ தேர்வுக்கு தயாராக முடியும் என்ற சூழல் உருவாகி உள்ளது. இதனால், எளிய பின்புலம் கொண்டவர்களிடையே மட்டுமல்லாது ‘நீட்’ தேர்வு தரும் மன உளைச்சலால் இதர தரப்பு மாணவர்கள் மத்தியிலும் மருத்துவ படிப்பில் சேரும் ஆர்வம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

தற்போது மருத்துவ மேற்படிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மேற்கூறிய தீர்ப்பு, மருத்துவ படிப்பு மீதான ஆர்வத்தை மாணவர்களிடையே மேலும் குறைத்துவிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Explore trending news fox for the latest headlines and stories that shape our world. 최신 온라인 슬롯. © 2023 24 axo news.