ஊட்டி துணைவேந்தர்கள் மாநாடு: ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கோவி.செழியன் பதிலடி!

“ஊட்டி துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என அரசு பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்” எனத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ” ‘துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என அரசு பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்’ எனச் சொல்லியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதற்கு முன்பு ஆளுநர் ரவி கூட்டிய துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்ற துணை வேந்தர்கள் இப்போது ஏன் பங்கேற்கவில்லை? இந்தக் கேள்விக்குப் பட்டம் படித்து மேதாவியாக இருக்க வேண்டியதில்லை.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2-ஆவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காததால், அரசியல் சாசனத்தின் 142-ஆவது பிரிவைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்குக் காலக்கெடு நிர்ணயித்த நீதிபதிகள், ஆளுநரால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்தனர்.

இந்தத் தீர்ப்புக்கு பிறகுதான் தமிழ்நாடு அரசோடு மல்லுக்கட்ட வேண்டும் என்ற ஆத்திரத்தில் ஆளுநர் ரவி துணை வேந்தர்கள் மாநாட்டைக் கூட்டியிருக்கிறார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அறிந்து மாநாட்டைத் துணை வேந்தர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். இதற்கு எப்படி மாநில அரசு பொறுப்பாகும்?

‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு போட்ட வழக்கு ராஜ்பவனைத் தாண்டி ராஷ்டிரபதி பவன் வரை பதம் பார்த்துவிட்டதே!’ என அடிவயிறு எரிந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு ஆளுநர் ரவி கிடப்பில் போட்டு வைத்த மசோதாக்களால்தான் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்தத் தீர்ப்பை விமர்சிக்கிறார் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர். இவர் மேற்கு வங்க ஆளுநராக இருந்த போது முதல்வர் மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக நடத்திய அடாவடிகளை இந்த நாடு பார்த்தது. அவர் வழியொற்றி நடக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டிய துணை வேந்தர்கள் மாநாட்டில் ஜெகதீப் தன்கர் கலந்து கொள்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

‘மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட நீதிபதி மதன் மோகன் பூஞ்சி கமிஷன் அறிக்கையின் படி, அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது. ஆனால், மன்மோகன் சிங் அரசோ குஜராத்தில் அரசியல்வாதிகளை மட்டுமல்ல; மாற்றுக் கருத்துகளைக் கொண்ட அரசியல்வாதிகளையும் ஆளுநராக நியமிக்கிறது’ எனச் சொன்னவர் யார் தெரியுமா? குஜராத் முதல்வராக இருந்த மோடிதான்!

மோடி பிரதமர் ஆன பிறகு பாஜக-வுக்குப் பிடிக்காத, அவர்களை எதிர்க்கும் மாநில அரசுகளை ஆளுநர்கள் மூலம்தான் குடைச்சலைக் கொடுத்து கொண்டிருக்கிறார். அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது எனச் சொன்ன மோடியின் அரசுதான், ஆளுநர்களை வைத்து அரசியல் செய்கிறது. பா.ஜ.க-வைச் சேர்ந்த அரசியல்வாதிகளைத்தான் ஆளுநர்களாக மோடி நியமித்தார். மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருந்தபோதுதான் சசிகலாவை முதலமைச்சர் பதவி ஏற்கவிடாமல் எடப்பாடி பழனிசாமிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பன்னீர்செல்வத்தையும் பழனிசாமியையும் ஒன்றாகக் கைகோத்து இணைத்து வைத்தார். பன்வாரிலால் புரோகித்தையும் ஆர்.என்.ரவியையும் ஆளுநர்களாக நியமித்து தமிழக அரசுக்குக் குடைச்சலைக் கொடுத்தார்கள்.

மிரட்டல் அரசியல் எல்லாம் பாஜக-வின் டி.என்.ஏ-வில்தான் ஊறிக் கிடக்கிறது. மிரட்டுவது உங்கள் டிஎன்ஏ-வில் இருக்கலாம்; துணிந்து மாநில உரிமைகளுக்காக எதிர்த்து நிற்பதுதான் எங்கள் டிஎன்ஏ-வில் இருக்கிறது ” எனக் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ip cam / cctv 解決方案. masterchef junior premiere sneak peek. Ethical compliance pharmaguidelines.