நெருங்கும் பள்ளி விடுமுறை… இந்த ஆண்டு உதகை கோடை விழா எப்போது?

தமிழ்நாட்டில் தற்போது 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றன. அடுத்ததாக 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது.
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28, 2025 அன்று தொடங்கி ஏப்ரல் 15 அன்று முடிவடைகிறது. 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 9 முதல் 24, வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் முடிந்தவுடன், ஏப்ரல் இறுதியில் கோடை விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிக்க, பலரும் மலைப்பிரதேசங்களை நோக்கி பயணம் செல்ல திட்டமிடுவது வழக்கம். அந்த வகையில், “மலை ராணி” என அழைக்கப்படும் உதகையில் நடைபெறும் கோடை விழா, சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரக்கூடியதாக திகழ்கிறது.
இந்நிலையில், இவ்வாண்டு உதகை கோடை விழா எப்போது நடைபெறும் என்பது குறித்த எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அது குறித்த அறிவிப்பை நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீலகிரி கோடை விழா இவ்வாண்டு மே மாதம் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. விழாவின் தொடக்க நிகழ்வாக, மே 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடைபெறும். அதைத் தொடர்ந்து, மே 9, 10, 11 ஆகிய தேதிகளில் கூடலூரில் வாசனைத் திரவியப் பொருட்கள் கண்காட்சி நடத்தப்படும்.

விழாவின் முக்கிய அம்சமான மலர் கண்காட்சி, உதகையில் மே 16 முதல் 21 வரை ஆறு நாட்கள் நடைபெறும்” என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பு, சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நடைபெறும் உதகை கோடை விழா, பூக்கள், பழங்கள், காய்கறிகள், மசாலாப் பொருட்கள் ஆகியவற்றின் கண்காட்சிகளால் பிரசித்தி பெற்றது. உதகையின் அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சி, 150-க்கும் மேற்பட்ட பூ வகைகளுடன் சுமார் 15,000 பூச்செடிகளை உள்ளடக்கிய ஒரு கண்கவர் நிகழ்வாகும். இது தவிர, குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சியும், ஓடிசியில் படகுப் போட்டிகளும் நடைபெறுவது வழக்கம். இவை அனைத்தும், நீலகிரியின் இயற்கை அழகையும், பண்பாட்டையும் பறைசாற்றும் வகையில் அமைகின்றன.
அந்த வகையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பம் தலைவிரித்தாடும் சமயத்தில், உதகையின் குளிர்ந்த சீதோஷ்ணம் மக்களை வெகுவாக ஈர்க்கிறது என்றே சொல்ல வேண்டும்.
இந்த நிலையில், “இவ்வாண்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக, ஆன்லைன் முன்பதிவு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் மேம்படுத்தப்படும். உள்ளூர் விவசாயிகள் மற்றும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கூடுதல் நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளன” என மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புகள், பள்ளி விடுமுறையை முன்னிட்டு உதகையை நோக்கி பயணம் திட்டமிடும் குடும்பங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். எனவே, பள்ளித் தேர்வுகள் முடிந்தவுடன், உதகையின் இயற்கை அழகையும், கோடை விழாவின் பிரம்மாண்டத்தையும் அனுபவிக்க திட்டமிடுங்கள்!