ஆபரேஷன் சிந்தூர்: அதிரடி காட்டிய இந்தியா… அழிக்கப்பட்ட பாக். பயங்கரவாத முகாம்கள்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, புதன்கிழமை அதிகாலையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) பகுதிகளில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளை குறிவைத்து இந்தியா ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.
‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை, விமானப்படை, கடற்படை மற்றும் தரைப்படை ஆகிய முப்படைகளின் ஒருங்கிணைந்த பயன்பாட்டை உள்ளடக்கியதாக இருந்தது. 2019-இல் நடந்த பாலகோட் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மேற்கொண்ட மிகப் பரந்த எல்லை தாண்டிய துல்லியத் தாக்குதலாக இது கருதப்படுகிறது.
நடவடிக்கையின் பின்னணி
பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள், ஒரு இந்திய கடற்படை அதிகாரி மற்றும் ஒரு நேபாளி குடிமகன் உட்பட உயிரிழந்தனர். தாக்குதலுக்கு காரணமானவர்கள், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். இந்த அமைப்புக்கு பாகிஸ்தான் அரசாங்கத்திடமிருந்து தளவாட மற்றும் நிதி ஆதரவு கிடைப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள்
இந்த நிலையில், இன்று நடந்த தாக்குதல் நடவடிக்கையில் இந்தியா உயர் துல்லிய மற்றும் நீண்ட தூர தாக்குதல் ஆயுதங்களைப் பயன்படுத்தியது. இவற்றில் SCALP க்ரூஸ் ஏவுகணை, HAMMER துல்லிய குண்டு மற்றும் லோய்ட்டரிங் முனிஷன்ஸ் (கமிகாஸி ட்ரோன்கள்) ஆகியவை முக்கியமானவை.
SCALP (ஸ்டார்ம் ஷேடோ)
SCALP அல்லது ஸ்டார்ம் ஷேடோ, நீண்ட தூர, விமானத்தில் இருந்து ஏவப்படும் க்ரூஸ் ஏவுகணையாகும். இது 250 கிலோமீட்டருக்கு மேல் சென்று ஆழமான தாக்குதல்களை மேற்கொள்ளும் திறன் கொண்டது. இந்த ஏவுகணைகள், பயங்கரவாத முகாம்களை துல்லியமாக அழிக்க பயன்படுத்தப்பட்டன.

HAMMER (Highly Agile Modular Munition Extended Range):
HAMMER என்பது ஒரு துல்லியமான, தொலைதூரத்தில் இருந்து தாக்கும் ஸ்மார்ட் குண்டு ஆகும். இது வலுவூட்டப்பட்ட பதுங்கு குழிகள், பல அடுக்கு கட்டடங்கள் போன்ற கடினமான இலக்குகளை அழிக்க வடிவமைக்கப்பட்டது. 50-70 கிலோமீட்டர் தூரத்தில் இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட இந்த ஆயுதம், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) ஆகியவற்றின் பயிற்சி மற்றும் தளவாட மையங்களை அழிக்க பயன்படுத்தப்பட்டது.
லோய்ட்டரிங் முனிஷன்ஸ்:
“கமிகாஸி ட்ரோன்கள்” என்று அழைக்கப்படும் இவை, கண்காணிப்பு, இலக்கு அடையாளம் காணல் மற்றும் இறுதி தாக்குதல் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டன. இந்த ட்ரோன்கள், இலக்கு பகுதிகளுக்கு மேலே சுற்றி, தானியங்கி அல்லது தொலைதூர கட்டுப்பாட்டில் இலக்குகளை அடையாளம் கண்டு அழிக்கின்றன.
தாக்கப்பட்ட 9 முக்கிய இலக்குகள்
ஆபரேஷன் சிந்தூரில் ஒன்பது தனித்தனி இடங்கள் தாக்கப்பட்டன. இவற்றில் நான்கு பாகிஸ்தான் மைய நிலப்பகுதியிலும், ஐந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் அமைந்திருந்தன. இந்த தாக்குதலின்போது, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் எதுவும் இலக்காகக் கொள்ளப்படவில்லை என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தாக்கப்பட்ட அனைத்து இடங்களும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத குழுக்களின் செயல்பாட்டு மையங்களாக பயன்படுத்தப்பட்டவை என உறுதிப்படுத்தப்பட்டன.

மர்காஸ் சுப்ஹான் அல்லாஹ், பஹவல்பூர் (JeM)
ஜெய்ஷ்-இ-முகமதுவின் கருத்தியல் மற்றும் செயல்பாட்டு தலைமையகமாக கருதப்படும் இந்த இடம், மூத்த தலைவர்களின் பயிற்சி அமர்வுகளுக்கு பயன்படுத்தப்பட்டது.
மர்காஸ் தைபா, முரிட்கே (LeT)
200 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வளாகம், லஷ்கர்-இ-தொய்பாவால் கருத்தியல் பரப்புதல், தளவாடங்கள் மற்றும் திட்டமிடலுக்கு பயன்படுத்தப்பட்டது. இது தாக்கப்பட்ட மிகவும் வலுவூட்டப்பட்ட இலக்குகளில் ஒன்றாகும்.
மர்காஸ் அப்பாஸ், கோட்லி (JeM)
இந்த முகாம், தற்கொலை குண்டுதாரிகளின் பயிற்சி மற்றும் POK-ஐ அடிப்படையாகக் கொண்ட பயங்கரவாதிகளுக்கு ஆயுத விநியோக மையமாக செயல்பட்டது.
சையத்னா பிலால், ஷவை நல்லா முகாம்கள், முசாபராபாத் (JeM,LeT)இவை ஊடுருவல் முனையங்களாகவும், பயிற்சிகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டன.
மர்காஸ் அஹ்லே ஹதீத், பர்னாலா (LeT)
ஆதரவு வசதி மற்றும் பிராந்திய தளவாட மையமாக செயல்பட்டது.
சர்ஜால், தெஹ்ரா கலான் (JeM)
புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கான முன்-ஊடுருவல் முகாமாக பயன்படுத்தப்பட்டது.
மெஹ்மூனா ஜோயா, சியால்கோட் (HM)
ஹிஸ்புல் முஜாஹிதீனின் குறைவாக அறியப்பட்ட பயிற்சி மையமாக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்த குழுவின் செல்வாக்கு குறைந்தாலும் இன்னும் செயல்பட்டு வந்தது.
நடவடிக்கையின் முக்கியத்துவம்
இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர், இந்தியாவின் பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை உலகுக்கு வெளிப்படுத்தி உள்ளது. உயர் தொழில்நுட்ப ஆயுதங்களைப் பயன்படுத்தி, எல்லை தாண்டிய துல்லியத் தாக்குதல்களை மேற்கொள்ளும் இந்தியாவின் திறனை இது பறைசாற்றி உள்ளது. பாகிஸ்தானின் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்பதையும் இந்த நடவடிக்கை மூலம் இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.