ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் ‘ரியாக்சன்’ என்ன?!

மே 7 அதிகாலை, இந்திய ஆயுதப்படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) ஒன்பது பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தன. ஏப்ரல் 22 ல் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, 25 நிமிடங்களில் 24 ஏவுகணைகளைப் பயன்படுத்தி 70 பயங்கரவாதிகளை கொன்ற இந்த நடவடிக்கை, பாகிஸ்தானை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்தியாவின் இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் சர்வதேச நாடுகளிடம் புகார் தெரிவித்துள்ளது. அத்துடன், பதிலடியாக, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் (LoC) துப்பாக்கிச் சூடு மற்றும் பீரங்கி தாக்குதல்களை தொடங்கியது. பூஞ்ச்-ரஜோரி பகுதியில் மூன்று இந்தியர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ஆயுதப்படைகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு, மேலும் பதிலடிகளுக்கு தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்தியாவின் நடவடிக்கையை “போர் நடவடிக்கை” எனக் கண்டித்து, “பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்கும் உரிமை கொண்டுள்ளது” என எச்சரித்தார்.
தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்
அத்துடன் தேசிய பாதுகாப்பு கவுன்சிலை அவசரமாக கூட்டி விவாதித்த ஷெரீப், பின்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்,”இந்தியாவின் சட்டவிரோத நடவடிக்கைகளின் தீவிரத்தை உணர்ந்து, சர்வதேச விதிமுறைகள் மற்றும் சட்டங்களை வெளிப்படையாக மீறியதற்காக அதை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்” என்று சர்வதேச சமூகங்களுக்கு ஷெபாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்தார்.
மேலும், “பாகிஸ்தான் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் அமைதிக்கு உறுதிபூண்டுள்ளது, மேலும் அதன் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை ஒருபோதும் மீற அனுமதிக்காது. அதன் பெருமைமிக்க மக்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய அனுமதிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது.
இந்தியாவின் கொடிய தாக்குதல்களை பாகிஸ்தான் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது. அவற்றை போர் நடவடிக்கைகள் என்று அறிவிக்கிறது.

மேலும், இந்திய ராணுவத்தால் அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பொதுமக்களை வேண்டுமென்றே குறிவைப்பது ஒரு கொடூரமான மற்றும் வெட்கக்கேடான குற்றமாகும், இது மனித நடத்தையின் அனைத்து
விதிமுறைகளையும் சர்வதேச சட்டத்தின் விதிகளையும் மீறுகிறது” என்றும் அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.
“பதற்றத்தைத் தணிக்க தயார்”
இதனிடையே, ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப், “கடந்த இரண்டு வாரங்களாக நாங்கள் இந்தியாவுக்கு எதிராக எந்த விரோத நடவடிக்கையையும் தொடங்க மாட்டோம் என்று தொடர்ந்து கூறி வருகிறோம். இருப்பினும், நாங்கள் தாக்கப்பட்டால், நாங்கள் பதிலடி கொடுப்போம். இந்தியா பின்வாங்குவதை தேர்வுசெய்தால், இந்தப் பதற்றத்தைத் தணிக்க நாங்கள் முழுமையாகத் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
இராஜதந்திர முயற்சிகள்
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், இந்தியாவின் தாக்குதல்களை “இறையாண்மை மீறல்” எனக் கண்டித்து, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் புகார் அளிக்கவுள்ளதாக அறிவித்தது. உள்நாட்டு ஊடகங்கள், 26 பேர் கொல்லப்பட்டதாகவும், 46 பேர் காயமடைந்ததாகவும் கூறின. இதில் பஹவல்பூர் மசூதி தாக்குதலில் 13 பேர், உட்பட இரு குழந்தைகள், கொல்லப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆபரேஷன் சிந்தூர், இந்தியாவின் ராணுவ திறனை வெளிப்படுத்தினாலும், பாகிஸ்தானின் கடுமையான எதிர்வினைகள் பதற்றத்தை உயர்த்தியுள்ளன. பாகிஸ்தானுக்கு சீனாவின் ஆதரவு இருந்தாலும், அமெரிக்கா, ரஷ்யா, மற்றும் ஐநா அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ளன.