புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் 86,000 பேருக்கு பட்டா… 60 ஆண்டு கால பிரச்னைக்கு தீர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிழைப்பு தேடி சென்னை மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் வந்து குடியேறிய ஏழை, எளிய மக்கள், தங்க இடமில்லாத நிலையில் புறம்போக்கு இடங்களில் குடிசைகள் அமைத்தோ அல்லது காலப்போக்கில் வீடு கட்டியோ குடியிருந்து வருகின்றனர். இதேபோன்று மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், மாவட்ட தலைநகரப் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கானோர் குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இவர்கள் தாங்கள் வசிக்கும் இடத்துக்கு பட்டா தரப்பட வேண்டும் எனக் கோரி வருகின்றனர். ஆனால், 1962 ஆம் ஆண்டு முதல் ‘பெல்ட் ஏரியா’ என்கிற 1962 ஆம் ஆண்டு அரசாணையை காரணம் காட்டி, இம்மக்களுக்கு கிட்டத்தட்ட 60 ஆண்டு காலம் பட்டா மறுக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் அரசை வலியுறுத்தி வந்தன.
அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தமிழக அரசின் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வது மற்றும் அதில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் மற்றும் மக்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடந்தது.
அதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் ‘பெல்ட் ஏரியாக்களில்’ ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேர், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், மாவட்ட தலைநகர் பகுதிகளில் 57,084 பேர் என மொத்தம் 86,000 ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் , “முதலமைச்சர் இன்றைக்கு ஏழை மக்களுக்கான நிவாரணத்தில் மிகப்பெரிய புரட்சியை செய்திருக்கிறார். சென்னையில் மட்டும் 29,187 பேர் ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதியில் குடியிருக்கிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் அந்த பட்டா வழங்குவதற்கான பணிகளை 6 மாத காலத்திற்குள் முடித்துக் கொடுக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இந்த பெல்ட் ஏரியா சட்டம் 1962ல் வந்தது. 1962ல் இருந்து 2025 வரை அதன் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது. இன்றைக்கு முதலமைச்சர் மிகத் தெளிவாக ஒரு முடிவெடுத்து 6 மாதத்திற்குள் பட்டா வழங்கவேண்டும் என்று ஆணையிட்டது மட்டுமல்லாமல், மாவட்ட அளவில் ஒரு குழுவும், சென்னையில் மாநில அளவில் ஒரு குழுவும் அமைத்து உடனடியாக அந்த பணிகளை துவங்க உத்தரவிட்டிருக்கிறார்.
86,000 பேர் போக இன்னும் விடுபட்டிருந்து மனுக்கள் வரும் என்று சொன்னால், அதையும் பரிசீலனை செய்யுங்கள் என்று முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். இன்றைக்கு நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுத்த இந்த முடிவு, பெல்ட் ஏரியாவுக்கு அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய முடிவாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், “தமிழக அரசு எடுத்துள்ள இந்த முடிவு விளிம்பு நிலை மக்களின், வயிற்றில் பால் வார்க்கும் முடிவு” என விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் வரவேற்றுள்ளன.