கோலாகலமாக தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி: பதக்கம் வெல்வார்களா தமிழக வீரர்கள்..?
உலக அளவில் கவனம் ஈர்க்கும் விளையாட்டுப் போட்டிகளில் ஒன்று ஒலிம்பிக் போட்டி. அந்த வகையில் 33ஆவது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நாளை ( இந்திய நேரப்படி இரவு 11 மணி அளவில் ) கோலாகலமாகத் தொடங்க உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து முன்னணி வீரர்கள் விளையாடும் நிலையில், இந்தியாவிலிருந்து 113 வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து 11 வீரர்கள் பதக்கம் வெல்லும் கனவுடன் பாரிஸ் பயணித்துள்ளனர். தடகளம், துப்பாக்கிச்சுடுதல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பாய்மர படகுப்போட்டி என 5 வகையான விளையாட்டுகளில் இவர்கள் பங்கேற்க உள்ளனர்.
துப்பாக்கிச் சுடும் பிரிவு
ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக, தமிழ்நாட்டிலிருந்து பிரித்விராஜ் தொண்டைமான் துப்பாக்கிச் சுடும் பிரிவில் விளையாட தேர்வாகியுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கம், உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ட்ரேப் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றதால், ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்வார் என இவர் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.
ஒலிம்பிக் தொடர் டென்னிஸ் களத்தில், தரவரிசை அடிப்படையில் ரோஹன் போபண்ணா தகுதி பெற்ற நிலையில், ஆடவர் இரட்டையர் பிரிவில் அவருடன் இணைந்து விளையாட, தமிழ்நாட்டைச்சேர்ந்த ஸ்ரீராம் பாலாஜி தேர்வாகியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவில், இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்ல உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், ஐந்தாவது முறையாக ஒலிம்பிக்கில் களம் காண்கிறார். தேசியப் போட்டியில் 10 முறை சாம்பியன், ஆசியப் போட்டியில் இந்திய அணிக்கு வெண்கலம் வென்று கொடுத்த சரத் கமல், ஒலிம்பிக்கிலும் பதக்கத்தை எதிர்நோக்கியுள்ளார். சரத் கமலுடன் இணைந்து மாற்று வீரராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சத்யன் ஞானசேகரன் களம் காண்கிறார்.
நேத்ரா குமணனுக்கு கிடைத்துள்ள சிறப்பு
பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழர்களில், பாய்மரப் படகு வீராங்கனை நேத்ரா குமணனும் கவனம் ஈர்த்தவர்களில் ஒருவராக உள்ளார். உலகக் கோப்பை போட்டியில் வெண்கலம் வென்ற நேத்ரா குமணன், தகுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு, பாய்மரப் படகுப் போட்டியில் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.
தடகளத்தை பொறுத்தவரை ஒலிம்பிக் வரலாற்றில் தமிழ்நாட்டிலிருந்து தடகளத்தில் மட்டும் 6 வீரர்கள் தேர்வாகியிருப்பது இதுவே முதல் முறையாகும். 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 5 வீரர்கள் பங்கேற்றதே அதிகபட்சமாக இருந்தது.
400 மீ தொடர் ஓட்டத்திலிருந்து மட்டும் நான்கு வீரர்கள் தமிழ்நாட்டிலிருந்து தேர்வாகியுள்ளனர். ஆடவர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ராஜேஷ் ரமேஷ் மற்றும் சந்தோஷ் குமார் தமிழரசன் தகுதி பெற்றுள்ளனர். உலக தடகள ரிலே போட்டியில் இந்திய ஆடவர் அணி 3 நிமிடம் 3.23 வினாடியில் பந்தய தூரத்தைக் கடந்து, இரண்டாமிடம் பிடித்ததுடன், ஒலிம்பிக் வாய்ப்பையும் உறுதி செய்துள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்ற மற்றொரு தமிழ்நாடு வீரர் ஆரோக்கிய ராஜூ காயம் காரணமாக விலகியதால், அவருக்குப் பதிலாக சந்தோஷ் குமார் தமிழரசன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மகளிர் 400 மீட்டர் தொடர் ஓட்டம்
ஆடவருக்கு நிகராக மகளிர் அணியும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்திற்கு தகுதி பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளது. அந்த வகையில், ஒலிம்பிக் சென்றுள்ள இந்திய மகளிர் அணியில், தமிழ்நாட்டிலிருந்து சுபா வெங்கடேஷன், வித்யா ராமராஜ் இடம் பிடித்துள்ளனர்.
ஓட்டத்தில் இந்த நான்கு வீரர்களை தவிர மும்முறை தாண்டுதல் போட்டியில் பிரவீன் சித்திரவேல் 17.12 மீட்டர் நீளம் தாண்டி தேசிய சாதனையுடன் ஒலிம்பிக் வாய்ப்பையும் உறுதி செய்துள்ளார். இதே போல் நீளம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டிலிருந்து 22 வயதே ஆன ஜெஸ்வின் ஆல்ட்ரின் கடைசி நிமிடத்தில் தரவரிசை அடிப்படையில் ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.
400 மீட்டர் தொடர் ஓட்டம், மும்முறை தாண்டுதல், நீளம் தாண்டுதலில் 6 தமிழ்நாடு வீரர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ள நிலையில், தடகளத்திலும் தமிழக வீரர்கள் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது.