பாகிஸ்தானுடன் அதிகரிக்கும் பதற்றம்… 244 மாவட்டங்களில் போர்க்கால ஒத்திகை!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.
இந்த சூழ்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) நாடு முழுவதும் உள்ள 244 மாவட்டங்களில் மே 7 அன்று போர்க்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சிவில் பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த ஒத்திகைகள், விமானத் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள், மக்கள் வெளியேற்றத் தயார்நிலை, மின்தடை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைச் சோதிக்கும் நோக்கம் கொண்டவையாகும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மே 5 அன்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், ” இந்த ஒத்திகைகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிவில் பாதுகாப்பு பொறிமுறைகளின் தயார்நிலையை மதிப்பிடுவதற்கும் மேம்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்டவை” எனத் தெரிவித்துள்ளார்.
“தற்போதைய புவிசார் அரசியல் சூழலில், புதிய மற்றும் சிக்கலான அச்சுறுத்தல்கள் உருவாகியுள்ளன. எனவே, எப்போதும் உகந்த சிவில் பாதுகாப்பு தயார்நிலையை பராமரிப்பது அவசியம்,” என தீயணைப்பு, சிவில் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு காவல்படை இயக்குநரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்க்கால ஒத்திகை ஏன்?
இந்த ஒத்திகைகளின் முக்கிய நோக்கங்கள் பன்முகத்தன்மை கொண்டவை. விமானத் தாக்குதல் எச்சரிக்கை சைரன்களை இயக்குவது, இந்திய விமானப்படையுடன் (IAF) தொலைபேசி மற்றும் ரேடியோ தொடர்பு இணைப்புகளைச் செயல்படுத்துவது, பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு தாக்குதல் சூழலில் தற்காப்பு முறைகள் குறித்த பயிற்சி அளிப்பது, மின்தடை நடவடிக்கைகளை அமல்படுத்துவது, முக்கிய உள்கட்டமைப்புகளை மறைப்பது, மக்கள் வெளியேற்றத் திட்டங்களை மேம்படுத்துவது, மற்றும் சிவில் பாதுகாப்பு சேவைகளின் செயல்பாட்டைச் சோதிப்பது ஆகியவை இதில் அடங்கும். இதில் வார்டன்கள், தீயணைப்பு, மீட்பு நடவடிக்கைகள், மற்றும் டிப்போ மேலாண்மை ஆகியவையும் மதிப்பிடப்படும்.
முன்னதாக திங்கள்கிழமை, பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங், பிரதமர் மோடியை சந்தித்து, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளுக்கு மத்தியில் இந்தியாவின் தயார்நிலை குறித்து விளக்கினார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்டக் கூட்டங்களை நடத்திய பின்னர், இந்த ஒத்திகைகளுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒத்திகைகள், மாவட்ட ஆட்சியர்கள், சிவில் பாதுகாப்பு காவலர்கள், உள்நாட்டு காவல்படையினர், தேசிய மாணவர் பயிற்சிப் படை (NCC), தேசிய சேவைத் திட்ட (NSS) தன்னார்வலர்கள், மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரை உள்ளடக்கியதாக இருக்கும். 1971 ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பின்னர் இவ்வளவு பெரிய அளவில் நடத்தப்படும் முதல் ஒத்திகையாக இது அமைய உள்ளது. இது நாட்டின் பாதுகாப்பு உறுதியை வெளிப்படுத்துகிறது.
தமிழ்நாட்டில் எங்கெல்லாம் போர் ஒத்திகை?
இந்த போர் ஒத்திகை எங்கெல்லாம் நடைபெறும் என்பது குறித்த விவரங்களை மத்திய உள்துறை அமைசகம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், தமிழகத்தில் சென்னை இடம் பெற்றுள்ளது. சென்னையில் கல்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் இந்த போர் ஒத்திகை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹைதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூரூ (நகர்புறம்), கொச்சின், திருவனந்தபுரம், பாண்டிசேரி உள்ளிட்ட இடங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
முக்கிய நகரங்கள் மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் நடைபெறவுள்ள இந்த ஒத்திகைகள், அவசரகாலத்தில் மக்களை விரைவாக வெளியேற்றுவது, மருத்துவ உதவிகளை வழங்குவது மற்றும் உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பது ஆகியவற்றின் செயல்திறனை உறுதி செய்யும். இந்த முயற்சி, இந்தியாவின் ஒற்றுமையையும், எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் திறனையும் உலகிற்கு எடுத்துக்காட்டும்.
மொத்தத்தில், மே 7-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த ஒத்திகைகள், இந்திய மக்களுக்கு சொல்லப்படும் ஒரு தெளிவான செய்தி என்னவென்றால், அது ” நாடு விழிப்புணர்வுடன், எப்போதும் தயாராக உள்ளது” என்பது தான்!