தமிழகம்: நெல் கொள்முதலில் புதிய உச்சம் … 5 ஆண்டுகளில் இல்லாத சாதனை!

தமிழ்நாட்டில் நெல் பயிரிடும் விவசாயிகள் தங்கள் நெல்லை நேரடியாக வியாபாரிகளிடம் விற்கும்போது ஏற்படும் சிரமங்கள் மற்றும் இடைத்தரகர்களின் தலையீடு போன்றவற்றை தவிர்க்கும் விதமாக, மாநில அரசே நேரடி நெல் கொள்முதல் மையங்களைத் ( Direct Purchase Centres-DPC) திறந்து, அவற்றின் மூலம் நியாயமான விலையில் நெல்லை கொள்முதல் செய்து வருகின்றன.
இந்த நேரடி கொள்முதல் மையம் சுமார் 33 சென்ட் பரப்பளவு மற்றும் 100 மெட்ரிக் சேமிப்பு வசதி, உலர்த்தும் தளம், வின்னோவிங் மெஷின், மின்னணு எடை அளவீடு மற்றும் ஈரப்பதம் மீட்டர் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். பொதுவாக மாநிலம் முழுவதும் மற்றும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில், நெல் சாகுபடியின் அளவைப் பொறுத்து, நேரடி கொள்முதல் மையங்கள் ஒவ்வொரு ஆண்டும் திறக்கப்படுகின்றன.
அந்த வகையில், கடந்த 40 மாதங்களில் மாநிலம் முழுவதும் நெல் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் மொத்தம் 130 நேரடி கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 100 மையங்களில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாநிலம் முழுவதும் இதுபோன்ற 230 மையங்கள் அமைப்பதற்காக 100 கோடி ரூபாயை முன்னதாக தமிழக அரசு அனுமதித்திருந்தது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உத்தரவின் பேரில், 358 கோடி ரூபாய் மதிப்பில் 259 நெல் சேமிப்பு கிடங்குகளை கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில், மாநிலம் முழுவதும் 213 கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் கடந்த 2002-2003 கொள்முதல் பருவத்திலிருந்து அக்டோபர் முதல் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில்,
விவசாயிகளின் நலன் கருதி, அதனை செப்டம்பர் 1 ஆம் தேதி முதலே மேற்கொள்ள முதலமைச்சர் அறிவுறுத்தியதன் பேரில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நெல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை தமிழக அரசு உயர்த்தியதன் காரணமாக சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2450/- என்ற விலையிலும், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2405/- என்ற விலையிலும் 1.9.2024 முதல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
நெல் கொள்முதலில் புதிய உச்சம்

01.09.2024 முதல் 04.02.2025 வரை, தமிழ்நாடு முழுவதும் 2,444 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுச் செயல்படுத்தி, 1,44,248 விவசாயிகளிடமிருந்து 10,41,583 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை ரூ.2,247.52 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் மின்னணு பணப்பரிமாற்ற முறையில் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பிப்ரவரி முதல் வாரத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் அளவைவிட, இந்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு 4.2.2024 வரை 7,42,335 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டில் 4.2.2025 வரை 10,41,583 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 2,99,248 டன் அதிகமாகும்.
இந்த நிலையில், நெல் விவசாயிகள் தங்கள் நெல்லினைக் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வந்து விற்றுப் பயனடையுமாறு கேட்டுக்கொள்வதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கேட்டுக்கொண்டுள்ளார்.