‘ஆபரேஷன் சிந்தூர்’: 25 நிமிடங்கள், 24 ஏவுகணை தாக்குதல்கள், பலியான 70 பயங்கரவாதிகள்!

ப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய முப்படைகள் இணைந்து மே7 , புதன்கிழமை அன்று நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் நடவடிக்கை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோஃபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் விரிவாக விளக்கி உள்ளனர்.

வெறும் 25 நிமிடங்களில், இந்தியா 24 ஏவுகணைகளை ஏவி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை தாக்கி, 70 பயங்கரவாதிகளை கொன்றது.

மே 7, அதிகாலை 1.05 மணி முதல் 1.30 மணி வரை நடந்த இந்த தாக்குதல்கள், இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையால் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டன.

இது தொடர்பாக டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோஃபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் விரிவாக விளக்கினர். இந்த நடவடிக்கை, பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு “கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் சமநிலையான” பதிலடி எனத் தெரிவித்தனர்.

கர்னல் சோஃபியா குரேஷி, இந்த நடவடிக்கை ஒரு புதிய உத்தி எனக் குறிப்பிட்டதோடு, “கடந்த மூன்று தசாப்தங்களாக பாகிஸ்தான், தனது நிலப்பரப்பிலும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும்ஆட்சேர்ப்பு மையங்கள், பயிற்சி மையங்கள் மற்றும் தாக்குதல் தளங்கள் உள்ளிட்ட பயங்கரவாத உள்கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. இந்த முகாம்களை அழித்து, எதிர்கால தாக்குதல்களை தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம்,” என்று கூறினார்.

வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “எங்களது உளவுத்துறை தகவல்கள், இந்தியாவுக்கு எதிராக மேலும் தாக்குதல்கள் திட்டமிடப்படுவதாக காட்டின. அதனால், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்கவும், தவிர்க்கவும் இந்தியா தனது உரிமையைப் பயன்படுத்தி இன்று அதிகாலை பதிலடி கொடுத்தது. எங்கள் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டவை, பதற்றத்தை அதிகரிக்காதவை, சமநிலையானவை மற்றும் பொறுப்பானவை. இவை பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அழிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தின” என்றார்.

தாக்குதல்கள் நடத்தப்பட்ட இடங்கள்

ஏவுகணை தாக்குதல்கள் முசாபராபாத், கோட்லி, பஹவல்பூர், ராவல்கோட், சக்ஸ்வாரி, பிம்பர், நீலம் பள்ளத்தாக்கு, ஜீலம் மற்றும் சக்வால் ஆகிய இடங்களில் உள்ள முகாம்களை குறிவைத்தன. இந்த இடங்களில் பயங்கரவாத முகாம்கள் இருப்பதாக உளவுத்துறை நீண்ட காலமாக சந்தேகித்து வந்தது. இவை இந்தியாவில் பல தாக்குதல்களை நடத்திய லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) ஆகிய பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடையவை.

தாக்கப்பட்ட ஒன்பது இடங்களில், ஐந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் ( POK) நான்கு பாகிஸ்தான் மைய நிலப்பகுதியிலும் இருந்தன. பஹவல்பூர், JeM-இன் முக்கிய தளமாக அறியப்படுகிறது. முசாபராபாத் மற்றும் பிம்பர் ஆகியவை காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்கான தளவாட மற்றும் போக்குவரத்து முனையங்களாக இந்திய பாதுகாப்பு அமைப்புகளால் அடையாளம் காணப்பட்டிருந்தன.

அனைத்து தாக்குதல்களும் தங்கள் இலக்குகளை துல்லியமாக சென்றடைந்தன. ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாத குழுக்களின் கட்டளை மையங்கள், பயிற்சி முகாம்கள், ஆயுத கிடங்குகள் மற்றும் தயாரிப்பு இடங்கள் அழிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கை பரந்த அளவில் இருந்தாலும், பாகிஸ்தான் ராணுவ நிலைகள் எதுவும் இலக்காக்கப்படவில்லை.

தாக்குதல் நடந்தது எப்படி?

70-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்; மேலும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தரையில் இருந்தும், விமானத்தில் இருந்தும் ஏவப்பட்ட ஏவுகணைகள் இந்த தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டன. கண்காணிப்பு ட்ரோன்கள் மூலம் நிகழ்நேரத்தில் கண்காணிக்கப்பட்டதால், இலக்குகள் அழிக்கப்பட்டதை உறுதிப்படுத்த முடிந்தது.

லேசர் வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள் மற்றும் செயற்கைக்கோள் வழிகாட்டப்பட்ட கிளைடு குண்டுகள் உள்ளிட்ட துல்லியமான ஆயுதங்கள், தாக்குதல்களின் துல்லியத்தை உறுதி செய்யவும், தேவையற்ற பாதிப்புகளை தவிர்க்கவும் பயன்படுத்தப்பட்டன. பல போர்க்கருவிகள் ஒரே நேரத்தில் தாக்குவதற்கு ஏற்ப, ஒருங்கிணைந்த வடிவத்தில் ஏவுகணைகள் தரை மற்றும் விமான தளங்களில் இருந்து ஏவப்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

மொத்தத்தில் ஆபரேஷன் சிந்தூர், இந்திய ஆயுதப்படைகளின் திறனையும், துல்லியமான தாக்குதல் ஆற்றலையும் உலகிற்கு உணர்த்தி உள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு நீதி வழங்குவதற்காகவும், எதிர்கால தாக்குதல்களை தடுப்பதற்காகவும் இந்தியா இந்த பதிலடியை கொடுத்திருப்பதை உலக நாடுகளும் உணர்ந்துள்ளன என்றே சொல்ல வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

current events in israel. Birthday party catering. Global tributes pour in for pope francis.