சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ : முடிவுக்கு வந்த டைட்டில் பஞ்சாயத்து… கதைக்களம் என்ன?
‘பராசக்தி’ திரைப்படம் 1952 ஆம் ஆண்டு, கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில், தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் கைவண்ணத்தில் உருவான திரைக்காவியம்.
இத்திரைப்படம் வெளியாகி ஏறக்குறைய 72 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இன்றளவும் அழியாக்காவியமாக நிலைத்து நிற்கிறது. மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும் வந்துவிழுந்த கருணாநிதியின் தீப்பொறி வசனங்களால், அன்றைய நாட்களில் படம் பார்க்க வந்த ரசிகர்களின் மனதில் பகுத்தறிவு தீ பற்றி எரிந்தது என்றே சொல்லலாம்.
மேலும், நடிகர் திலகம் சிவாஜியின் முதல் படமும் ‘பராசக்தி’தான். சிவாஜி கணேசன், தன் சினிமா வாழ்வில் உலக அளவில் உச்சம் தொட்ட நடிகராக இருந்தாலும், குணசேகரன் என்னும் ஒரு மனிதன் கருணாநிதி எழுதிய வசனங்கள் மூலமே உலகமறிந்த மாபெரும் கலைஞன் ஆனார் என்றால் மிகையில்லை.
இதுபோன்ற ஏராளமான பெருமைகளைக் கொண்ட படம் ‘பராசக்தி’. தற்போது அதே பெயரில் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயனின் 25 ஆவது படத்துக்கு ‘பராசக்தி’ என்ற பெயர் சூட்டப்பட்டிருப்பது பரபரப்பைக் கிளப்பி உள்ளது. டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது. படத்தின் டைட்டில் டீசர் வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இணையத்தில் வைரலானது.
எதிர்ப்பு தெரிவித்த சிவாஜி மன்றம்
இந்த நிலையில், அகில இந்திய சிவாஜி மன்றம் தரப்பில் ‘பராசக்தி’ என்ற பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டது.” ‘பராசக்தி’ என்ற தலைப்பு தமிழ் சினிமாவில் மகத்தான வரலாற்று முக்கியத்துவத்தையும் உணர்ச்சிபூர்வமான தொடர்பையும் கொண்டுள்ளது. இந்த படம் நடிகர் சிவாஜி கணேசனின் நடிப்பு திறமைக்கான அடையாளமாகவும் தமிழ் சினிமாவின் மைல்கல்லாகவும் உள்ளது. எனவே, இந்த புதிய படத்துக்கு சூட்டியுள்ள ‘பராசக்தி’ தலைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தாங்கள் தயாரிக்க உள்ள இந்த புதிய ‘பராசக்தி’ படம், பழைய ‘பராசக்தி’ படத்துக்கு எவ்வித மரியாதை குறைவையும் ஏற்படுத்தும் விதமாகவோ அல்லது சிவாஜி ரசிகர்களின் மனம் புண்படும் விதமாகவோ இருக்காது என படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் உறுதி அளித்துள்ளார். இது குறித்து பேட்டி அளித்துள்ள அவர், ” ‘பராசக்தி’ என்ற படத்தின் தலைப்பிற்கு நியாயம் சேர்க்கும் விஷயமாக இப்படம் அமையும். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு 5 பாடல்கள் இசையமைத்துள்ளார். அதில் 2 பாடல்களுக்கான படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்தது. திரைப்படம் சென்னை, புதுச்சேரி மற்றும் சிதம்பரம் ஆகிய பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது. மொத்த படப்பிடிப்பும் ஜூலை மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
கதை என்ன?
1950-60 களில் நடக்கும் கதைக்களத்துடன், தமிழகத்தில் நடந்த இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. கடந்த 1965-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற மொழிப்போரில் உயிர்நீத்த ஒரு கல்லூரி மாணவனின் வாழ்க்கை தான் ‘பராசக்தி’ கதை எனத் தெரியவந்துள்ளது. அந்த மாணவரின் பெயர் இராசேந்திரன். இதில், இராசேந்திரன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதனால் படத்தின் இறுதியில் சிவகார்த்திகேயன் கொல்லப்படும் காட்சி இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.
பட டைட்டிலுக்கு ஏஎவிஎம் ஒப்புதல்
இதனிடையே விஜய் ஆன்டனியும் தன்னுடைய 25 ஆவது படத்தின் தலைப்பை வெளியிட்டிருந்தார். அதில் தமிழ் தலைப்பு ‘சக்தி திருமகன்’ என்றும், தெலுங்கு தலைப்பு ‘பராசக்தி’ என்றும் அந்த போஸ்டரில் குறிப்பிட்டிருந்தார். இதனால் இரண்டு படங்களுக்கும் ஒரே தலைப்பா என்பது போன்ற குழப்பங்களும் ஏற்பட்டது.
இந்த குழப்பத்தை தீர்க்கும் வகையில், தற்போது ‘பராசக்தி’ படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனமே நடிகர் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்துக்கு அந்த டைட்டிலை வைத்துக்கொள்ள அனுமதி வழங்கி உள்ளது.
இது குறித்து ஏவிஎம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ” 73 ஆண்டுகளைத் தாண்டியும் என்றென்றும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் சரித்திரத் திரைப்படம் ‘பராசக்தி’. தமிழ் சினிமாவில் சமூகநீதியை உரக்கப்பேசிய திரைப்படம். அந்த சரித்திரத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘பராசக்தி’ திரைப்படமும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். வருங்கால சந்ததியை ஊக்கப்படுத்தும் திரைப்படமாக இருக்க வேண்டும். இயக்குநர் சுதா கொங்கரா, நடிகர் சிவகார்த்திகேயனின் வெற்றி மணிமகுடத்தில் மற்றொரு வெற்றி இறகைச் சூட்டி அழகுபடுத்த ஏவிஎம் குடும்பம் வாழ்த்துகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனால் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனின் கிராஃப் உச்சத்துக்குச் சென்றது. அடுத்ததாக ‘பராசக்தி’ படமும் சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் மற்றொரு மறக்க முடியாத படைப்பாக வரும் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.