இந்தியா vs பாகிஸ்தான்: ராணுவ பலம் என்ன..? வீரர்கள், ஆயுதங்கள் எண்ணிக்கை முழு விவரம்!

காஷ்மீரில் கடந்த ஏப்ரல் 22 ல் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய படைகள் இன்று ( மே 7) நடத்திய இந்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் நடவடிக்கை மூலம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 25 நிமிடங்களில் 24 ஏவுகணைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்தியா நடத்திய இந்த தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். மேலும், ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 9 பேர் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதனால் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் இருநாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் பதிலடி தாக்குதல்கள் மற்றும் இராஜதந்திர மோதல்கள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ பலம் என்ன, ஆயுதங்கள் விவரம், பட்ஜெட் உள்ளிட்ட விவரங்கள் தெரியவந்துள்ளன. இதன்படி, 2025-ஆம் ஆண்டின் உலகளாவிய ராணுவ பலம் குறியீட்டில் (Global Firepower Index) இந்தியா நான்காவது இடத்திலும், பாகிஸ்தான் 12-வது இடத்திலும் உள்ளன.
இந்தியாவின் ராணுவ பலம், பட்ஜெட், ஆயுதங்கள் மற்றும் மக்கள் தொகை ஆகியவை, பாகிஸ்தானை விட கணிசமாக மேம்பட்டவை. இரு நாடுகளின் ராணுவ திறன்கள் குறித்த விரிவான அலசல் இங்கே…
வீரர்கள் எண்ணிக்கை மற்றும் பட்ஜெட்

இந்தியாவில் சுமார் 14.6 லட்சம் செயலில் உள்ள ராணுவ வீரர்கள் உள்ளனர், மேலும் 11.5 லட்சம் இருப்பு வீரர்கள் உள்ளனர். இதற்கு மாறாக, பாகிஸ்தானில் 6.54 லட்சம் செயலில் உள்ள வீரர்களும், 5 லட்சம் துணை ராணுவப் படையினரும் உள்ளனர். இந்தியாவின் மொத்த ராணுவ பலம், 25 லட்சத்துக்கும் அதிகமான படை வீரர்களுடன், பாகிஸ்தானை விட அதிகமாக உள்ளது.
2025-26 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் சுமார் 79 பில்லியன் டாலர்கள் (6.81 லட்சம் கோடி ரூபாய்). இது முந்தைய ஆண்டை விட 9.5% அதிகரிப்பு. ஆனால், பாகிஸ்தானின் பாதுகாப்பு பட்ஜெட் 7.6 பில்லியன் டாலர்கள் (2.28 லட்சம் கோடி ரூபாய்) மட்டுமே. இந்த பெரிய பட்ஜெட் வித்தியாசம், இந்தியாவுக்கு ஆயுதங்கள் வாங்குதல், நவீனமயமாக்கல் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் பெரும் சாதகமானதாக உள்ளது.
தரைப்படை: டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள்
இந்தியாவின் தரைப்படை 4,200-க்கும் மேற்பட்ட டாங்கிகளைக் கொண்டுள்ளது. இதில் T-90 பீஷ்மா மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அர்ஜுன் டாங்கிகள் அடங்கும். பாகிஸ்தானிடம் 2,627 டாங்கிகள் மட்டுமே உள்ளன. இந்தியாவின் 1,48,594 கவச வாகனங்கள், பாகிஸ்தானின் எண்ணிக்கையை மூன்று மடங்கு தாண்டுகின்றன. இது தரைப் போரில் இந்தியாவின் கை ஓங்கி இருப்பதைக் காட்டுகிறது.

விமானப்படை: போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள்
இந்திய விமானப்படை 2,229 விமானங்களைக் கொண்டுள்ளது. இதில் 513 போர் விமானங்கள் (ரஃபேல், சு-30 MKI, தேஜஸ் – Rafale, Su-30MKI,Tejas) அடங்கும். பாகிஸ்தானிடம் 1,399 விமானங்கள் மற்றும் 328 போர் விமானங்கள் மட்டுமே உள்ளன. இது எண்ணிக்கை மற்றும் திறனில் பின்தங்கியுள்ளதைக் காட்டுகிறது. இந்தியாவிடம் 899 ஹெலிகாப்டர்களும், 6 வானிலிருந்து எரிபொருள் நிரப்பும் விமானங்களும் உள்ளன. பாகிஸ்தானிடம் 373 ஹெலிகாப்டர்களும், 4 வானிலிருந்து எரிபொருள் நிரப்பும் விமானங்களும் உள்ளன.
இருப்பினும், பாகிஸ்தானிடம் 565 பயிற்சி விமானங்கள் உள்ளன. இது, இந்தியாவின் 351-ஐ விட அதிகம். இது அவர்களின் பயிற்சி திறனை மேம்படுத்துகிறது. பாகிஸ்தான் JF-17 தண்டர் மற்றும் F-16 போர் விமானங்களை இயக்குகிறது, ஆனால், இந்தியாவின் விமானப்படை மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் முன்னிலை வகிக்கிறது.

கடற்படை: விமானம் தாங்கி கப்பல்கள், நீர்மூழ்கிகள், அழிப்பு கப்பல்கள்
இந்திய கடற்படை 293 கப்பல்களைக் கொண்டு, உலகளவில் ஆறாவது இடத்தில் உள்ளது. இதில், இரண்டு விமானம் தாங்கி கப்பல்கள் (INS விக்ரமாதித்யா மற்றும் INS விக்ராந்த்), 13 அழிப்பு கப்பல்கள், 18 நீர்மூழ்கிகள் ஆகியவை அடங்கும். இந்த கப்பல்கள், இந்தியாவை பிராந்திய எல்லைகளுக்கு அப்பால் ஆற்றலை பரப்பும் “நீலநீர் கடற்படை” (Blue-Water Navy) ஆக தகுதிப்படுத்துகின்றன.
பாகிஸ்தானின் கடற்படையோ 121 கப்பல்களை மட்டுமே கொண்டுள்ளது. இதில், விமானம் தாங்கி கப்பல்கள் அல்லது அழிப்பு கப்பல்கள் இல்லை. 8 நீர்மூழ்கிகள் மட்டுமே உள்ளன. இது, அரேபிய கடலில் மட்டும் செயல்படும் “பசுமைநீர் கடற்படை” (Green-Water Navy) ஆக வகைப்படுத்தப்படுகிறது. அதே சமயம், இது கரையோர பாதுகாப்புக்கு மட்டுமே பொருத்தமானது.
அணு ஆயுதங்கள், ஏவுகணைகள்: அக்னி vs ஷாஹீன்
இரு நாடுகளும் அணு ஆயுதங்கள் மற்றும் அவற்றை எடுத்துச் செல்லும் ஏவுகணைகளை வைத்துள்ளன. இந்தியாவின் அக்னி-V ஏவுகணை 5,200 கிமீ தொலைவுக்கு மேல் செல்லும் திறன் கொண்டது. மேலும் அக்னி-VI-இன் மேம்பாடு, பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எதிராக இந்தியாவின் தடுப்பு ஆற்றலை வலுப்படுத்துகிறது.

பாகிஸ்தானின் ஷாஹீன்-III ஏவுகணை 2,750 கிமீ தொலைவு வரை செல்லும். சீனா மற்றும் பெலாரஸின் தொழில்நுட்ப உதவியுடன், இதன் தொலைவு 3,000 கிமீ-க்கு மேல் நீட்டிக்கப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளும் சுமார் 170 அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக Arms Control Association தெரிவிக்கிறது.
மக்கள் தொகை நன்மை
இந்தியாவில் ஆண்டுதோறும் 2.4 கோடி பேர் ராணுவ வயதை எட்டுகின்றனர். பாகிஸ்தானில் இது 48 லட்சம் மட்டுமே. இந்த இளைஞர் தொகை, இந்தியாவுக்கு நீண்டகால ஆட்சேர்ப்பு திறனை அளிக்கிறது. மேலும், இந்தியாவின் 25 லட்சம் துணை ராணுவப் படையினர், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் எல்லை மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
ஆயுத இறக்குமதி மற்றும் சப்ளையர்கள்
இந்தியாவின் ஆயுத இறக்குமதிகளில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை அதற்கு அடுத்த இடங்களில் உள்ளன. DRDO மற்றும் HAL போன்ற அமைப்புகள் மூலம் உள்நாட்டு ஆயுத உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான், அமெரிக்காவின் முக்கிய ‘நேட்டோ’ அல்லாத நட்பு நாடாக (MNNA) இருந்தாலும், சீனாவிடமிருந்து பெரும்பாலான ஆயுதங்களைப் பெறுகிறது. மேலும் துருக்கி, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவிலிருந்தும் ஆயுதங்களை இறக்குமதி செய்கிறது. இரு நாடுகளும் உள்நாட்டு பாதுகாப்பு அம்சங்களை விரிவாக்கி வருகின்றன.
நடப்பு நிலைமை என்ன?
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இரு நாடுகளும் உயர் எச்சரிக்கை நிலையில் உள்ளன. இராஜதந்திர உறவுகள் மோசமடைந்துள்ளன. இந்திய அதிகாரிகள், எந்தவொரு ஆத்திரமூட்டும் நடவடிக்கைக்கும், இந்தியா கட்டுப்படுத்தப்பட்ட , ஆனால் உறுதியான பதிலடியை கொடுக்கும் என தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான், தங்கள் இறையாண்மைக்கு சவால் விடப்பட்டால், பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என எச்சரித்துள்ளது. இந்த நிலையில், சர்வதேச சமூகம், ஐநா மற்றும் மேற்கத்திய வல்லரசு நாடுகள் , இரு தரப்பையும் ராணுவ மோதல் நடவடிக்கைகளை தவிர்த்து, பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குமாறு வலியுறுத்தி வருகின்றன.
இருப்பினும், நிலைமை இன்னும் பதற்றமாகவே உள்ளது.