‘அடல்ட் காமெடி’யில் கவனம் ஈர்த்த ‘பெருசு’… வசூலும் இந்தி ரீமேக்கும்!

கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரித்த ‘பெருசு’ திரைப்படம், மார்ச் 14 அன்று வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இளங்கோ ராம் இயக்கத்தில், அருண் ராஜின் இசையில் உருவான இப்படம், சிங்களப் படமான ‘டெண்டிகோ’வின் தமிழ் ரீமேக் ஆகும். இளங்கோ ராமே சிங்கள மற்றும் தமிழ் பதிப்புகளை இயக்கியுள்ளார். வைபவ் மற்றும் சுனில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், ரெடின் கிங்ஸ்லி, பால சரவணன், தீபா, நிஹரிகா, சாந்தினி உள்ளிட்டோரும் கூடுதலாக பங்களித்துள்ளனர்.
பாசிட்டிவ் விமர்சனங்கள்
‘பெருசு’ ஒரு வீட்டில் இறக்கும் பெரியவரைச் சுற்றி, அவரது மரணத்திற்குப் பின் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் இறுதிச் சடங்கில் நிகழும் சிக்கல்களை நகைச்சுவையுடன் சித்தரிக்கிறது.
“வித்தியாசமான அடல்ட் காமெடி” என ட்ரெய்லரிலிருந்தே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம், “முகம் சுளிக்காமல் சிரிக்க வைக்கிறது” என ரசிகர்களால் X தளத்தில் பாராட்டப்பட்டது. “வைபவ் போதையில் பேசுவது, சுனில் தடுமாறுவது போன்ற காட்சிகள் படத்திற்கு உயிரோட்டமாக உள்ளது. வைபவ்-சுனில் ஜோடியின் கெமிஸ்ட்ரி அபாரம்; இயக்குநரின் புத்திசாலித்தனம் படம் முழுக்க தெரிகிறது” என பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன. “இரண்டாம் பாதி சற்று மெதுவாக உள்ளது” என சில கருத்துகள் வெளியானாலும், “குடும்பத்துடன் ரசிக்கலாம்” என்ற ரீதியிலான விமர்சனங்கள் தியேட்டருக்கு கூட்டத்தை வரவழைத்தது எனலாம். மேலும், அருண் ராஜின் இசையும், ஒளிப்பதிவும் படத்தின் வெற்றியை உயர்த்தியுள்ளன.
பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் முழுமையாக வெளியாகவில்லை என்றாலும், தமிழ்நாட்டில் முதல் வாரத்தில் ரூ. 5 கோடி முதல் 7 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறிய பட்ஜெட் படமாக இருந்தும், வார இறுதியில் திரையரங்குகளில் நல்ல கூட்டத்தை ஈர்த்து, இண்டஸ்ட்ரியில் பெரிய அளவில் பேச வைத்துவிட்டது ‘பெருசு’. OTT தளங்களில் வெளியானால், தமிழ் சினிமாவின் புதிய முயற்சிகளுக்கு இது முன்மாதிரியாக அமையும்.
இந்தி ரீமேக்
படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஹன்சல் மேத்தா இயக்க, சாகில் சைகல் தயாரிப்பில் இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இருப்பினும், இது குறித்த அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.